விஜய், முருகதாஸ்,லைக்கா கோஷ்டிகளின் ‘கத்தி’ படத்துக்கு கத்திக்கத்தி எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழ்ப்போராளிகள் இனி சைலண்ட் மோடில் செட்டில் ஆகிவிடிவார்கள் என்பது உறுதி. மீறி சவுண்டு விட்டால் ‘அம்மா’ என்று அலறும் அளவுக்கு அவர்கள் அடிவாங்கப்போகும் சாத்தியங்கள் நிறைய உண்டு.
நாளை மாலை (செப்டம்பர் 18) கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது.
அது எவ்வித சிக்கலும் இல்லாமல் நடைபெறுமா? கடைசி நேரத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படுமா என்றெல்லாம் வைத்த கண் வாங்காமல் கவனித்துக் கொண்டிருக்கிறது ரசிகர்கள் கூட்டம். அந்த சிக்கலை மேலும் உறுதி படுத்துவதை போல தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், கத்தியை எதிர்க்கும் தமிழர் அமைப்புகளுக்கான குழுவின் தலைவருமான வேல் முருகன் ‘இந்த பாடல் வெளியீட்டு விழாவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று காவல் துறை ஆணையரிடம் புகார் மனு அளித்திருக்கிறார்.
விளம்பரத்திற்காக சில அமைப்பினர் குரல் கொடுக்கிறார்கள் என்று சில தினங்களுக்கு முன் சென்னை வந்த கத்தி படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ் கரண் அல்லிராஜாவும் பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார். எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்த விஜய் ரசிகர்கள், ‘நாளைய பொழுது நல்லா விடியுமா ?’ என்றே கவலைப்பட ஆரம்பித்திருந்தார்கள்.
இந்தக்கவலைகளுக்கெல்லாம் நெத்தியடியாக ஒரு தகவல் கசிந்திருக்கிறது. அது…
கத்தி திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜெயா தொலைக்காட்சியிடம் சரண்டர் செய்துவிட்டார்களாம். சிங்களர்களின் நரித்தந்திரமே தந்திரம் தான். ராஜபக்சேவுக்கு சவால் விடுக்கும் அம்மாவிடமே தங்கள் படத்தை சரண்டர் செய்வதன் மூலம் தமிழ்நாட்டில் நைஸாக காலூன்றிக் கொள்கிறார்கள் (லைக்கா நிறுவனர் தமிழர் தான் என்றாலும் ராஜபக்சேவுக்கு செம க்ளோஸ்).
இப்ப சொல்லுங்க, ‘கத்தி’ படத்தப்பத்தி இனி யாராவது வாயத்தொறப்பீங்க?