எடிட்டர் கிஷோர். தமிழ் சினிமாவின் அடையாளமான கோடம்பாக்கத்தின் பிரபலமான படத்தொகுப்பு கலைஞர்களில் ஒருவர். கடந்த மார்ச் (2015) மாதம் தனது பணியிடத்திலேயே மயங்கி விழுந்து நினைவு திரும்பாமல் மருத்துவமனையில் இறந்து போனார்.
தமிழ் சினிமாவின் பாலா, வெற்றிமாறன் போன்ற முன்னணி இயக்குநர்களின் திரைப்படங்களுக்கு தொகுப்பாளாராக பணிபுரிந்தவர். “ஆடுகளம்” படத்தொகுப்பிற்காக தேசிய விருது பெற்றவர். பரதேசி, மாப்பிள்ளை, எங்கேயும் எப்போதும், காஞ்சனா, எதிர்நீச்சல் போன்ற தமிழ்ப்படங்கள் மற்றும் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட 70-க்கும் மேற்பட்ட படங்களுக்கு பணியாற்றியவர்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவரான கிஷோர், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். சினிமாவில் ஆளாகும் ஆசையுடன் நுழைந்தவர் தற்செயலாகவே எடிட்டிங் துறைக்குள் வந்து சேர்ந்தார். பிரபல படத் தொகுப்பாளர் வி.டி விஜயனிடம் பயிற்சி எடுத்து பணியாற்றியவர். பின்னர் கடும் உழைப்போடும், துறைசார் நுட்பங்களை கற்றறிந்தும், தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய தொழில் நுட்பக் கலைஞராக உருவெடுத்தார்.
திருமணமாகாத இவர், இயக்குநர் வெற்றிமாறனின் ”விசாரணை” திரைப்படத்தின், தொகுப்பு பணியின் போது, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால், மயங்கி விழுந்து நினைவு திரும்பாமலேயே மரணமடைந்தார்.
தமிழ் சினிமாவில் புதிய புதிய தொழில்நுட்பங்களைப் பேசுவோரும், உலக சினிமாக்களை அணு அணுவாய் ரசிப்போரும் ஏராளமாய் உண்டு. ஆனால் ஒரு தொழில் நுட்பக் கலைஞனின் மரணம் குறித்து அவர்கள் தீவிர ஆய்வு எதையும் செய்யவில்லை. கிராஃபிக்ஸோ இல்லை புதிய கேமாராவுக்கோ இருக்கும் மதிப்பு தொழிலாளிகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உயிர்களுக்கு இல்லை. கிஷோரின் மரணம் குறித்து பேசியவர்களும் ஒரு பொதுவான மனிதாபிமானத்திற்காக பேசினார்களே அன்றி அந்தத் துறையின் பிரச்சினைகள் குறித்து வாய்திறக்கவில்லை.
எடிட்டர் கிஷோர் மரணம் குறித்து ஊடகங்களில் செய்தி வந்தாலும் அது அவரது படங்கள் அவற்றின் பிரபலங்களை வைத்தே பேசப்பட்டது. ஒரு இணைய வீடியோவில் அவரது உறவினர் – அவரும் சினிமாத் துறைதான் – பேசும் போது, “கிஷோருக்கு ஏற்பட்ட கதியை வைத்து அவர் ஏழை என்பதாக ஊடகங்கள் கதை திரித்ததாக” குறைபட்டுக் கொண்டார். மேலும், “கிஷோர் நினைத்தால் ஒரு ஐம்பது பேருக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி கொண்டவர், அப்படி சினிமாவில் சம்பாதித்தார்” என்பதை வலியுறுத்தினார். ஆக, கிஷோர் என்பவர் ஏழையா பணக்காரரா என்ற அந்தஸ்து குறித்தே அவர் கவலைப்பட்டார்.
