சுட்டெரிக்கும் கோடை காலத்தில் நமது கண்களை தனது ஒளிப்பதிவால் குளிர்வித்து வருகிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். மைனா, கும்கி என மலை கிராமத்தின் அடர்ந்த காடுகளையும், மலைப்பாதைகளையும் நம் கண் முன்னே நிறுத்தினார். ‘மான் கராத்தே’ , ‘காக்கி சட்டை’ படங்களில் வெளி நகர வாழ்க்கை, வெளிநாட்டு பாடல்கள் என தனது ஒளிப்பதிவில் வேறு விதமான ஜாலத்தை திரையில் கொண்டு வந்தார். தற்பொழுது ‘ தொப்பி ‘ படம் மூலம் மீண்டும் குரங்கனி கிராமத்தை தன் ஒளிப்பதிவால் வேறு ஒரு பிரம்மாண்டத்துடன் காட்டியுள்ளார்.
சுகுமார் ஒளிப்பதிவு செய்தால் படம் ஹிட் என்ற செண்டிமன்ட் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மத்தியில் நிலவுதே. அதைப்பற்றி உங்கள் கருத்து.
சந்தோஷமா இருக்கு, அந்த நம்பிக்கைக்கு நன்றி. இது வரைக்கும் நான் ஒளிப்பதிவு செய்த படங்கள் அனைத்தும் மக்களுக்கு பிடித்தமான கதைகள். நான் வேலை செய்த இயக்குனர்களும் நல்ல நண்பர்களாக ஆகவே இருந்துள்ளனர். சினிமா என்பது கூட்டு முயற்சிதானே எல்லாரும் நல்லா வேலை செய்தால். ஒரு இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் கணவன் மனைவி போலதான். கதைக்கு என்ன தேவையோ அத சரியான அளவில் கொடுக்கறதுதான்.
‘தொப்பி’ படத்தில் உங்களை நாயகனாக நடிக்க கேட்டார்களாமே… உண்மையா… அப்படியிருந்தால் ஏன் சார் நடிப்புல இறங்கல….?
(சிரிப்புடன்……) ஐயோ, ஆமாங்க. ‘தொப்பி’ இயக்குனர் யுரேகா என்னிடம் இந்த கதையைக் கூறி நீங்கதான் நடிக்கனும்னு கூறினார். எல்லாருக்கும் கண்ணாடிய பார்க்கும்போது நாமும் அழகுதானே என்று தோணும். அந்த மாதிரிதான் ஆரம்பத்துல ஒத்துக்கிட்டேன். ஒரு பயம் எனக்குள்ள தட்டிகுட்டே இருந்தது. அதனாலேதான் நான் நடிக்கவில்லை ஒளிப்பதிவு செய்ய முடிவு செய்தேன்.
இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என தொழில் நுட்ப கலைஞர்கள் நடிப்பதை பற்றி தங்கள் கருத்து.
இன்னிக்கு நிலைமைக்கு தமிழ் சினிமாவுல பெரிய ஹீரோக்கள் மட்டும்தான் இருக்காங்க. ஒரு சின்ன படத்தில் நடிப்பதற்கு வணிகம் காரணங்கள் அவர்களுக்கு இடம் கொடுப்பதில்லை. இதுதான் புது ஹீரோக்கள் வருவதற்கு முழு காரணமாக அமைந்துள்ளது. அதுல இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர்னு பேதம் எதுக்கு. நடிப்பு என்பது ஒரு கதாப்பாத்திரத்தின் வாழ்வு முறைதான் அதை புரிந்து கொண்டு செய்து காட்ட வேண்டும்.
நீங்கள் நடிக்க வேண்டிய படத்தில் இன்னொரு நடிகரை அறிமுக படுத்தியுள்ளீர்கள். அவர் அந்த வேலையை செம்மையாக செய்துள்ளாரா?
