இயக்குனர்கள் ராகமதுரவன், அற்புதன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணிபுரிந்த லாரா இயக்குனராக களமிறங்கும் படம் ‘விந்தை’. அவரிடம் உரையாடியபோது..

‘விந்தை’ யின் கதைக்களம் விந்தையானதா ?
கதைக்களம் விந்தையானதா என்றால் இல்லை. வழக்கமான காதல் மற்றும் அதைச் சுற்றிய நகைச்சுவையே கதையின் களமாக இருக்கின்றன. ஆனால் அதன் ஊடாடியிருக்கும் செய்தியும், கதையும் வித்தியாசமானவை.

விந்தையின் கதை எப்படி?
திடீரென ஒரு இளம்பெண் காணாமல் போகிறாள். அவளது குடும்பமே அவளைத் தேடியலையும் போது தேவையேயில்லாமல் ஹீரோவும் அவனது நண்பர்களும் சந்தேகவலையில் விழுகிறார்கள். ஹீரோதான் அவளை காதலித்து கடத்திக்கொண்டு போய்விட்டான் என தவறான எண்ணம் ஏற்பட்டு விடுகிறது. ஹீரோவுக்கும் ஹீரோயினுக்குமிடையே மோதல் உண்டாகிறது. காதல் உண்டாகவில்லை. அதன் பின் என்ன ஆனது என்பது நகைச்சுவையாக சொல்லியிருக்கிறோம்.

காதல் இல்லை.. ஆனால் காதல் படம். வேறு ஏதும் வித்தியாசமான முயற்சியா?
அப்படியெல்லாம் இல்லை. இப்போதைய ஹிட் மந்திரம் கதை தான். கன்னட சினிமாவின் மீதான இதுநாள்வரையிலான பார்வையை ‘லூசியா’ மாற்றிப் போடவில்லையா? கதை தான் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதற்கு இது சமீபத்திய உதாரணம். இதுவரை படம் பார்த்தவர்கள் அனைவரும் ‘நல்ல படம் எடுத்திருக்கீங்க தம்பீ’ என்று கைகுலுக்கிவிட்டுப் போனார்கள். இது கமர்ஷியல் ஹிட்டாகவும் மாறும் என்பது என் நம்பிக்கை. பல படங்களில் காமெடி என்றால் இரட்டை அர்த்த வசனங்கள் என்று இருக்கிறது. இது அப்படியில்லாமல் தற்போதைய சினிமாவிலிருந்து விலகி நிற்கும் வித்தியாசமான படமாக வந்திருக்கிறது.

ஏன் இப்போது பெரும்பாலும் காமெடியை நோக்கி இயக்குனர்கள் பயணிக்கிறார்கள் ?
அதுதானே இப்போது நம்பகமாக இருக்கிறது. என்னுடைய குருக்கள் ராசு மதுரவன், அற்புதன் இருவருமே காமெடி ரசனை அதிகம் உள்ளவர்கள். ஆனால் இருவருமே காமெடி படம் எதுவும் எடுத்ததில்லை. அதுதான் எனது பாணியாகவும் ஆகியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் காமெடியாகத் தெரிந்தாலும் “என்னப்பா இப்படியாடுச்சே..” என்று வருத்தப்படுகிற விஷயம் ஒன்று படத்தின் உட்பொருளாக இருக்கிறது. அதுதான் பெரிய அளவில் விவாதிக்கப்படவேண்டிய விஷயம். அந்த மருந்தைத் தான் காமெடி என்னும் இனிப்பு கலந்து தந்திருக்கிறேன்.

படத்தின் நாயகன், நாயகி பற்றி..
மாஸ்டர் மகேந்திரன் அறிமுகமானது ‘விழா’ படத்தில். இப்படத்தில் மாஸ்டர் என்கிற பெயர் அவரிடமிருந்து மறைந்து போய்விடும் என்கிற அளவுக்கு அவர் சிரத்தையெடுத்து நடித்திருக்கிறார். சினிமாவுக்காகவே வளர்ந்த நடிகர்களுக்கு மத்தியில் சினிமாவுக்குள்ளேயே வளர்ந்தவராக இருக்கிறார். ஏற்ற இறக்கங்கள் நிறைய சந்தித்தவர். எல்லா பாத்திரத்தையும் நடிக்கும் மனத்திறன் உள்ளவர். நாயகி மனிஷா ஜித். இவரும் குழந்தை நட்சத்திரமாக ‘கம்பீரம்’ படத்தில் நடித்தவர். ‘நண்பர்கள்’ என்கிற படத்தில் நாயகியாகவும் நடித்திருக்கிறார். மனோபாலா, பாஸ்கர், ‘காதல்’ சரவணன் போன்ற பலரும் படத்தில் உடன் நடித்திருக்கிறார்கள். சின்ன பட்ஜெட் படம் தான். ஆனால் சிறப்பாக செய்திருக்கிறோம். ரசிகர்கள் பாராட்டுதல்களுக்காக காத்திருக்கிறோம்.

Related Images: