கடந்த சிலபல நாட்களாகவே ’கிணத்தைக்காணோம்’ வடிவேலு பாணியில் தனது சொத்தைக்காணோம் என்று வீட்டுப்பிரச்சினைகளை ட்வீட்டுப்பண்ணிக்கொண்டிருந்த மிஸ்டர் சந்திரமவுலி கார்த்திக், இன்று காங்கிரஸ் பேரியக்கத்துக்குள் கால் வைத்து, அடுத்த ஒரு மணிநேரத்துக்குள்ளாகவே வைத்த காலை பின்வாங்கி பலத்த காமெடிகள் செய்தார்.
நாடாளும்[!] மக்கள் கட்சியின் தலைவரும் அக்கட்சியின் ஒரே தொண்டருமான கார்த்திக், அரசியலில் அவ்வப்போது அதிரிபுதிரியான அறிக்கைகள் விட்டு தன்னைத்தானே கலாய்த்துக்கொள்வது என்பது அவ்வப்போது நடந்துவருவது அனைவரும் அறிந்ததே.
இடையில் சற்றே ஓய்வெடுத்து வந்த அவர், இன்று காங்கிரஸில் ஒரு அக்னிநட்சத்திரமாக ஐக்கியமாகப் போவதாக காலையிலிருந்தே ஒரு பரபரப்பு கிளம்பியிருந்தது. அதன்படியே காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்த அவர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில் பத்திரிகையாளர்களிடம், ‘ இந்த முறை விவாகரத்தே ஆகாத ஒரு திருமணத்தை காங்கிரஸுடன் செய்துகொள்ளப்போகிறேன்’ என்று அறிவித்தார்.
அடுத்தசில நிமிடங்களில் கட்சித்தலைவர் பதவியும் பெரிய ‘சூட்கேஸ்’ ஒன்றும் தன்னை நோக்கி வரும் என்று எதிர்பார்த்து அவர் காத்திருக்க, இளங்கோவன் ஒரு பெரிய கொட்டாவியை மட்டும் விட்டுவிட்டு மவுனம் காக்க, ‘எக்ஸ்கியூஸ் மி ரிப்போர்ட்டர்ஸ் நான் காங்கிரஸ்ல சேர்றதுக்காக வரலை [பின்ன வார்றதுக்காக வந்தியாக்கும்]. அவங்க கட்சிக்கு சப்போர்ட் பண்ணமட்டும் வந்திருக்கேன்’ என்றபடி கல்யாணம் நடக்காமலே விவாகரத்து பண்ணிக்கொண்டார்.
ஆக காங்கிரஸும், மிஸ்டர் சந்திரமவுலியும் பரஸ்பரம் பேரழிவிலிருந்து தப்பிப்பிழைத்தனர்.