கங்காருகள் எல்லாம் கம்யூனிஸ்டுகளா? எப்போது அரசியலுக்குப் போயின ? என்று குழம்பாதீர்கள். கங்காருகள் எல்லாம் நொட்டாங்கைப் பழக்கமுள்ளவை என்று தற்போது அறிவியலறிஞர்கள் கண்டுபிடித்திருப்பதைத் தான் அப்படிச் சொல்கிறோம்.
ரஷ்யாவில் பீட்டர்ஸ்பர்க் யுனிவர்சிட்டியைச் சேரந்த விஞ்ஞானிகள் உலகின் பல்வேறு வகையான கங்காருகளை ஆராய்ந்த பொழுது அவை முக்கியமான செயல்களை செய்ய இடது கையை பயன்படுத்துகின்றன என்று கண்டார்கள். மூக்கை சுத்தப்படுத்துதல், இலைகளை பறித்தல்,
மரக்கிளைகளை வளைத்தல் போன்ற வேலைகளுக்கு அவை இடதுகையையே அதிகம் பயன்படுத்துகின்றன.
இடதுகைக்காரர்களுக்கு வலது மூளை ஸ்ட்ராங்காக இருக்கும். மனிதர்களில் இடது, வலது மூளையை பிரிக்கும் நரம்புப் பாலம் உள்ளது. அதுவே இடது மூளையை உடலின் வலது உறுப்புக்களுடனும், வலது மூளையை உடலின் இடது உறுப்புக்களுடனும் இணைக்கிறது. அதனால் தான் வலது மூளை பலமாயுள்ளவர்கள் இடதுகை பழக்கக்காரர்களாக உருவாகிறார்கள் என்று நம்பி வந்தனர் விஞ்ஞானிகள். ஆனால் கங்காருகளுக்கு இந்தமாதிரி இடது, வலது மூளை பிரிவுப் பிரச்சனைகள் இல்லை.
அதனால் பெரும்பாலான கங்காருகள் ஏன் இடதுகை பழக்கமுள்ளதாக இருக்கின்றன என்ற கேள்விக்கான விடை அல்ஸீமர், ஸிசோப்ரனியா போன்ற தீவிர மனோ வியாதிகளுக்கு தீர்வு தரலாம் என்று நம்பிக்கையாகச் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.