நெருக்கடியான காலக்கெடுவுக்குள் ஒப்புக்கொண்ட பணிகளை எப்படி முடித்துக் கொடுப்பது? என்ற தொடர் மனஅழுத்தமே எடிட்டர் கிஷோர் மரணத்துக்கு அடிப்படை. இந்த மருத்துவ உண்மை, அதன் சமூகவியல் பரிமாணங்கள் குறித்தெல்லாம் யாரும் பேசுவதில்லை. ஒரு வகையில் தமிழ் சினிமாவின் எல்லா வகையான நோய்களோடும் இம்மரணம் தொடர்புடையது.
பாலாவின் பரதேசி திரைப்படத்தில் ஒளிப்பதிவாளாராக பணியாற்றிய திரு செழியன் அதே படத்தில் எடிட்டராக பணியாற்றிய கிஷோரை நினைவு கூர்கிறார் (நன்றி தி இந்து):
”..சில நேரங்களில் அவர் எடிட் செய்வதை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தால் அவர் இருக்கும் அறையின் கதவைத் திறப்பேன். கணினியின் முன்னால் இருக்கும் நாற்காலியைத் திருப்பி வேறு திசையில் அமர்ந்து கண்கள் மூடி தியானம் போல ஆழ்ந்த யோசனையில் இருப்பார். உள்ளே யார் வருகிறார்கள் என்ற கவனம் இருக்காது. நான் கதவை மெதுவாக சாத்திவிட்டு திரும்பி விடுவேன். செய்கிற வேலையை அவர் நேசிக்கிற விதம் அவர்மேல் எனக்கு பெரிய மரியாதை கொடுத்தது. சிலநாள் நள்ளிரவு வரை படத்தொகுப்பு செய்வார். ஒருநாள் அதிகாலை அலுவலகத்துக்குப் போனபோது தனியாக படத்தொகுப்பு செய்துகொண்டிருந்தார்.
‘என்ன கிஷோர்..’
‘ஒண்ணுமில்ல சார்..அந்த சீன்ல ரிதம் செட் ஆகல அதுதான்..’
எனக்கு படத்தொகுப்பின் ரிதம் குறித்து அவருடம் பேச விருப்பமாக இருந்தது. வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தேன்.
‘அது என்ன கிஷோர்..மானிட்டருக்கு முன்னால அமைதியா இருக்கீங்களே.. அது என்ன தியானமா..யோசிப்பா..’
“சார்… சில சீன் அப்படியே வந்துரும் சார்.. சில சீன்.. ரிதம் செட்டே ஆகாது…” என்று பேசத்துவங்கி, வி.டி விஜயன் அவர்களிடம் தான் உதவியாளராக இருந்தபோது கட் கண்ணுக்குத் தெரியாமல் எப்படி இரண்டு ஷாட்களை இணைப்பது, ஒரு காட்சியின் அசைவும் அடுத்த காட்சியின் அசைவும் எப்படி இணையும், ஒரு காட்சியின் அசைவில் எந்த ஃபிரேமில் கட் செய்து அதை அடுத்த காட்சியின் எந்த ஃபிரேமுடன் இணைத்தால் அந்த கட் தெரியாது? ஒரு வைட் காட்சியும் ஒரு க்ளோசப்பும் எப்படி இணையும், எப்படி இணையாது என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.
இந்த சிறிய வயதில் அவருக்கு படத்தொகுப்பில் இருந்த ஞானமும் தேடலும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ”
படத்தொகுப்பு
ஒரு காட்சியின் அசைவில் எந்த ஃபிரேமில் கட் செய்து அதை அடுத்த காட்சியின் எந்த ஃபிரேமுடன் இணைத்தால் அந்த கட் தெரியாது?
…நமது படங்களில் சராசரியாக குறைந்தபட்சம் 2,000 ஷாட்கள் இருக்கின்றன. அதுவும் டிஜிட்டல் வந்த பிறகு இந்த ஒவ்வொரு காட்சியும் சராசரியாக ஐந்து டேக்குகள் வரை எடுக்கப்படுகின்றன. இந்த பத்தாயிரத்தில் இருந்து சரியான 2000-த்தை தேர்வு செய்யவேண்டும். அதை வரிசையாக்கிப் பார்க்க வேண்டும். அதற்குள் ஒரு லயத்தை உருவாக்க வேண்டும். இதுபோல ஒரே நேரத்தில் ஐந்து படங்கள். ஒன்று ஆக்ஷன், இன்னொன்று த்ரில்லர், இன்னொன்று ரொமான்ஸ், இன்னொன்று இன்னொரு வகை இப்படி பலவகைப் பட்ட காட்சிகளோடு ஒரு இளைஞன் பணிபுரியவேண்டும்.
