பிண்ணணிப் பாடகர் ஜேசுதாஸ் சினிமாவில் பாட ஆரம்பித்து 50 வருடங்களாகிவிட்டது. 1964ல் முதன்முதலில் பாட ஆரம்பித்த அவர் ஆயிரக்கணக்கில் பாடல்கள் பாடிவிட்டார். அவரது குரலுக்கு மலையாளம், தமிழ், தெலுங்கு என்று எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் உண்டு.
ஜேசுதாஸின் வெற்றிக்குக் காரணம் கேட்டபோது தனது தந்தை தந்த சுதந்திரமே என்கிறார் ஜேசுதாஸ். ஜேசுதாஸுக்கு நான்கு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி. இருந்த போதிலும் ஜேசுதாஸை மட்டும் அவர் விரும்பியபடி சங்கீதம் கற்றுக்கொள்ள அனுமதித்திருக்கிறார் அவரது தந்தை ஜோஸப்.
இசையில் செயற்கைத்தனமிருந்தால் அதை ரசிக்க முடியாமல் போய்விடும். இசை இயற்கையாக பூ மலருவது போலவே உருவாகவேண்டும். இந்தக் கால இளைஞர்கள் இசையை இப்படி உணர கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் ஜேசுதாஸ். ஜேசுதாஸூக்கு பிடித்த பாடகர் யார் என்றபோது அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? “நடிகர் சந்திரபாபு”.