வயதில் மூத்தவராக இருந்தாலும் தென்னிந்திய மக்கள் தொடர்பாளர் யூனியனின் ‘செல்லப்பிள்ளையாகவே’ இருந்து வந்தவர் சங்கர் கணேஷ். யூனியனின் மற்ற உறுப்பினர்களும், இதழியல் துறை நண்பர்கள் எல்லோரின் மனதுக்கும் மிகவும் நெருக்கமானவராதலால், அனைவருமே அவரை எதாவதொரு செல்லப்பட்டப்பெயர் வைத்தே அழைத்து வந்தனர். அந்த அன்பு விளிப்புகளுக்கு இனி வழி இல்லை. நேற்று அதிகாலை அவர் தனது 77 வயதில் விழிமூடினார்.
ஹல்லோதமிழ்சினிமா.காம் அன்பு நிறைந்த சங்கர் கணேஷ் அவர்களின் மறைவை நிரம்பிய விழிகளுடன் வாசகர்களுக்கு அறிவிக்கிறோம்.
அவர் குறித்து இயக்குனர், நண்பர் பாலன் அனுப்பியுள்ள சிறுகுறிப்பு;
திருநெல்வேலியை சேர்ந்த சங்கர்கணேஷ், சென்னை திருவேல்லிக்கேனிக்கு வந்த
பிறகு வீனஸ் மூவிஸ் ரத்தினம் அவர்களிடம் திரைப்பட விநியோகம், தியேட்டர்
ஒப்பந்தம் போன்றவற்றில் வேலை பார்த்திருக்கிறார். பிறகு முக்தா பிலிம்ஸ்
தேன்மழை படத்தை விநியோகம் செய்தவர், ஒரு புகைப்பட கலைஞராக சுதேசமித்ரன்
பத்திரிகையில் சேர்ந்தவர், அங்கு பதினெட்டு ஆண்டுகள் பணியாற்றிவிட்டு,
பிறகு, அத்தை மகள் என்கிற படத்திற்கு மக்கள் தொடர்பாளராக பணியாற்றி
இருக்கிறார்.
பிறகு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களிடம்
உதவியாளராக ஏழு வருடம் உதவியாளராக வேலை செய்திருக்கிறார். அன்னைநாடு
பத்திரிகையில் சில காலம் வேலை பார்த்தவர், ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது
படம் உட்பட நான்கு படங்களுக்கு புகைப்பட கலைஞராக வேலை
பார்த்திருக்கிறார்.
திரைத்துறையின் செய்திகளை தங்கி வந்த ‘சிலுக்கு சினிமா’ என்கிற
பத்திரிக்கையை ஆறு வருடம் நடத்தியவர், ஐந்து ஆண்டுகள் பி.ஆர்.ஓ.யூனியன்
நிர்வாகியாக பணியாற்றினார். சில ஆண்டுகளாக தெலுங்கு சாக்சி பத்திரிகையில்
எழுதி வந்தார்.
இவருக்கு சிறந்த மக்கள் தொடர்பாளருக்கான விருது வி4 எண்டர் டைமெண்ட்
அமைப்பு வழங்கி கௌரவித்துள்ளது. தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர்
யூனியன் மூத்த உறுப்பினர்களை கௌரவித்த போது இவரையும் கௌரவித்து
பாராட்டியுள்ளது.
இவருடைய மனைவி பெயர் லலிதா. சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.
இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.