’என்ன காரணத்துக்காகவும் தனது புகைப்படம் பத்திரிகைகளில் வந்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தவர் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். இதற்காகவே தனது சொந்தப்பட விழாக்களில் கூட அவர் தலைகாட்டுவதில்லை.
ஆனால் காலத்தின் கோலம் பாருங்கள். இன்று அவரது சில சொத்துக்களை வங்கிகள் ஏலம் போடும் விளம்பரத்தில் அவர் படம் தினசரிகளில் வெளியாகியிருக்கும் அவலம் நிகழ்ந்திருக்கிறது.
ஆரமபத்தில் சில கோடி பட்ஜெட்களில் படங்களைத் தயாரித்து வந்த ஆஸ்கார் ரவி, அன்னியன், தசாவதா£ரம் படங்களை 30 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து மெகாபட்ஜெட்டில் தயாரித்தார்.
அடுத்து, ஐ படத்தை 75 கோடி பட்ஜெட்டில் தயாரித்தார்.
அதுமட்டுமல்ல, ஒரே நேரத்தில் பல படங்களையும் தயாரித்து வந்தார்.
அதாவது சுமார் 100 கோடி ரூபாயை ஒரே நேரத்தில் படத்தயாரிப்பில் முதலீடு செய்தார் ஆஸ்கார் ரவி.
இப்படி அகலக்கால் வைத்ததுதான் ஆஸ்கார் ரவிக்கு ஆபத்தாகிவிட்டது.
சில வருடங்களுக்கு முன்புவரை சாதாரண விநியோகஸ்தராக இருந்த ஆஸ்கார் ரவிக்கு ஏது இவ்வளவு பணம் என திரையுலகினர் பொறாமையில் பொசுங்கிப்போயினர்.
திமுக ஆட்சி இருந்தபோது… சன் டிவியின் பினாமிதான் ஆஸ்கார் ரவி என்று சொல்லப்பட்டது.
அதிமுக ஆட்சி மாறியதும்…சசிகலாவின் பினாமி என்றனர்.
உண்மையில் ஆஸ்கார் ரவி, ஐடிபிஐ, ஐஓபி போன்ற வங்கிகளில்தான் பல கோடி கடன்களை வாங்கி படங்களைத் தயாரித்திருக்கிறார்.
குறிப்பாக ஐ படத்துக்காக மட்டுமே சுமார் 80 கோடிக்கு மேல் கடன் வாங்கி இருக்கிறார்.
ஐ படத்தின் பேரில் பல கோடி கடன் பெற்ற ஆஸ்கார் ரவி, கடனை அடைக்காமலே சாமர்த்தியமாக படத்தை வெளியிட்டார்.
இது தொடர்பாக ஐஓபி வங்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஐஓபி வங்கியில் வாங்கிய சுமார் 84 கோடி ரூபாய் கடன் மற்றும் வட்டியுடன் சேர்த்து 97 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாதினால், சென்னை அசோக் நகரில் உள்ள ஆஸ்கார் ரவியின் அலுவலகம், அபிராமபுரத்தில் அவர் வசிக்கும் வீடு, மற்றும் வேலூரில் உள்ள அவரது சந்தோஷ், சப்னா, சாந்தம் என மூன்று தியேட்டர்கள் ஆகிய சொத்துகளை பறிமுதல் செய்துள்ளது ஐஓபி வங்கி.
இன்னொரு பக்கம் ஆஸ்கார் ரவி மிகப்பெரிய கில்லாடி. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் வங்கியில் வாங்கிய கடன் தொகையில் பாதிக்குக்கூட தேறாது. திட்டமிட்டே இந்த ஏல ஏற்பாட்டுக்கு வழிவிட்டு வங்கிகளுக்கு பட்டை நாமம் சாத்திவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.