இதில் ஒரு படத்தை உரிய நேரத்தில் தயார் செய்து கொடுக்க வேண்டிய நிர்பந்தங்கள் காலக்கெடுக்கள் அதற்குள் பணிபுரியவேண்டும். அந்த மன அழுத்தமும் காட்சிகளின் இயல்பான துரத்தலும் கிஷோரின் மூளையைப் பாதித்திருக்கிறது.”
– என்று துயரத்துடன் நினைவு கூறுகிறார்.
ஆனால் இந்தக் காலக்கெடு, நிர்ப்பந்தம், மன அழுத்தம் அனைத்தும் ஒரு தயாரிப்பாளருக்கோ, இல்லை பிரபல நட்சத்திரங்களுக்கோ இல்லாமல், வெளியே தெரியாத ஒரு தொழில் நுட்பக் கலைஞருக்கு மட்டும் ஏன் இருக்க வேண்டும்? இல்லை, மற்றவருக்கு இருக்கும் நிர்ப்பந்தங்களிலிருந்து இத்தகைய தொழில் நுட்பக் கலைஞர்களின் நிர்ப்பந்தம் எப்படி வேறுபடுகிறது? இந்தக் கேள்விகளுக்குள் செழியன் போகவில்லை. ஐந்தில் ஒரு பங்கு காட்சிகளை தெரிவு செய்வது, ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் வேலை செய்வது இவையெல்லாம் ஒரு தொழில் எனும் முறையில் முறைப்படுத்த முடியாத ஒன்றா?
காட்சிகளுக்கிடையில் ‘ரிதம்’ செட்டாவதைப் பற்றி கவலைப்பட்ட அந்த கலைஞனின் வாழ்க்கை, தொழில், உடல் நலம் இவற்றுக்கிடையே ‘ரிதம்’ அமையவில்லையே, ஏன்?
“ஆடுகளம்” படத்தில்தான் கிஷோருக்குத் தேசிய விருது கிடைத்தது. அதன் இயக்குநர் வெற்றிமாறன் நினைவுகூர்கிறார்:
“இன்னைக்கு ஃபீல்டுல நிறைய எடிட்டர்கள் இருக்காங்க. ஆனா, ஒருசிலர்தான் அதைத் தொழில்நுட்பமாவும் கலையாவும் ஒருசேரப் பார்ப்பாங்க. கிஷோர் அப்படி ஒருத்தர். அதுக்குக் காரணம், அவர் பழைய மேனுவல் எடிட்டிங்கும் தெரிஞ்ச இளைய தலைமுறைக் கலைஞன். ஒரு காட்சி திரையில் என்னவாக வரும் என்பதைக் கச்சிதமாகக் கணிப்பார். ஏன்னா, ஸ்கிரிப்ட் பேப்பரில் இருக்கும் காட்சிகள் படப்பிடிப்புத் தளத்தின் சூழ்நிலைகளால் தொலைந்துவிடும் அல்லது வேறு ஒன்றாக மாறி வந்திருக்கும். தொலைந்த, வேறொன்றாக மாறிய காட்சிகளை எடிட்டர்தான் கண்டுபிடிச்சு மீட்டு எடுக்கணும். இப்படி ஒன்று, வேறு ஒன்றாக மாறி இருப்பதையும் அதைக் கண்டுபிடித்துக் காட்சியாக்குவதும் கிஷோருக்கு ரொம்பப் பிடிச்ச சவால். இப்போ யோசிச்சா, கிஷோர்கிட்ட எப்போ என்ன பேசினாலும் அது சினிமா சம்பந்தப்பட்டதாகவே இருந்திருக்கு. அவரோட பெர்சனல் விஷயங்களைப் பத்தி நான் எதுவும் கேட்டதும் இல்லை… அவர் சொன்னதும் இல்லை. ரொம்பச் சின்ன வயசுலயே 50 படங்கள், தேசிய விருதுனு உச்சம் தொட்டவர், மரணத்தையும் அதே அவசரத்தோடு எதிர்கொண்டு விட்டார்”.
