இயக்குனர் பாலசந்தர் உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சலால் சென்ற வாரம் சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவரது மகன் கைலாசம் இறந்தது முதலே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார் பாலசந்தர். மூளையில் ஏற்பட்ட கட்டியை அகற்ற ஆபரேஷன் செய்தது முதல் தொடர்ந்து உடல் நிலை மோசமாக ஆரம்பித்தது. நேற்று மீண்டும் கவலைக்கிடமானது. நேற்று மாலை 7 மணியளவில் சிறுநீரகம் பாதிப்பால் தொடர்ந்து டயாலிஸிஸ் செய்யப்பட்டு வந்தும் பலனின்றி மரணமடைந்தார்.
தமிழ் சினிமாவின் தற்போதைய தூண்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரையும் உருவாக்கியவர் இவரே. தற்போது கமல்ஹாசனின் உத்தம வில்லன் படத்திலும் நடித்து வந்தார். 1975ல் தனது ‘அபூர்வ ராகங்களி’ல் ரஜினியை இரண்டாவது ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அவரது அரங்கேற்றம் படத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த கமலுக்கு நல்ல வாய்ப்பு வழங்கினார். அதைத் தொடர்ந்து ‘மன்மதலீலை’, ‘அவளொரு தொடர்கதை’ எனத் தொடர்ந்து தனது படங்களில் கமலுக்கு சிறந்த வேடங்களைக் கொடுத்தார்.
84 வயதாகும் பாலசந்தர் 101 திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார். 80 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது திரையுலக வாழ்க்கை 1964ல் எம்.ஜி.ஆர் நடித்த தெய்வத்தாய் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியதில் ஆரம்பமானது. எம்.ஜி.ஆர்தான் பாலச்சந்தரை திரையுலகுக்கு அழைத்து வந்தார்.
தஞ்சை மாவட்டத்தில் நன்னிலம் கிராமத்தில் பிறந்தவர் பாலசந்தர். தன் 15-ம் வயதில் சில நாடகங்களை எழுதி இருக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் படிப்பில் சேர்ந்து படித்தார். திருவாரூர் அருகே உள்ள முத்துப்பேட்டையில் பள்ளி ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார்.
பிறகு சென்னைக்கு வந்து, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிக்குச் சேர்ந்தார். அந்தச் சமயத்தில்தான் யுனைட்டெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் நாடகக்குழுவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து சொந்தமாக ஒரு நாடகக்குழுவை ஏற்படுத்தினார். மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, மெழுகுவர்த்தி, நவக்ரஹம் போன்ற நாடகங்களை அவரே தயாரித்து இயக்கினார்.
1965ல் வெளிவந்த நீர்க்குமிழிதான் இவர் இயக்கிய முதல் படமாகும். ஹீரோவுக்கான முக அமைப்பே இல்லாத நாகேஷை ஹீரோவாகச் செய்து முதல் படத்திலேயே சினிமா உலகை திரும்பிப் பார்க்கவைத்தார்.
மேஜர் சந்திரகாந்த், எதிர் நீச்சல், பாமா விஜயம், அவளொரு தொடர்கதை, மன்மத லீலை, மூன்று முடிச்சு, ஏ துஜே கே லியே என்று ஹிந்தியில் வந்து பெரும் ஹிட்டான மரோ சரித்திரா போன்ற எழுபதுகளின் புகழ் பெற்ற படங்கள் இவருடையவை. இவரின் ‘இருகோடுகள்’ சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது.
‘ஏக் துஜே கே லியே’ இவர் எழுதி இயக்கிய இந்திப் படம், 1981-ல் வெளிவந்து காதல் சினிமாக்களின் டிரெண்ட் செட்டராக அமைந்தது. எண்பதுகளில் வந்த சிந்து பைரவி, மனதில் உறுதிவேண்டும், புன்னகை மன்னன், வானமே எல்லை போன்ற படங்கள் பாலசந்தரின் ‘டச்’சுக்கு எடுத்துக்காட்டுக்கள். இது தவிர ரயில் சினேகம் போன்ற வெற்றிகரமான டி.வி. சீரியல்களும் எடுத்திருக்கிறார். 90களுக்குப் பின் அவரது சினிமா இயக்கத்தில் தொய்வு ஏற்பட்டது.
9 தேசிய விருதுகளும் எண்ணற்ற பில்ம்பேர் அவார்டுகளும், தாதா சாகேப் அவார்டு போன்ற பல விருதுகளும் வாங்கியுள்ளார். இந்திய அரசின் உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். பாலசந்தருக்கு இரு மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர். அவரது மனைவி பெயர் ராஜம்.
மைலாப்பூரில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவருக்கு கருணாநிதி, வை.கோ, ரஜினிகாந்த், பாரதிராஜா, இளையராஜா, சரத்குமார் உட்பட மொத்த திரையுலகமும், அரசியல்வாதிகளும் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர். அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன் பாலசந்தர் மறைவு தெரிந்தவுடன் அங்கிருந்து கிளம்பி இன்று மாலை வந்து சேர்கிறார். இன்று மதியம் பெசன்ட் நகர் மாயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ச் சினிமாவில் வித்தியாசமான பெரும் முயற்சிகளைச் செய்து, சாதனைகள் பல படைத்த இயக்குனர் பாலசந்தரின் மரணம் தமிழ் சினிமாவுக்கு ஒரு இழப்பாகும்.