kabadam-director-jothimurugan-interview

இந்தக் காலத்தில் அந்தக் காலம் போல கண்டதும் காதல், வேறு ஏதும் பேதங்கள் எதுவும் பார்ப்பதில்லை என்று வரும் காதல்கள் அருகிவிட்டன. பெரும்பாலும் காதல்களும் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுமா என்பதைப் பார்த்தே தோன்றுகின்றன. வீட்டுக்குத் தெரியாமல் சினிமாவுக்குப் போகும்போது பைக்கை படத்தில் வரும் ஹீரோ மாதிரி காதலன் ஓட்டவேண்டும், அந்த ஹீரோயின் மாதிரி ஹியூமராஸாக இவள் இருக்கவேண்டும் என்று

மிகைப்படுத்தப்பட்ட எதிர்பார்ப்புக்கள் காதலில் பெருகிவிட்டன. அந்த இளையதலைமுறையைப் பற்றியது இந்தப் படம் என்கிறார் ‘கபடம்’ படத்தின் மூலம் அறிமுகமாகும் புதுஇயக்குனர் ஜோதிமுருகன்.

இவர் ஏற்கனவே ராதாமோகன், செல்வராகவன், சிம்பு தேவன் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக இருந்தவர் படத்தைப் பற்றி அவரிடம் பேசியபோது..

படத்தின் கதை இந்தத் தலைமுறைக்கு எந்த மாதிரிப் பொருந்தும்?
எதிர்பார்ப்புக்களும் ஏமாற்றங்களும் குடும்ப உறவுகளுக்கிடையே ஒரு சவாலாக விளங்குகிறது. எல்லோரும் வாழ்க்கையில் லட்சியங்களோடு வாழ்கிறார்கள். ஆனால் அதை நிறைவேற்ற காலமும், சூழலும் ஒத்துவர வேண்டும். காசும், பணமும் அதை நிறைவேற்ற உதவ முடியுமென்றாலும் அவற்றாலேயே எல்லாம் ஆகிவிடவும் முடியாது.

சென்ன நகர வாழ்க்கையும் அதுபோல மனிதர்கள் நிரம்பி நெரிசல் மிக்கதாகவும், ஆண் பெண் உறவுகளுக்குள்ளே சிக்கல்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது. காதல், காமம் போன்ற விஷயங்கள் மிகவும் வெளிப்படையாகவும், சுயநலமான விருப்பங்கள் தேர்வுகள் சார்ந்தாகவும் இருக்கிறது. ஆரம்பத்தில் அழகாகத் தெரியும் இவை எல்லாம் போகப் போக சலிப்பையும், ஏமாற்றத்தையும் உறவுகளுக்குள் ஏற்படுத்துகின்றன.

இதைப் பற்றித் தான் இந்தப் படம் பேசுகிறது. வழக்கமான காதல், காமெடி போன்ற பார்வையில் விஷயங்கள் இதில் இருக்காது. கதை புதிதானது அல்ல என்றாலும் கதை சொல்லப்படும் விதத்தில் வசீகரம் இருக்கும் என நம்புகிறேன்.

படத்தின் நடிகர்கள் பற்றி…
படத்தின் கதையைப் புரிந்துகொண்டு நடிக்க விரும்புகிறவரே படத்தின் ஹீரோவாக இருக்கவேண்டும் என்று தீர்மானமாக இருந்தேன். அப்படி ஒருவராக அமைந்தவர் ‘யாதுமாகி’ படத்தில் நடித்த சச்சின். அதே போல படத்தின் ஹீரோயின் அங்கனாராயும் படத்தின் கதையை கேட்டதிலிருந்து இந்தப் படத்தில் நான் நடிக்கிறேன் சார் என்று தொடர்ந்து என்னை கேட்டுக்கொண்டேயிருந்தார். அந்த அளவிற்கு கதையில் ஈடுபாடு வந்துவிட்டது அவருக்கு. படத்தின் தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கமும் புதுமுகங்களை வைத்து படமெடுப்பதற்கு சம்மதித்து ஊக்கப்படுத்தினார்.

பெரிய இயக்குனர்களிடம் வேலை செய்த அனுபவம் பற்றி..
தரமான படங்கள் எடுத்தால் கண்டிப்பாக மக்கள் பார்ப்பார்கள் என்பதை ஓரளவிற்கு நிரூபித்துக் காட்டியவர்கள் இவர்கள். சினிமா பொழுதுபோக்கு மட்டுமல்ல. சமூக நன்மைக்கான ஒரு விதை என்பதை இவர்களிடம் பணியாற்றியபோது கற்றுக் கொண்டேன். செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் பிரம்மாண்டமான படம். அது எந்த இடத்தில் மிஸ் ஆனது என்பது இன்றுவரை எனக்குப் புரியவே இல்லை. ராதாமோகன் சார் உறவுகளின் உன்னதத்தை எடுத்துவைக்கும் விதமும், விஜி சாரின் வசனங்களும் நிறைய கற்றுக் கொடுத்திருக்கின்றன. சிம்புதேவனின் இம்சை அரசனின் சமூகப் பார்வைகள் பற்றி விலாவரியாகவே பேசலாம்.

குறும்பட இயக்குனர்களின் ஆதிக்கம் தற்போது அதிகமாக இருக்கும் சூழலில் உதவி இயக்குனர்களின் வாய்ப்புக்கள் எப்படி?
வாய்ப்புக்களுக்கான ஒரு சிறந்த, நம்பகமான, தெளிவான வழியாக குறும்படங்கள் அமைந்துவிட்டன. நான் சொல்ல நினைப்பதை, என்னுடைய ஆளுமையை ஒரு இரண்டு நிமிடப் படத்திற்குள் கூட அடக்கிவிடமுடியும்.

சினிமாவில் டைமிங் மிக முக்கியம். நேரத்தை வீணடித்துவிடக்கூடாது என்பதை அனுபவரீதியாக உணர்ந்தவர்களாக குறும்படக்காரர்கள் இருக்கிறார்கள். உதவி இயக்குனர்களிடம் அவர்கள் வாழ்க்கையில் செய்த தியாகங்கள், நட்பு, காதல், வருத்தம், சோகம் போன்ற பல விஷயங்களே அவர்களின் அனுபவங்களாகி நிற்கின்றன. குறும்படக்காரர்கள் எல்லோரும் அப்படி ஒரு கஷ்டமான அர்ப்பணிப்பு உலகிலிருந்து வந்தவர்கள் என்று கூறிவிடமுடியாது. ஆனால் குறும்படங்கள் உதவி இயக்குனர்கள் தங்களின் அனுபவத்தையும், திறமையையும் பளிச்சென எடுத்துச் சொல்லமுடிகிற ஒரு தளமாக ஆகியிருக்கிறது என்பது உண்மை. உதவி இயக்குனர்களும் குறும்படம் என்கிற கருவியை பயன்படுத்த ஆரம்பித்தால் குறும்படக்காரர்களை விட பலமடங்கு வீரியமாக வளர்ந்து நிற்பார்கள்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.