மரணம் ஒருவரின் பெர்சனல் என்றால் அந்த மரணத்தின் தோற்றுவாய் ஒரு கலையின் சுமையாகவும் இருக்கிறதே! ஓநாயக் குலச்சின்னத்தின் புல்வெளி, மேய்ச்சல் நிலம், சுற்றுச்சூழலை கவலைப்படும் மனது மனிதர்களையும் கவலைப்பட வேண்டாமா?
கிஷோரின் கலை ஞானம் குறித்து வியந்து பேசும் இயக்குநர் வெற்றி மாறன் ஒரு தமிழ் சினிமாவில் பணியாற்றும் எடிட்டிங் கலைஞர்களின் பணிச்சுமை, அது குறித்த சட்ட ரீதியான பாதுகாப்பு அல்லது பாதுகாப்பின்மை குறித்தெல்லாம் பெரிய பிரச்சினையாக கருதவில்லை. அவருக்கு ‘கலைதான்’ கண்ணுக்கு தெரிகிறது. அந்தக் கலைக்கு உயிர் கொடுக்கும் கலைஞர்கள் அல்லது தொழிலாளிகள் தெரியவில்லை. மேலும் தமிழ் சினிமாவில் அப்படி உயிரைக் கொடுத்து வேலை செய்யும் அளவுக்கு என்ன ‘கலை’ இருக்கிறது என்பது அந்தக் கலை தேவதைக்கே வெளிச்சம்!
தற்கால தமிழ் சினிமாவில் முக்கிய படத்தொகுப்பாளராக மதிக்கப்படும் பி. லெனின்,
”தமிழ் சினிமாவில் எழுத்து இல்லாமல் போய்விட்டது. கதையைப் பற்றி யாரும் பேசுவதில்லை. நேராக படப்பிடிப்புக்குப் போய்விடுகிறார்கள்.”
-என்று விமர்சிக்கிறார். அதாவது குப்பையில்தான் குண்டூசியை (கதையை) தேடுகிறோம் என்கிறார். உண்மையும் அதுதான்!
நெகடிவ் தொழில்நுட்பமான ஃபிலிம் போய், டிஜிட்டல் காமரா வந்ததால் தமிழ் சினிமா இயக்குநர்கள், 2 மணிநேரப்படத்திற்காக 80 மணிநேரம் ஓடக்கூடிய படக்காட்சிகளை படத்தொகுப்பாளரின் மேசையில் கொட்டுகிறார்கள். இதில் இருந்துதான் கதை எங்கே இருக்கிறது என்று படத்தொகுப்பாளர்கள் இரவும் பகலும் தேடுகிறார்கள்!
2 மணிநேரப்படத்திற்காக 80 மணிநேரம் ஓடக்கூடிய படக்காட்சிகளை படத்தொகுப்பாளரின் மேசையில் கொட்டுகிறார்கள்.
நீங்கள் அறிந்த பிரபலமான அல்லது தொழில்முறை இயக்குநர்கள் கூட படத்தின் கதையை சீன்களாக மட்டும் குறைந்த பட்சமாக வைத்துக் கொள்வார்கள். அந்த சீன்களின் முழுமையான வடிவம், திரையாக்கம், உரையாடல், இதரவை அனைத்தும் இயக்குநர்கள் – நட்சத்திர நடிகர்களின் மூடுக்கேற்ப படப்பிடிப்பு தளத்தில் துரித உணவு போல தயாராகும்.
இறுதியில் இந்த, குறை சமையல் குழப்பங்கள் அனைத்தும் எடிட்டர் மேஜையில்தான் பட்டி பார்க்கப்படும். அல்லது இந்த சோம்பேறி படைப்பாளிகளின் சுமையை அல்லது செய்யதவறிய உழைப்பை இறுதியில் எடிட்டர்தான் தனியொருவராக செய்ய வேண்டும்.
