சமகால கேரளத்தின் சமூக அரசியலைக் குறுக்குவெட்டாகப் பேசும் படம் ‘லெஃப்ட் ரைட் லெஃப்ட்’. கடந்த பத்து ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த படங்களுள் ஒன்று என்று விமர்சகர்கள் புகழ்வது பொருத்தமானதுதான். கேரளத்தில் கம்யூனிசத்தின் எழுச்சி, பிளவு, 80களுக்குப் பின் கம்யூனிசம் வளர்ச்சியின் எதிரியாக பார்க்கப்படுவதும், கம்யூனிசத்தின் தடுமாற்றங்களும் என மிக முக்கியமான பல விசயங்களைச் விவாதிக்கிற படமாக இது இருக்கிறது.
1960,70,80களில் கேரளாவின் பல்வேறுபகுதிகளில் வளர்ந்த சிறுவர்களின் கதையாக ஆரம்பிக்கிறது படம்.
1969இல் சிறுவனாய் இருந்த சகதேவன். சகதேவனின் அப்பா.. கைதேரி சாத்து. அவர் தமையன் அம்பு எதிரிகளால் கொல்லப்படுகிறான்., பிணமாய்க் கிடக்கும் சித்தப்பனைப் பார்ப்பதைத் தவிர்ப்பதற்காக சிறுவனான சகதேவனின் கண்களைப் பொத்துகிறான் ஒருவன்… தந்தையான சாத்து அவன் கைகளை விலக்கி, ‘அவன் பார்க்கணும்… நல்லா பாக்கணும்.. பாத்துக் கத்துக்கணும்… என்று சகதேவனின் கண்களைத் திறந்து வைக்கிறான்… கட்சி அலுவலகத்தில் தம்பியின் பிணத்தைக் கிடத்திவிட்டு… இதற்கு ஒரு பதில் தெரியாம வரமாட்டேன்.. என்று கிளம்பியவன் திரும்பிவரவேயில்லை… என்ற முன்னுரையோடு படத்தின் பிற்பகுதியில் முதலமைச்சராக இருக்கும் மூத்த தலைவராக கைதேரி சகாதேவனைச் சந்திக்கிறோம். காலத்தின் போக்குக்கேற்ற சமரசங்களோடு கட்சியையும் அதிகாரத்தையும் காப்பாற்றி வைத்திருக்கவேண்டும் எனும் புது மார்க்சிய சிந்தனையுள்ள கைதேரி சகதேவன் கம்யூனிசத்தின் இன்றைய யதார்த்தம்.
1976இல் மத்திய கேரளாவில் லட்சிய கம்யூனிஸ்டான தந்தைக்குப் பிறந்தவனான சேகுவேரா ராய்.. தந்தையிடம் கேட்கிறான்.
அப்பா ஏன் மார்க்சிஸ்டுகளை கொல்கிறார்கள்?…
மார்க்சிஸ்டுகள் உண்மையைச் சொல்பவர்கள்.. நேர்மையாய் நடப்பவர்கள்.. அதனால்தான்..
மார்க்சிஸ்டுகள் யாரையும் கொல்லாதோ? அப்பாவை யாரும் கொல்லுமோ?
என்ன யாரும் கொன்னாலும் மகன் ராய் இருக்க தானே?.. சரிதான? தந்தையின் கேள்விக்கோர் பதிலாக, அதே லட்சியத்துடன், தத்துவத்தையும் நடைமுறையையும் ஒன்றாகக் கருதும் இளம் கம்யூனிஸ்ட்டான சேகுவேரா ராய் – கண்முன்னால் தந்தையைக் வீச்சரிவாள்களுத் தின்னக் கொடுக்கிறான். கல்லூரி நாட்களில் அனல் பறக்கும் பேச்சாளனாய்.. செயல்வீரனாய் உலாவருகிறான்… கல்லூரிகளில் அரசியல் கட்சிகள் வேறூன்றி இடதுசாரி வலதுசாரி இயக்க மாணவர் சங்கங்கள் கோலோச்சிய காலத்தில் கல்லூரி வளாக வன்முறையில் வெட்டுப்பட்டு ஒருபக்க கைகால் இயக்கமற்று நிரந்தர அங்கஹீனனாகிறான். எல்லாவற்றையும் இழந்தாலும் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் காப்பாற்றியாக வேண்டுமென்கிற லட்சியக் கம்யூனிஸ்ட் செகுவேரா ராய்.
1986இல் தெற்கு கேரளாவில் பிறந்த பி.கே.ஜெயன். அரசாங்க மருத்துவ மனையில் உயிருக்குப் போராடும் தன் சகோதரிக்குப் பொருத்தப்பட்டிருந்த ஆக்ஸிஜன் சிலின்டரை கண்முன் அகற்றுகிறார்கள். தந்தையில்லாமல் கொடும் வறுமையில் சகோதரியைப் பறிகொடுத்து, பணத்திற்குமேல் உலகில் எதுவுமில்லை என்ற அறத்தைப் இறுகப்பற்றிக்கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டராகிறான் ஜெயன். என் வீட்டுச்சுவத்துல என் அப்பன் படத்தைத் தவிர எவன் படமும் இல்லை என்று கட்சிக்காரர்களைப் பார்த்துச் சொல்லும் ஜெயன், பணத்தைச் சம்பாதிப்பதற்கிடையே எந்த அறக்கேள்விகளுக்கும் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் இடமளிக்காத புதிய தலைமுறையைச் சார்ந்தவன். மனிதன் என்பவன் பகுதி டி.என்.ஏ.வினாலும் பகுதி என்னவென்று சொல்ல முடியாத காரணிகளாலும் பகுதி இளமையில் பார்த்த விசயங்களினாலும் தீர்மானிக்கப்படுகிறான்..என்பதை மெய்பிக்கப் பிறந்தவன்.
ஜே.என்.யூ வில் படிக்கும் போது ஜெயனின் பேச்சைக்கேட்டு அவனோடேயே கேரளாவிற்கு வந்து அவனுடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்ட அனிதா… – கட்சியின் போக்கில் மனம் ஒப்பாது கட்சியைவிட்டு வெளியில் வந்து தனிச்சுற்று பத்திரிக்கை நடத்தி அதில் முதலமைச்சரின் ஊழல்களை அம்பலப்படுத்தி அதனால் தெருவில் வெட்டுப்பட்டுச் சாகும் சேகுவேரா ராயின் இளமைத்தோழர்கள் …அனியும் அலியாரும்…- உட்கட்சிக்குழப்பங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் இரண்டாம்கட்ட தலைவர்… ஆகிய பாத்திரங்களினூடாக கேரள சமூகத்தின் வளர்சிதை மாற்றங்களை ஒரு உணர்ச்சிகரமான திரைக்கதையாக்கியிருக்கிறார் கோபி.
மீதமிருக்கும் தன் கடைசி தோழனின் உயிரைக்காக்க முதலமைச்சரான சகாதேவனைப் பார்க்க முயற்சி செய்கிறான் ராய். முடியாமல் போகவே சகாதேவன் செல்லும்வழியில் நடுக்காட்டில் வண்டியை மறிக்கிறான். இறங்கி வரும் சகாதேவனுக்கும் சேகுவேரா ராய்க்குமான உரையாடல் நடக்கும் நீண்ட காட்சி அற்புதமான ஒரு காட்சி. காட்சிக்களமும் படமாக்கப்பட்ட விதமும் குறிப்பாக உரையாடல்களும் குறிப்பிடத்தகுந்தவை.
உன்னோட ஆளுங்க எழுதின கமிஷன் மூனேமுக்கால் கோடி வேணுமுன்னு வாதிச்சதும் வாங்கினதும் நானாக்கும்.. ஆனா அதுல ஒரு பைசா சகதேவன் எடுத்து உண்ணவும் இல்ல.. உடுக்கவும் இல்ல.. அத வச்சு உண்ண வச்சிருக்கேன்.. உடுக்க வச்சுருக்கேன்..
சகா.. உங்க பையன் லண்டன் பர்மிங்ஹாம் யுனிவர்சிட்டில படிக்கிற படிப்பு முடிஞ்சதா? பர்மிங்ஹாம் யுனிவர்சிட்டிலருந்து உங்க பையன் படிப்பு பத்தி ஒரு கடிதம்… உங்க பையன் மேஜர் சப்ஜெக்ட் எதுவும் சரியா படிக்கலன்னு …உங்களுக்கு ரிப்போர்ட் வருது 2009இல். நீங்க லண்டன் போறீங்க… பிக் பேன் பாத்தீங்க… மார்க்ஸோட கல்லறைக்குப் போனீங்க… பேக்கர் தெருவுக்குப் போயி சேக்ஸபியர் வீட்ட பாத்தீங்க.. கரைபடாத கைகளுக்குச் சொந்தக்காரரானஉங்களுக்கு இதுக்கெல்லாம் எங்கருந்து பணம் வந்தது சகா?
