கடந்த ஆறுமாதங்களுக்கும் மேலாக புலம்பல்களும் ,புகைச்சல்களுமாக இருந்த ‘வசந்தகுமாரன்’ பஞ்சாயத்து நேற்று திடீரென பற்றி எரிய ஆரம்பித்தது. காரணம் ஸ்டுடியோ9 சுரேஷ் திடீரென ‘விரைவில் படப்பிடிப்பில்’ என்று விஜய் சேதுபதி படத்துடன் தின இதழ் ஒன்றில் விளம்பரம் கொடுத்தது.
அதைப்பார்த்து விஜய் சேதுபதி ஓரிரண்டு நாட்கள் அமைதிகாத்தால் கூட, சில ஏரியாக்களை பிசினஸ் செய்ததாகக்கூறி, அவரை மேலும் சிக்கலில் மாட்டிவிட திட்டமிட்டிருந்தார் சுரேஷ்.ஆனால் விளம்பரத்தைப் பார்த்தவுடன் முதல்வேலையாக ‘வசந்தகுமாரன்’ படத்தில் நடிக்கும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. வெறும் 9 லட்சம் அட்வான்ஸ் தந்துவிட்டு நஷ்ட ஈடாக ஒரு கோடியை திரும்பகேட்கும் தயாரிப்பாளரின் புதிய சூழ்ச்சி இது. இந்த விளம்பரத்தை நம்பி யாரும் ஏமாறவேண்டாம்’ என்று அனைத்து பத்திரிகைகளுக்கும் செய்தி அனுப்பினார்.
விஜயசேதுபதியின் இந்த பதிலடி காலை பத்துமணிக்கு நடந்து முடிந்திருக்க, மதியம் 2 மணிக்கு பத்திரிகையாளர்களுக்கு அவசர அழைப்பு விடுத்த சுரேஷ், ‘என் படத்தில் விஜயசேதுபதி நடித்தே ஆகவேண்டும் என்று எல்கேஜி குழந்தையைப்போல் அடம்பிடித்தார். அட்வான்ஸ் தந்ததென்னவோ 9 லட்சம்தான் என்றாலும், மற்ற டெக்னீஷியன்களுக்கு செலவழித்த வகையில் இதுவரை படப்பிடிப்புக்கே போகாத படத்துக்கு ஒருகோடி வரை செலவாகிவிட்டது என்ற ‘உண்மையில்’ பிடிவாதமாக இருந்தார் சுரேஷ்.
பல மாதங்களாக நடந்து வரும் ‘வசந்தகுமாரன்’ பஞ்சாயத்தில் தயாரிப்பாளர் சங்கம் அமைதி காக்கும் காரணம் அனைவரும் அறிந்ததே. ஆனால் நடிகர் சங்கம் ? விரக்தியில் புலம்பும் விஜய்சேதுபதியை வேடிக்கை பார்ப்பதன் மர்மம் விளங்கவில்லை?.