ஆக, டாஸ்மாக் பார்களில் சீரியசாக பேசும் காமெடி குடிகாரர்கள் போல உருவாகும் தமிழ் சினிமாவின் பிரச்சினைகளை படத்தொகுப்பு கலைஞர்களே அதிகம் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு சினிமாவின் கதை இதுதான் என்று எடிட் செய்வதற்கும், கதை என்னவென்றே தெரியாமல் எடிட் செய்வதற்கும் பாரிய வேறுபாடு உண்டது. பின்னது நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றுவதைக் கோருகிறது. கூடுதலாக ஒரு சினிமாவின் இறுதி வெளியீட்டின் அருகில் படத்தொகுப்பு இருப்பதால் கண்டிப்பாக இரவு பகல் பார்க்காமல் வேலைபார்த்தே ஆக வேண்டும்.
இதில் ஸ்ரீகர் பிரசாத் போன்ற முன்னணி படத்தொகுப்பாளர்கள் மட்டும் தங்கள் பணிநேரத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். தமிழில் அங்காடி தெரு, தங்கமீன்கள் உட்பட, வட கிழக்கின் அசாம் வரை 15-க்கும் மேற்பட்ட மொழிகளில் பணிபுரிந்து 8 தேசிய விருதுகளும் 7 மாநில விருதுகளும் பெற்ற இவரும் உடல் நிலை பாதிப்படைந்ததால் பணிநேரத்தை பாதியாக குறைத்துக்கொண்டுள்ளார். இந்த பாதிப்பு யாருக்கு, எப்போது, எவ்வளவு என்பதே வேறுபாடு!
ஸ்ரீகர் பிரசாத்
ஸ்ரீகர் பிரசாத் போன்ற முன்னணி படத்தொகுப்பாளர்கள் மட்டும் தங்கள் பணிநேரத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்
பழைய ஃபிலிம் எடிட்டிங்கில் இருந்த நேரக் கட்டுப்பாடு, திட்டமிடல், முறைப்படுத்துதல், சற்றே ஓடி ஆடும் உடல் உழைப்பு போன்றவை தற்போதைய டிஜிட்டல் எடிட்டிங்கில் இல்லை. தொழில் நுட்பத்தின் வளர்ச்சி அராஜகத்தையும், மூலதனத்தின் வளர்ச்சி கடும் சுரண்டலையும் வளர்த்திருப்பதால் தற்போதைய எடிட்டிங் துறை என்பது இளமையைக் பலிகொடுக்கும் ஆட்கொல்லித் துறையாக மாறிவிட்டது.
தமிழ் சினிமாவின் புகழ்வெளிச்சத்தில் இருந்தவருக்கே இந்த நிலைமை என்றால், இருட்டறையில் உழலும் பிற படத்தொகுப்பாளர்களின் நிலை என்ன?
தமிழ் சினிமாவின் மையமான ஏ.வி.எம் ஸ்டியோவுக்கு சென்றோம். அங்கு ஏற்கனவே பலர், பல ஆண்டுகள் படத்தொகுப்பு பணியில் ஈடுபட்டு, நோய்வாய்ப்பட்டு, கடன்பட்டு, பின்னர் கட்டாய ஓய்வு பெற்றிருக்கிறார்கள். ஓரிருவர் இறந்தும் போயிருக்கிறார்கள். இவை எவையும் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. ரஜினியின் “விக்”கும், கமலின் “கெட்டப்”பும், த்ரிஷாவின் “மிஸ் சென்னை” பட்டமும் ஆவணப்படுத்தப்பட்ட தமிழ் சினிமாவில், எடிட்டிங்கிற்காக வாழ்வைப் பறிகொடுத்தவர்கள் குறித்த பட்டியல் கூட இல்லை.
அப்படி விடுபட்ட கதைகளில் ஒரு கதை இது.
எடிட்டர் ஆனந்த்.