நல்லா கேட்டுக்கோ… கைதேரி சகாதேவனுக்கு அப்பனும் அவனுக்குச் சகோதரனுமான அம்புவும் இருந்தது உனக்குத் தெரியும்.. ஒனக்குத் தெரியாதது நெறைய இருக்கு…சாத்துவுக்கு ராமன்னு ஒரு அப்பன் இருந்தான்….. அவன் நாயர்களோட நிலத்தில வெய்யில்லயும் மழையிலயும் பாடுபட்டவன். அவன் வேளைக்குப் போகும்போது அவனோட சாத்துவும் அம்புவும் போவாங்க.. மத்தியானம் கிடைக்கும் கஞ்சியில பங்குபோட.. அன்னைக்கு வேலையில சிறு தப்பு நடந்தாலும் புளிய விளாருல அடிவிழும். அன்னைக்கு கஞ்சியும் கிடைக்காது. மண்ணுல ஒரு குழி வெட்டி அதுல ஒரு எலையப் போட்டுட்டு இருபதடி தூரம் எட்ட நிக்கணும். மண்ணுல கெடக்குற எலையில கஞ்சிய ஊத்துவா முதலாளியம்மா…
ராமன் அம்மை வந்து செத்தப்ப சாத்துவும் அம்புவும் ஒரு சொட்டுக் கண்ணீர் விடல.. ஏன் தெரியுமா? அவங்களுக்குப் புடிச்சு நிக்கிறதுக்கு ஒரு செங்கொடி இருந்தது.. அந்தச்செங்கொடியோட பலத்துல சாத்து ரோட்ல தலை நிமுந்து நடந்தான். அந்தச் சாத்துவோட அம்புவோட ரத்தத்தப் பாத்து வளர்ந்தவன்டா இந்த சகதேவன்…சகதேவனோட காலத்துல செங்கொடி இன்னும் உயரமா வளர்ந்தது…. ராமன் குழி வெட்டினான்.. சாத்துவும் அம்பும் கொடி நாட்டினாங்க… சகதேவன் அத மேலும் மேலும் உயரத்துல பறக்க வைச்சான்…சகதேவனோட மக்கள் இங்கிலேன்டில் படிப்பாங்க… வளர்வாங்க..சமுதாயத்துல மேல்தட்ட ஒழிக்கிறதுக்கு நாமளும் மேல்தட்டா மாறனும்… மேல்தட்டின் உச்சத்துல போய் உக்காரணும்.. இப்படித்தான் அத ஒழிக்கணும் … இதுதான் என்னோட தத்துவசாஸ்திரம்…இத அனுசரிச்சுத்தான் என்னோட செயல்பாடுகள் இருக்கும்… இதுக்கு மாறா என்னோட வழியில் வற்ரவங்கள தூக்கி எறிவேன்…
சகதேவன் பணக்காரன்… பணக்காரர்களோட கம்யூனிஸ்ட்ன்னு எந்த நாய்கள் பேசினாலும் எனக்கு கவலையில்ல… கட்சியோட நிக்கிறவங்களை மட்டும்தான் நான் ஏழைகளா ஏத்துக்குவேன். அந்த ஏழைகளுக்காத்தான் ராமனோட மகனோட மகன் நிப்பான்.
எனக்கு புட்பால் ரொம்பப் பிடிக்கும்… இடதுகாலில் கோல் அடிக்கணும்னா வலதுகால்யும் சேத்து விளையாடணும்..ஆட்டம் முடிஞ்சு வீட்டுக்குப் போக ரெண்டுகாலும் தேவைப்படும்.. லெஃப்ட்- லெஃப்ட் (இடது இடது)ன்னு போகமுடியாது.. லெஃப்ட்டு- ரைட்டு- லெப்ட்டு ன்னுதான் போயாகணும்….
