வாரத்துக்கு ஏழெட்டுப்படங்கள் பார்க்கவேண்டிய சூழலில், மனசு டயர்டாகி வெறுத்துப்போகும் போது, ஒன்றிரண்டு படங்கள் எதிர்பாராமல் ‘அட’ போட வைக்கும். அந்த வகையறா தான் இந்த ‘குறையொன்றுமில்லை’.
விவசாயம் என்ற சொல்லே மக்களுக்கு மறந்துபோன நிலையில், அதைப்பற்றி படம் எடுக்கிறேன் என்று சொன்னால் எந்த தயாரிப்பாளராவது முன்வருவார்களா? அது துளியும் சாத்தியமாகாது என்ற உண்மை உணர்ந்து ‘கிரவுட் ஃபண்டிங்’ என்ற முறையில், சில நடிகர்களையும் நண்பர்களையும் முதலீட்டாளர்களாக்கி, அறிமுக இயக்குநர் கார்த்திக் ரவி களம் இறங்கியிருக்கிறார்.
உலகமெங்கும் கார்ப்பரேட்காரர்களின் பிடியில் அனைத்தும் அகப்பட்டுவிட்ட நிலையில், விவசாயிகளின் அவல்நிலை குறித்து கவலைகொள்ளும் கதாநாயகன் ஒருவனை கதைநாயகனாக்க முன் வந்ததற்காகவே கார்த்திக் ரவிக்கு கரம் கொடுத்து வரவேற்கலாம்.
நாயகன் கீதனுக்கு ‘கிருஷ்ணா’ என்ற பெயர் கொண்ட வேடம். கார்ப்பரேட்டையும், களத்துமேட்டையும் கைகோர்க்க வைக்க நினைக்கும் கேரக்டரில் அவர் ‘கிருஷ்ணா’வாகவே வாழ்ந்திருக்கிறார்.
தன்னைப்புரிந்துகொள்ள மறுக்கிறவர்களுக்காக, சமரசம் செய்துகொள்ளாத அவரது பாத்திரப்படைப்பே, முதல் காதலை முறித்துப் போடுவதும், அதை மறுத்து வரும் அடுத்த காதலும்கூட அதனாலேயே தாக்குப் பிடிக்க முடியாமல் போவதும் மிக யதார்த்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாயகி ஹரிதாவின் பாத்திரமோ, தமிழ்சினிமாவில், அபூர்வமாக காணக்ககூடிய நுட்பமான சித்தரிப்பு. தங்கையின் காதலை கறாராக டீல் பண்ணும்போதும், உலகின் அத்தனை விசயங்கள் குறித்தும் அக்கறை காட்டி தனது காதலை உதாசீனப்படுத்தும் காதலன் குறித்து அதே தங்கையிடம் குமுறி அழும்போதும் ஹரிதா இன்னொரு சரிதா.
இவர்கள் தவிர்த்து மற்ற பாத்திரப்படைப்புகளும் கச்சிதமாக வந்திருப்பதற்கு, இயக்குநரே ஆதாரமாக இருந்திருக்கிறார் என்பதை படம் முழுக்க பார்க்கமுடிகிறது.
படத்தில் குறைகளே இல்லையா? இருக்கின்றன. இன்றைய தொழில்நுட்ப நேர்த்தியில், நிறையவே பின் தங்கி இருக்கிறார் இயக்குநர். அதற்கு பட்ஜெட் ஒரு தடையாக இருப்பதை உணரமுடிகிறது.
இதனாலேயே அசோக் குமாரின் ஒளிப்பதிவையும், படத்தொகுப்பையும் ரசிக்கமுடியவில்லை.
இசை ராமனு என்று பார்த்ததாக ஞாபகம். சில சமயங்களில் அது இசையாகவும், பல சமயங்களில், குறிப்பாக பின்னணி இசையில் இம்சையாகவும் இருக்கிறது.
இதையெல்லாம் தாண்டி, எடுத்துக்கொண்ட கருத்துக்காகவே, சினிமாவால் நிறைய சம்பாதித்து, மனதிருப்திக்காக, பெரிய மனிதர்கள் செய்திருக்கவேண்டிய வேலையை, இந்த சின்ன ‘கிரவுட் ஃபண்டிங்’ குரூப் செய்திருப்பதால், கரகோஷம் எழுப்பிவரவேற்கவேண்டியது, நல்ல சினிமா ஆர்வலர்களின் தலையாய கடமை.
‘குறையொன்றுமில்லை’ தமிழ்சினிமாவில் ஒரு புதிய எல்லை.