முரளிராம் நல்ல நண்பன் , இந்த படத்தில் நான் நடிக்க முடியவில்லை என்றதும் அந்த போலிஸ் கதாப்பாத்திரத்திற்கு இவர் கச்சிதமாக இருப்பார் என்று கூறினேன். இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் முரளி ராமை பிடித்திருந்தது. முரளி ராமும் இந்தக் கதைக்கு அவரது முழு உழைப்பை கொடுத்திருக்கிறார்.
‘தொப்பி’ எந்த மாதிரியான ஒரு படம். ‘தொப்பி’ கதைக்கு ஒளிப்பதிவு எவ்வளவு முக்கியாதுவம் வாய்ந்ததாக இருக்கும்.
தொப்பி ஒரு மலைவாசி இளைஞனின் லட்சியம் மற்றும் அதற்கு ஏற்படும் தடைகள் பற்றி கூறும் கதை. இந்தக் கதையின் ஆழத்தை புரிந்து… அதற்கு என்ன அம்சங்கள் தேவையோ. அதை செய்துள்ளோம். எனது எல்லாப் படங்களிலும் செய்வது போல கதையை மிஞ்சாமல் ஒளிப்பதிவு செய்து இருக்கிறேன்.
பாடல்களில் உங்க ஒளிப்பதிவு பாணி வித்தியாசமாக உள்ளதே.. ஏதேனும் பிரத்யேக காரணமாக உண்டா?
அப்படி ஒன்றும் இல்லை. பாட்டுக்கு என்ன தேவைன்னு இயக்குனர், நடன இயக்குனர் கேட்கிறார்களோ அதை செய்கிறேன். 15 வருட காலம் புகைப்படத்துறையில் இருந்ததால் ஃப்ரேமிங் மற்றும் கலரிங் எனக்கு கொஞ்சம் தெரியும் அதற்கேற்றவாறு சில ஷாட்கள் அமைப்பேன். கடைசியில் பாட்டு ஃபீல் பண்ணனும், வரிகள் இசையும் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
‘தொப்பி’ படத்தில் ‘இச்சு இச்சு’ பாடல் பரவலா பேசப்படுகிறது. அதில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள்.
‘இச்சு இச்சு’ ஒரு மான்டேஜ் பாடல். இதற்கெடுத்த காட்சிகள் அனைத்தும் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்து ப்ரீ டைம்ல தான் எடுத்தோம். காட்சிக்கேத்த சூழ்நிலைகள் அமையாத பொழுது அந்த கால்ஷீட்டை வீணடிக்காமல் இந்த பாடலுக்கான காட்சிகளை எடுத்தோம். வைரமுத்து சார் வரிகளும், இசையும் கூடுதல் பலமாய் அமைந்தது.
எதிர் காலத்துல ஒளிப்பதிவாளர் சுகுமார்… நடிகர் சுகுமார் ஆயிடுவாரா?
கண்டிப்பா என்னால் பண்ண முடியும் என்ற நம்பிக்கை, தையிரியம் எனக்கு தெரியும்பொழுது நடிப்பேன். ஒளிப்பதிவில் இப்பொழுது முழு கவனம் செலுத்தி வருகிறேன். ஒரு நேரத்தில் ஒரு படம் என்று ஓடிக் கொண்டிருக்கிறேன்.
மைனா, கும்கி இப்பொழுது ‘ தொப்பி ‘ என்று குரங்கனி கிராமத்தில் படப்பிடிப்பு ஏதேனும் காரணம் இருக்கிறதா ?
கதைக்களம் மலை கிராமம் என்று இருப்பதால்தான் அங்கே படப்பிடிப்பு நடத்துகிறோம். இதற்கெல்லாம் மேலாக அந்த கிராமத்தின் அழகு அதன் மக்கள் என்று அடுக்கி கொண்டே போகலாம். அங்கே இருக்கும் மக்கள் எங்களை அவர்களுள் ஒருவராக பார்த்துக் கொண்டனர். இருப்பினும் ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் கண்டிப்பாக இருந்திருக்கிறது… ‘தொப்பி படத்திலும் அந்த வித்தியாசத்தை உணர்வார்கள்.