சினிமா துறையில் இந்திய அளவிலான தேசிய விருதுகள் செவ்வாயன்று அறிவிக்கப்பட்டன. அதில் தமிழ் சினிமா உலகிற்கும் சில விருதுகள் கிடைத்துள்ளன.

சிறந்த பிண்ணணிப் பாடகிக்கான விருது சைவம் படத்தில் ‘அழகே அழகு’ பாடலைப் பாடிய  உத்ராவிற்குக் கிடைத்துள்ளது. பத்து வயதே ஆகும் உத்ரா பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள் ஆவார்.  இப்பாடலை எழுதிய நா.முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசிரியர் விருது கிடைத்துள்ளது.
நா.முத்துக்குமார் சென்ற ஆண்டும் ‘தங்க மீன்கள்’ படத்தில் வந்த ‘ஆனந்த யாழை’ பாட்டுக்காக தேசிய விருது பெற்றார்.

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படத்தின் எடிட்டர் விவேக் ஹர்ஷன் சிறந்த எடிட்டருக்கான விருதை பெற்றுள்ளார். இதே படத்தில் நடித்த பாபி சிம்ஹா சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றுள்ளார்.

சிறந்த தமிழ்த் திரைப்படமாக ‘குற்றம் கடிதல்’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த குழந்தைகள் பட விருதை தமிழ்ப் படமான  ‘காக்கா முட்டை’ யும் மராத்தி படமான எலிசபெத் ஏகாதசியும் பெற்றுள்ளன. காக்கா முட்டையில் நடித்த சிறுவனுக்கு சிறந்த குழந்தைகள் நட்சத்திரம் விருது கிடைத்துள்ளது. காக்கா முட்டை படத்தை தனுஷ்ஷூம் வெற்றிமாறனும் சேர்ந்து தயாரித்துள்ளனர்.

சிறந்த நடிகர் விருது கன்னட நடிகர் விஜய்க்கும் (நானு அவனில்ல அவளு), சிறந்த நடிகை விருது கங்கனா ரெனாவத்திற்கும் (குயீன்) கிடைத்துள்ளது. சோட்டுஷ்கோன் என்கிற பெங்காலி திரைப்படம் சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவாளர் போன்ற விருதுகளை அள்ளிச் சென்றது.

‘ஓட்டால்’ என்கிற மலையாளப்படம் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது.

Related Images: