விஜய் டி.வி. நீயா நானா போன்ற டாக் ஷோக்களை நடத்தி மக்களின் அறிவுக் கண்ணை திறப்பது போல ஒரு பக்கம் காட்டிக் கொண்டாலும் இன்னொரு பக்கம் தனது ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் ஜூனியர், சீனியர் போன்ற எல்லா முக்கியமான ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்பவர்கள் அழுவது, உணர்ச்சி வசப்படுவது, முத்தமிடுவது கோபப்படுவது மேலும் அரங்கை விட்டு வெளியே போனபின்பு நடைபெறும் அவர்களின் உரையாடல்கள், உணர்ச்சிக்
கொந்தளிப்புகளை காட்டி சீரியல்களை விட ரியாலிட்டி ஷோக்களில் நம்பர் ஒன் ஆகி விட்டது.
அதைப் பின்பற்றி இப்போது எல்லா டி.வி.க்களும் ரியாலிட்டி டைப் ஷோக்களை நடத்தித் தள்ளுகிறார்கள். ஜீ டி.வியின் ‘சொல்வதெல்லாம் புருடா’ இதில் அடுத்த கட்டம். அன்றாட வாழ்விற்கு சிரமப்படும் வசதியற்ற குடும்பங்களை பணம் மற்றும் பழி்க்குப் பழி என்று உசுப்பேற்றி கூட்டி வந்து டி.வி.யில் அவர்களின் மானத்தை ஏலம் போட்டு விற்கும் நிகழ்வுதான் இது போன்ற நிகழ்ச்சிகள்.
விஜய் டி.வியில் ஏழு வருடங்களுக்கு முன்பு, ஜோடி நம்பர் 1 போட்டியில் நடனமாடிய ப்ரித்விராஜூக்கும் நடுவராக வந்திருந்த சிம்புவுக்குமிடையே வாக்குவாதம் வந்து அதில் சிம்பு இனிமேல் என்று இந்த ஷோவுக்கே வரமாட்டேன் என்று அழதபடியே சொல்லிச் செல்ல, ப்ரித்விராஜூம் அழுதபடியே தேர்வாகாமல் நிராகரிக்கப்பட்டு செல்லுவார்.
அந்தச் சண்டையை மூன்று பாகங்களாக பிரித்து அவர்கள் ஒளிபரப்ப ஒரே நாளில் அந்த நிகழ்ச்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங் 27 பாயிண்ட்டுகள் உயர்நததாம். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ப்ரிதிவிராஜ் “அது உண்மையான சண்டையல்ல. ஒரு நடத்தப்பட்ட நிகழ்வு. 13 கேமிராக்கள் படம் அதை பிடித்தன. சண்டை போடும் போது ‘சார்.. அங்க வெளிச்சம் முன்னாடி வந்து சண்டை போடுங்க சார்..’, ‘மைக் முன்னாடி வெச்சு பேசுஙக சார்’ன்னு பின்னாடி இருந்து சொல்லிகிட்டே இருப்பாங்க. அது முன்னாடியே நாங்க ப்ளான் பண்ணி நடத்திய சண்டை.” என்று உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார். இது ஆங்கிலச் சேனல்களில் நடத்தப்படும் மல்யுத்த சண்டைகளில் செய்யப்படும் டெக்னிக் ஆகும். வசனம் இருக்காது. ஷாட்கள் வைக்க மாட்டார்கள். ஆனால் முக்கியமான வசனங்கள், பேச்சுக்கள், சண்டை எப்படி இருக்கவேண்டும் என்று முன்னாடியே தீர்மானித்திருப்பார்கள்.
இன்று இதைக் கேட்ட ஆடியன்ஸ் யாரும் கொதித்துப் போகவில்லை . ஏனென்றால் நாம் விரும்புவதே டிராமா என்பதால் தான். இது மாதிரி மக்களின் உணர்வைச் சுரண்டி ஏமாற்றும் ஷோக்களின் மீது மக்களுக்கு வெறுப்பு எப்போது வரும்? தெரியவில்லை.