இந்தக் கதையில் வருபவர்கள் சகோதரர்கள். இருவரும் எடிட்டர்கள். இளையவர் ஆனந்த் அவரது மூத்த சகோதரர் தங்கவேலைப் பார்த்து சினிமா எடிட்டிங்கிற்கு வந்தவர். எடிட்டர் கிஷோரோடு இவரும் வி.டி.விஜயனிடம் பயிற்சி எடுத்தவர். மரியான், தபாங், மிர்சி, டைகர், சோட்டா மும்பை, என்று பல மொழிகளில் உதவி தொகுப்பாளராக வேலை செய்தவர்.
இவரது அண்ணன் தங்கவேல் பல ஆண்டுகள் படத்தொகுப்பு பணியில் ஈடுபட்டு, திடீரென சுயநினைவிழந்து பல மாதங்கள் மருத்துவமனையிலிருந்தும் நோய் தீராமல் இப்போழுது நடக்கவும் முடியாமல் வீட்டிலேயே குடும்பத்தார் கவனிப்பில் வாழ்ந்து வருகிறார்.
எடிட்டிங் அறையிலிருந்து வந்த ஆனந்த் தனது அண்ணனது கதையை கூறுகிறார்.
“தங்கவேல், 15 வருடங்கள் எடிட்டிங் துறையில் இருந்தார். அண்ணா பல்கலையில எப்.சி.பி டிப்ளமோவை முதல் பேட்சில் முடித்தவர். அவரோட சேர்ந்த ஒருத்தர் பாரின் போயிட்டாரு, இன்னொருத்தர் தனியார் இன்ட்டியூட்டில் எடிட்டிங் பாடம் நடத்துறாரு.
அண்ணன் டைரக் ஷன் பண்ணறதா இருந்தது. ஆனா, எந்த வழியில போனா சினிமாவுல, எல்லா விஷயங்களையும் கத்துக்க முடியுமோ அந்த வழியில போகணும்னு, எடிட்டிங்க தேர்வு செஞ்சாரு. இது மூலமா டைரக் ஷன், எடிட்டிங், விசுவல், எல்லாத்தையும் தெரிஞ்சிக்க முடியும்னு சொல்லுவாரு
முதல்ல சின்ன கம்பெனிகளின் விளம்பரங்கள், எடிட் பண்ணாரு. அப்புறம், சினிமா வாய்ப்பு வந்தது. சினிமாவுல குறிப்பிட்ட டைமுக்கு நம்மகிட்ட எதிர்பார்ப்பாங்க. முதல்ல, அசோக் மேத்தா என்பவரிடம் உதவியாளரா சேர்ந்தாரு. படிப்படியா வளர்ந்தாரு. அண்ணனும் அசிஸ்டெண்ட் வைச்சி வேலை செய்தார். என்னதான் உதவியாளர் வச்சிக்கிட்டாலும் அவங்க, சீன் ஆர்டர், சவுண்ட் சிங்க் பண்ணி கொடுப்பாங்க, அது கால் பங்கு வேலைதான். மீதி மொத்தமும் நாம்மதான் பைனல் பண்ணியாகணும் அப்பத்தான் திருப்தியா இருக்கும்.
இந்த துறையில, ஆரம்பத்ல, பல இயக்குநர்களுக்கு எடிட்டிங் மற்றும் மெஷின் (movilor, stean bag, avid) நாலெஜ் இருக்காது. நம்மகிட்ட வர்ற டைரக்டருக்கும், புரொடியுசருக்கும் என்ன பிரச்சனைகள் இருக்குனு நமக்கு தெரியாது. பல வருசங்கள் ஒரு படத்த எடுத்து இருப்பாங்க! ஆனா நம்மகிட்ட வந்ததும் வேலை உடனே முடியணும்னு கேட்பாங்க!
இப்ப டிஜிட்டல் வந்துடுச்சி. ஆனா, முன்னல்லாம் பிலிம். நெகட்டிவிலேயே பாக்கணும். ரொம்ப கஷ்டம். ஒரு டைரக்டர் போனா, அடுத்து, இன்னொரு டைரக்டர் வந்து படம் எடுக்க, பட்ட கஷ்டத்தை சொல்லுவாரு. அவருக்கும் உடனே முடிச்சிக் கொடுக்கணும். டைமுக்குள்ள முடிச்சாதான் அது ஒர்த்.
