மேலே இருக்கும் படம் ஒரு கம்ப்யூட்டர் தானாகவே வரைந்த ஒரு நிலப்பரப்பு. இதை வரைந்தது கூகுளின் பிம்பம் உணரும் சாப்ட்வேர்(image detection software). கம்ப்யூட்டர் தானாகவே எப்படி யோசித்து இப்படியொரு படம் வரைய முடியும் என்கிற கேள்விக்கு டெக்னாலஜி தரும் பதில் ‘செய்ற்கை மூளை’.
நரம்பு மண்டல இணைப்பு(neural network) எனப்படும் செயற்கையான நரம்பு மண்டல இணைப்புக்கள் (circuits) கொண்ட கம்ப்யூட்டரில் பத்து முதல் பதினைந்து அடுக்கு நியூரான் இணைப்புக்கள் உள்ளன. ஒரு புகைப்படத்தை இந்த கம்ப்யூட்டரிடம் ஸ்கேன் செய்து கொடுத்தால் அதில் உள்ள
வெவ்வேறு முக்கியமான விஷயங்களை வெவ்வேறு அடுக்குகள் கண்டுபிடித்து வைத்துக் கொள்கின்றன. உதாரணமாக படத்தில் உள்ள பொருட்களின் உருவ வடிவத்தை மட்டும் முதல் அடுக்கு கணித்துவைத்துக் கொள்ளும். அடுத்து நிறம், தொடர்பு, தூரம் போன்ற பல விஷயங்கள் பல
அடுக்குகளில் பிரித்து வைத்துக்கொள்ளப்படும்.
இந்த நரம்பு மண்டல இணைப்பு கொண்ட சாப்டவேருக்கு கூகுள் விஞ்ஞானிகள் லட்சக்கணக்கான படங்களை ‘படிக்க’க் கொடுத்தார்கள். அதற்குப் பின் இந்த சாப்டவேருக்கு வானத்து மேகங்கள் அடங்கிய போட்டோவைக் கொடுத்து அதிலிருந்து உருவங்களை கற்பனை செய்யச் சொன்னார்கள்.
சிறுவயதில் வானத்தில் மேகங்களைப் பார்த்து யானை போல, குதிரை போல, ராட்சதன் போல தெரிகிறது என்று சிறுவர்கள் கற்பனை செய்வார்களே அதைப் போல. அப்படி கம்ப்யூட்டர் கற்பனை செய்த படங்கள் இதோ.
இதுபோல, ஒரு படத்தை வேறு வகையான படமாக கற்பனை செய்தல். புதிதாக எதிலும் இல்லாத ஒன்றை கற்பனை செய்தல் போன்ற விஷயங்களில் இந்த சாப்டவேர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிறிதொரு காலத்தில் சுயமாக சிந்திக்கும் கம்ப்யூட்டர் கனவும்
காணக்கூடிய சாத்தியங்களும் உண்டு. ‘ஐ ரோபாட்’ படத்தின் சான்னி நிஜமாகவே ஒரு நாள் உருவாகலாம்.