நடிகர்களின் பிம்பங்கள் விலகிப் போன அந்த நேரத்தில் புதிய அலையெனத் தமிழ்ச் சினிமா உலகத்தில் நுழைந்து அதன் உள்ளடக்கத்தையும் வடிவத்தையும் சொல்முறைகளையும் மாற்றிக் கட்டமைத்துக் கொண்டிருந்த பாலச்சந்தர், பாலு மகேந்திரா, பாரதிராஜா, மகேந்திரன் என்ற பெயர்கள் பிம்பங்களாக அல்லாமல் ஆளுமைகளாக எனக்குள் நுழைந்து கொண்டன. இந்தக் கூட்டத்தில் சேராமல் ஏற்கெனவே எழுத்தின் வழியாக எனது நேரத்தைக் களவாடிக் கொண்டிருந்த ஜெயகாந்தன் சினிமா வழியாகவும் என்னை இணைத்துக் கொண்டார்.
சினிமா என்பது நடிகனின் கலை அல்ல; இயக்குநரின் வெளிப்பாட்டு வடிவம் என்பதை நான் உணர்ந்ததை ஒரு தீபாவளிக்கு வெளியான படங்கள் தான் எனக்கு உணர்த்தின. பட்டப்படிப்பில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்த எனக்கு அந்தத் தீபாவளிக்கு வெளியான எட்டுப் படங்களில், எட்டாவது இடத்தை ருத்திரையாவின் அவள் அப்படித்தானுக்கு ஆனந்த விகடன் வழங்கியது – மதிப்பெண் வழங்கியதில் பிழை இருப்பதாகத் தோன்றியது. அந்த நேரத்தில் நடிப்பில் உச்சத்தில் இருந்த கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். சிவச்சந்திரன், ரவீந்தர் போன்றவர்களோடு மையப் பாத்திரமான மஞ்சு பாத்திரத்தில் ஸ்ரீபிரியாவை எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. திரையிசைப் பயணத்தில் தாவித்தாவிப் பயணம் செய்து கொண்டிருந்த இளையராஜாவின் பின்னணி இசையும் கருத்தாழம் மிக்க பாடல்களும் கூட அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தன. பாடல்களில் ஒன்றைக் கமல்ஹாசனே பாடியிருந்தார் என்ற போதிலும் ஆனந்த விகடனின் கவனம் விழவில்லை.
பாலச்சந்தரின் தப்புத்தாளங்கள், பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் போன்ற படங்களுடன் சேர்ந்து 1978 தீபாவளிக்கு வெளியான எட்டுச் சினிமாக்களுள் அவள் அப்படித்தான் படத்தை முக்கியமான படமாக முன்னிறுத்தத் தவறிய ஆனந்த விகடனின் விமரிசனக்குழுவின் திரைப்படப் பார்வையில் ஏதோ கோளாறு இருப்பது மட்டும் புரிந்தது; ஆனால் என்ன வகையான கோளாறு என்பது அப்போது விளங்கவில்லை.
கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டிருந்த அந்தப் படம் கதை சொல்லிய முறையிலும், காட்சிகளை அடுக்கிய முறையிலும் வித்தியாசத்தைக் கொண்டிருந்தது. பாத்திரங்கள் பேசும் வசனங்கள் அவர்கள் அந்தப் பாத்திரங்களைத் தமிழ்ப் பெருந்திரளுக்குள் அடையாளமற்றவர்களாகக் கரைந்து போகும் நபர்களாகக் காட்டாமல் துருத்திக் கொண்டிருக்கும் நபர்களாக- குறிப்பாக அந்த அவளை- மஞ்சுவை- உருவாக்கியிருந்தார் இயக்குநர் ருத்திரையா. ஆண்களைச் சார்ந்து வாழ்வதே பெண்ணின் இருப்பாக நம்பும் தமிழ்ச் சமூகத்தின் முன் தன் செயல்பாடுகளின் தோல்வியை உணர்ந்தவளாகவும், அதன் வழியாகச் சிதையும் நம்பிக்கைகளோடு ஆண்களை எதிர் கொள்ளும் தனித்தன்மை கொண்டவளாகவும் இருக்கும் பெண்ணைக் கவனப்படுத்தும் ஒரு திரைப்படத்தை ஆனந்த விகடனின் மரபான கலைப்பார்வை ஏற்றுக் கொள்ளத் தயங்கியிருக்கும் என்பது இப்போது புரிகிறது.
தமிழ்ச் சினிமா
காட்டப்படுவதும் காண்பதுவும்
நன்றி; அ.ராமசாமி