எங்கண்ணன் தங்கவேல் ஏ.வி.எம் ஸ்டுடியோ எடிட்டிங் ரூம்ல இரண்டு செட் துணி வைச்சிருந்தாரு. அங்கேயே தூக்கம்! அங்கேயே சாப்பாடு! வீட்டுக்கே வரமாட்டாரு. இப்படியே, தொடர்ந்து தூங்காம வேலைப் பார்க்கறதால உடம்பு கெட்டுப் போச்சி. அப்பப்ப அன்கான்சியல மயக்கம் ஆயிடும். தொடர்ந்து கம்பியூட்டர பார்த்துட்டே இருக்கறதால, இரத்த ஓட்டம் உடம்பு முழுவதும் சீரா இல்லாததால பல பிரச்சனைகள்.
முதல்ல தலைசுத்தல், மயக்கம். இரண்டாவது வாந்தி, பார்வை போயிட்ட மாதிரி திடீருனு கண்ணு தெரியாது. அப்ப, நமக்கு தெரியாமலேயே யூரின் பாஸ் ஆயிடும். உடம்பு நம்ம கண்ட்ரோல்ல இல்லாமல் போயிடும். இன்னும் சொல்ல முடியாத பல பிரச்சனைகள் நிறைய இருக்கு. நானும் இந்தத் துறையில இருக்கிறதால எனக்கு அது தெரியும்.
எங்க அண்ணன் அன்னிக்குப் பாத்திங்கனா, தலைவலிக்குதுனு போய் படுத்தாரு. கொஞ்ச நேரத்துல வேர்த்துக் கொட்டி எழுந்திருக்கவே முடியலைனு பக்கத்தில் இருந்தவங்ககிட்ட சொல்லியிருக்காரு. உடனே கூட இருந்த நண்பர்கள் எனக்கு தகவல் சொன்னாங்க. விஜயா ஆஸ்பிடல்லா சேர்த்தோம். டாக்டர்கள் “இது நியுரோ பிராப்ளம். அவசரமா, எம்.ஆர்.ஐ ஸ்கேனும், டெஸ்ட்டும் எடுத்துட்டு, உடனே ஒரு இன்ஜெக் ஷன் போடணும், அதப் போட்டாலும் 24 மணி நேரம் கழிச்சித்தான் சொல்ல முடியும்”னு ஐ.சி.யு.ல சேர்த்தாங்க.
அப்புறம் கொஞ்சம் நினைவு திரும்புச்சி, ஆனா அன்னிக்கு சாயந்திரமே திரும்பவும் டீப் ஸ்லீப்புக்கு போய்ட்டாரு. உடனே, டாக்டருங்க, அவர தூங்க விடாம பாத்துக்கணும்னு சொல்லிட்டாங்க. அப்புறம் நரம்பு ஸ்பெஷல் டாக்டர் பார்த்துட்டு, “ஒரு பக்கம் பிரெய்ன் வேலை செய்யும் தன்மை இழந்து மூளை பல்ஜி ஆயிடுச்சி. அப்படியே விட்டம்னா மூளை வீங்கி ஜாம் ஆயிடும். உடனே ஆபரேஷன் செய்யணும்”னு சொன்னாங்க. ஸ்கல்ல (மண்டை ஓடு) ஓபனாக்கி ஆபரேசன் செய்தாங்க. ஆஸ்பத்திரியில,மொத்தமா 7 லட்சத்துக்கு மேலே செலவாச்சி, அவ்வளவும் கடன். நாங்க, எடிட்டர் யூனியன்ல எங்க நிலைமைய சொன்னோம். அவங்க எல்லா யூனியனுக்கும் சொன்னாங்க, எல்லோரும் ஏதோ கொஞ்சம் உதவி செய்தாங்க. மீதிய நாங்க கடன் வாங்குனோம்.