மிகநீண்ட இந்தக் காட்சி ஒருவிதமான நாடகப் பாணியில் உணர்ச்சிமிக்க உரையாடல்களாக அமைந்திருந்தாலும் இருவரின் நடிப்பும் குறிப்பாக கைதேரி சகதேவனாக வரும் ‘ஹரிஸின்’ தோற்றப் பொருத்தமும் நடிப்பும் அபாரம். உரையாடல் முடிந்து ராய் காலை இழுத்துக்கொண்டே காரின் அருகில் போய்… சகதேவனிடம்..
சகா… கட்சி துப்பாகிய எடுக்கலாம். ஆனா துப்பாக்கி கட்சிய எடுத்துறக்கூடாது.. இத நான் சொல்லல… மாவோ சொன்னது…ஒரு காலத்துல அமைதிய விரும்புனவங்கதான் புரட்சிக்குத் தலைமை தாங்கினாங்க..விசயங்களைக் கண்டும் காணாததும் போல இருந்தா பைத்தியக்காரர்கள் புரட்சியைக் கையிலெடுப்பார்கள்.. என்கிறான்…
ஏளனச் சிரிப்போடு சரி… வண்டில ஏறு வழில இறக்கிவிடுறேன்… எனும் சகதேவனிடம்..
இல்ல சகா என்னோட இடதுகால் பழுதா இருந்தாலும் அதோடயே நான் போகவேண்டிய இடத்துக்குப் போவேன்..
லட்சியவாதிகளுக்கும் நடைமுறைவாதிகளுக்குமான உரையாடலைச் சாரம்குறையாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ராயின் நண்பர்கள் சகதேவன் கமிஷன் வாங்கியதை அம்பலப்படுத்த வேண்டுமெனத் துடிப்பார்கள்..அப்போது நடக்கும் உரையாட்ல்..
கட்சி மட்டும் கம்யூனிசம் அல்ல… கட்சி மட்டும் மார்க்சிசம் அல்ல…
ஆனா… மார்க்சிஸ்ட் பார்ட்டி என்பது மார்க்சிஸம் மட்டுமானதல்ல…கொஞ்சம் லெனினிசமும் இருக்கும்… கொஞ்சம் கோர்ப்பசேவிசமும் கொஞ்சம் ஸ்டாலினிஸ்டுகளும் கூட இருக்கத்தான் செய்வார்கள்…
இதுல சகா நீங்க யாரு?
ராய் தன் உணர்வற்றுத் தொங்கும் இடது கையை இன்னொரு கையால் தூக்கி இறுகிய முகத்துடன் மேசையில் வைப்பான்…
இப்போதிருக்கும் கம்யூனிசம் நிறைய பேருக்கு கனிகளும் நிழலும் தருகிற ஒரு பெரிய மாமரம்… களைகள் இல்லாமலில்லை… கூடுதலான களைகள் உண்டுதான்… அதுக்காக மரத்தையே வெட்டமுடியாது அலியார்..
போலீஸ் ஜெயன்.. சகாவே கம்யூனிஸ்ட் பார்ட்டி ரெண்டா உடைஞ்சதா எங்க அப்பா சின்ன வயசுல சொன்னது ஞாபகம் இருக்கு. இடது வலதுன்னு… இப்ப இடது கம்யூனிஸ்ட் பார்ட்டி இரண்டா உடைஞ்சதே… அதுல எது வலது?… எது இடது?…
படம் முழுக்க கூர்மையான இரண்டு மூன்று தளங்களில் செயல்படும் வசனங்கள் படத்தை அறிவார்ந்த தளத்திற்கு நகர்த்துகின்றன.
கமிஷன் விசயம் வெளிவந்து தொலைக்காட்சி சேனல்கள் அலறுகின்றன.. சகதேவன் தொலைபேசியில் ராயிடம்…
இந்த நியூஸ்ங்கிறது வரும் போகும். ஆனா அந்த நீயூஸ குடுத்தவன் இனி வரப்போறதில்லை… தெரிஞ்சதா? 11: 30லருந்து 1: 30 வரை கைதேரி சகாதேவனை டிவி சேனல்கள் பேசிமுடிச்சாச்சு. இப்போ ஏதோ ஒரு போலீசுகாரன் ஒருத்தன பஸ்ஸுல வச்சு கொன்னத காமிக்க ஆரம்பிச்சுட்டானுக.. ஒரு விசயத்தோடமுக்கியத்துவம் அவ்வளவுதான்…ஒரு எறும்பு செத்த நியூஸூங்கிறது அடுத்து ஒரு தவளை சாகிறவரைக்கும்தான்…தவளை செத்த நியூஸு பாம்பு சாகும் வரை…பாம்பு செத்த நியூஸ் பருந்து சாகிறவரை… அவ்வளவுதான்..
