அவ்வப்போது கருத்து கந்தசாமி மாதிரி எதாவது ஒரு கருத்தை உதிர்த்துவிட்டு கண்டவர்களிடமும் வாங்கிக்கட்டிக்கொள்வது சுஹாசினிக்கு வழக்கம்.
’ஓ காதல் கண்மணி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், மவுசை மூவ் பண்ணத் தெரிந்தவர்கள் எல்லாம் எழுத்தாளராகிவிட்டார்கள். எழுதத் தெரிந்தவர்கள்தான் படத்தை விமரிசனம் செய்யவேண்டும் என்று சுஹாசினி பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
‘ஓ காதல் கண்மணி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இச்சந்திப்பில் பேசிய சுஹாசினி மணிரத்னம், பத்திரிகையாளர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். அவர் கூறியதாவது:
மெட்ராஸ் டாக்கீஸில் இருந்து ஒரே ஒரு வேண்டுகோள்தான். எங்களைவிட நீங்க பலம் வாய்ந்த பேனாவை உங்க கையில வைச்சுட்டு இருக்கீங்க. எப்படி தகுதியுள்ளவர்கள்தான் படத்தில் நடிக்க முடியுமோ, ஒளிப்பதிவு பண்ண முடியுமோ, ரஹ்மான் மாதிரி மியூசிக் தெரிஞ்சவங்கதான் மியூசிக் பண்ண முடியுமோ அதேமாதிரி எழுதத் தெரிஞ்சவங்கதான் விமரிசனம் எழுதணும். இந்தப் படத்தைப் பத்தி எல்லாம் எழுதணும். நீங்க எல்லாம் இருக்கும்போது எல்லோரையும் எழுத விட்டுடாதீங்க. முதல்ல நீங்க வந்து இந்தப் படத்தைப் பார்த்துட்டு, இந்தப் படத்தைப் பத்தின விஷயங்களை எழுதுங்க.
இப்போ கம்ப்யூட்டர் உலகத்துல, மவுஸ் மூவ் பண்ணத் தெரிஞ்சவங்க எல்லாம் எழுத்தாளராயிட்டாங்க. அப்படி விடவேண்டாம். நீங்க எல்லாம் இவ்வளவு தகுதியுள்ளவர்களாக இருக்கும்போது எதுக்கு மத்தவங்களை எழுத விடறீங்க. உங்களை நம்பிதான் நாங்க இருக்கோம். அதனால், இந்தப் படத்தைப் பத்தி நல்லா எழுதணும்ணு வேண்டிக்கறேன்.”
ஓகே சுஹாசினி கண்மணி லட்சக்கணக்கான ஆளுங்க கைய கட்டிப்போடுற மாதிரி நீ……ளமா கயிறு வாங்கிக்குடுங்க இணையத்துல எழுதுற எல்லார் கையையும் கட்டிப்போட்டுரலாம்.
சுஹாசினியின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலரும் சுஹாசியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.