கமிஷன் விசயத்தை அம்பலப்படுத்திய ராயின் தோழன் குடும்பத்தோடு ஒளிந்திருக்கும் தருணத்தில்..
நான் எத்தனைதடவை சொன்னேன்… இது வேண்டாம்னு… கம்யூனிஸ்டாம் கம்யூனிஸ்ட்…பொழப்புக்கு இருந்த கடையும் போயி.. இப்ப… வாயத்தொறந்தா பயம்.. தும்மினா பயம்….
சரி.. இப்ப ஒனக்கு என்ன வேணும்…
கொஞ்சம் பால் பவுடரும்.. பிரட்டும்..
ராயை மருத்துவமனையில் சேர்த்து அனிதா டாக்டருடன் உரையாடுகையில்..
நான் ஏற்கனவே சொல்லிருக்கேன்… ஸ்டெரஸ் கூடவே கூடாதுன்னு…
டாக்டர்… ஹி இஸ் அ கம்யூனிஸ்ட் … சோ ஹி வில் ஹாவ் ஸ்ட்ரெஸ்…
எப்ப என்ன ஆயிப்போச்சு…இங்க பாரு… உங்களுக்கு முன்னும் உலகம் இப்படித்தான் இருந்தது… இப்பவும் உலகம் இப்படித்தான் இருக்கு.. உங்களுக்குப் பின்னாலும் உலகம் இப்படித்தான் இருக்கப் போகுது… எதுக்கு ஸ்ட்ரெஸ்… ரிலாக்ஸ்.. அன் கூல்…
டாக்டர் உங்களுக்கு ஒரு பெரிய வில்லா இருக்கு… நாலு ஃளாட்… நாலு மெட்ரோவில… நாலு கார்கள்… இரண்டரை லட்சம் சம்பளம்… அது போக மத்தது… நீங்க ரிலாக்ஸ் பண்ணலாம்…
ஓ.. நான் மறந்துட்டேன்.. பழைய ஜே.என்.யூ. தீப்பொறிகிட்ட பேசிக்கிட்டு இருக்கிறதை…
‘உங்களுக்கு வளர்ச்சியும் வேணும் கமிஷனும் குடுக்கமாட்டீங்க.. நீ என்ன சொன்னாலும் நாங்க கைதேரி சகாதேவன் பக்கம்தான்…’
உரையாடல்கள் மிகப்பெரும் பலமாக அமைந்திருந்தாலும் இயக்கம் இசை எல்லாம் கச்சிதமாக அகைந்த ஒரு படம்தான். நமக்கு எழும் கேள்வி.. நமக்குக் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் ஒரு நிலப்பரப்பில் சாத்தியமாகும் எளிமையான விசயங்கள் கூட ஏன் நமக்குச் சாத்தியமாகாமல் போகிறது என்பதுதான். கேரளத்துக்கு இணையான அல்லது கூடுதலாகக் கூட கொந்தளிப்பான அரசியல் சமூக வரலாற்றைக் கொண்டுள்ள தமிழகத்தில் ஏன் அரசியல் சினிமா அல்லது அரசியல் சமூக இயக்கங்களின் கொள்கைகளை செயல்பாடுகளை திரும்பிப்பார்க்கும் எந்த முயற்சியும் எழுவதில்லை. அங்கு கம்யூனிசத்தை முன்வைதத்து எழுப்பப்படும் கேள்விகளை இங்கு திராவிடக் கட்சிகளை முன்வைத்து எழுப்பமுடியும்தானே? முடியும்.. ஆனால் முடியாது…
ஜெயலலிதாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட அன்று ஒரு தொலைக்காட்சிச் சானலில் உணர்ச்சி மேலிட்ட தொண்டர்களுக்கு நடுவே, கவுன்சிலர் பெண்மணி ஒருவர், சேனல்காரர் நீட்டிய மைக்கைப் பிடித்துக்கொண்டு ‘ தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்பதற்கேற்ப எங்கள் அம்மா இன்று விடுதலையாகிவருகிறார்’ என்றார். பொன்மொழியின் பிற்பகுதி அவருக்குத் தெரிந்திருக்கவில்லையா? பதட்டத்தில் அப்படிப் பாதியை முழுங்கினாரா? இல்லை உண்மையை அவரறியாமல் சொன்னாரா தெரியவில்லை. கட்சிக்காரர்களின் இப்படியான செயற்கையான எதிர்வினைகள் தமிழகத்தில் புரிந்து கொள்ளத்தக்கதுதான். ஆனால் தமிழகத் திரைத்துறையினரின் போராட்டமும் கோஷங்களும் அபத்தத்தின் உச்சமாக இருந்ததை என்னவென்பது?. ‘இறைவனுக்கு தீர்ப்பளிக்க மனிதன் யார்? எனும் பொருள் கொண்ட பதாகைகளும் அதையொட்டி திரைஉலக படைப்பாளிகள் அளித்த பேட்டிகளும் நாம் என்ன மாதிரியான கலைச்செம்மல்களோடு வாழ்கிறோம் என்பதைப் புரிய வைத்தது. சமூக அரசியல் நிகழ்வுகளைக் காத்திரமான விவாதங்களுக்கு உட்படுத்த வேண்டிய படைப்பாளிகள், குறைந்தபட்சம் பொதுப்புத்தியில் மேலோட்டமாகத் தங்கியிருக்கும் ‘அறம்’ பற்றிய ப்ரக்ஞை கூட அற்றவர்களாய் உளறிக் கொட்டுவதை என்னவென்பது. வேடிக்கை என்னவென்றால் தமிழக ஆட்சியாளர்கள் தொடர்ந்து திருட்டு டிவிடி புழக்கத்தை வளர்த்து வருபவர்கள். கடுமையான, சார்பான தணிக்கைமுறையை அமுல்படுத்தி வருபவர்கள். இருந்தாலும் ஒரு மாதச்சம்பள நடுத்தரவர்க்கக் குமாஸ்தாக்களின் ஜாக்கிரதை உணர்வோடு சிந்திக்கும் ஸ்டார்கள், மெகாஸ்டார்கள், படைப்பாளிகளைக் கொண்டிருக்கும் தமிழ்த்திரையுலகை மளையாளத்திரையுலகோடு ஒப்பிட்டுப்பார்க்காமல் இருக்க முடியவில்லை.
அடுத்ததாக தற்போது இந்திய சினமா முழுக்கவும் வாரிசு நடிகர்கள் கலைஞர்கள் ஆதிக்கம்தான். மளையாளத் திரையுலகிலும் வாரிசுநடிகர்கள் இருந்தாலும் அவர்களின் பங்களிப்பு மற்றபகுதிகளில் போன்று தட்டையாக இல்லை. நம்முடைய வாரிசுகள் நடிகர்கள் எப்போதும் கோடிகளை நோக்கி ஓடுபவர்களாகவே இருக்கின்றனர். அடுத்ததலைமுறை எப்போதுமே ‘முந்தைய தலைமுறையின் தோளிலிருந்து பார்க்கும் வாய்ப்புப் பெற்றது’ என்று ஐன்ஸ்டைன் சொன்னதைப் போல வாரிசுகளுக்கு இருக்கும் வாய்ப்புகளால் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தா விட்டாலும் பின்னோக்கி நகராமலாவதுஇருக்கலாமல்லவா?
இங்கே 42வயது நடிகர் பாடகர் திரைக்கதையாசிரியர் முரளி கோபி… மறைந்த நடிகர் பரத் கோபியின் புதல்வர் கேரள சமூகத்தின் அரசியல் போக்கை குறுக்குவெட்டாய் பிளந்துபார்க்கும் ஞானமும் அறமும் கொண்டவராய் நிற்கிறார். கேரளத்தின் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் வாழும் மனிதர்களை வகைமாதிரியாகக் கொண்ட பாத்திரங்களை உலவ விட்டு அவரவர்களின் தர்க்க நியாயங்களினூடாக ஒரு ஆரோக்கியமான விவாதத்தை முயற்சித்துப் பார்த்திருக்கிறார். திரைப்படக்கலைபற்றிய புரிதலும், விசய ஞானமும், சமூகத்தை விமர்ச்னக்கண்ணோடு பார்க்கும் பக்குவமும் கொண்ட ஒரு திரைக்கதையாசிரியராக மிளிரும் முரளிகோபியிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம்.
–இரா.ப்ரபாகர்
http://prabahar1964.blogspot.in/2014_11_01_archive.html