இதேமாதிரி, 6 வருசத்துக்கு முன்னாடி, விருதகிரி என்ற படத்தோட எடிட்டர் சலீம் என்பவருக்கும் நடந்தது. அவர் வேலை பார்த்துட்டு இருக்கும்போது கீழே விழுந்து காது மூக்குல இரத்தம் வந்து கடைசியில் அண்ணன் மாதிரியே ஆனாரு.
சாதாரணமாக, இம்மாதிரி நோய் சிம்ப்டம்ஸ் ஆரம்பிக்கும்போது நம்மால உடனே கவனிக்க முடியறதுல்ல. வேலையின்போது வாந்தி, மயக்கம் வந்தா அத கவனிக்கறது இல்ல. சாப்பிட்டது எதும் செரிக்கமா இருக்கும் என்ற எண்ணத்தில விட்டுடுவோம். இப்படி, நேரம் காலம், தூக்கம், ஓய்வு இல்லாத இந்த, எடிட்டிங் வேலையினால் எங்களுக்கு துயரம்தான் மிச்சம். இவ்வேலையினால் ஏற்படும் நிரந்தரமான உடல், மனப்பாதிப்புகள் பற்றி எந்த விழிப்புணர்வும் எங்களுக்கு இல்ல. அதற்கான வசதியும் இல்ல. இதற்கெல்லாம் பயந்தா குடும்பத்த, குழந்தைகள யார் காப்பத்தறது?
ஆனா, அந்தக் காலத்திலயும் இதவிட அதிகமான வேலை செய்திருக்கிறாங்க. அந்த வேலைப்பாணி வேற, பிலிம (film) தொட்டு பார்த்து, கையினாலயே வெட்டி, ஒட்டி ஒவ்வொரு சீனாவும் ரீலாவும் சேக்கணும். உடம்பு இப்படி அப்படி அசையும். அடிக்கடி எழுந்துஎழுந்து ஷாட், சீனை தனித்தனியா வெச்ச ஃபிலிம் பாக்ஸ ஒவ்வொன்னா தேடி எடுத்துப் பார்த்து சேர்க்கணும். வேலை இதவிடமோசமா இருந்தாலும் உடல் அசைவால இரத்த ஓட்டம் கொஞ்சம் இருந்தது. இப்ப அதுக்கும் வழியில்ல. ஆணி அடிச்சமாதிரி சிஸ்டத்துல உட்கார்ந்தா தலையைக்கூட அசைக்கிறது கிடையாது. வேலை டென்ஷன், வீட்டு பிரச்சனை, படம் ரீலீசு தேதி இதெல்லாம் நினைச்சாவே பைத்தியம் பிடிச்சமாதிரி இருக்கும்! அதோடுதான் பரபரனு வேலைச் செய்யனும்.
அண்ணன் தங்கவேலு, சினிமா ட்ரெயிலர் எடிட்டிங் வேலையில தான் பேமசு. சிங்கம், வரலாறு, சரவணா போன்ற படங்களுக்கு ட்ரெயிலர் பண்ணியிருக்காரு. டைரக்டர் டேஸ்ட்க்கு ஏற்ப ஃபுல்ஃபில் பண்ணி காட்றவரைக்கும் இரவுபகலா வேலையில மெனக்கெடணும். 3 மணி நேரப் படத்தை 3 நிமிஷமா சுருக்கி ட்ரெயிலர் காட்டி ஜனங்களை ஈர்க்கணும். இது, சாதாரண விஷயம் கிடையாது. ரிஸ்க் கான வேலை. ட்ரெயிலர் சரியில்லனு தியேட்டர்ல பேசிட்டாங்கன்னா போச்சு! வேலை சரியா செய்யலனு நம்ம தொழிலே போயிடும் ! அந்த பயத்துலதான் வேலவேலனு, ராவும் பகலும் தூங்காம ஓடுவோம்!
எடிட்டர் தங்கவேல்
தங்கவேல் பல ஆண்டுகள் படத்தொகுப்பு பணியில் ஈடுப்பட்டு, திடீரென சுயநினைவிழந்து பல மாதங்கள் மருத்துவமனையிலிருந்தும் நோய் தீராமல் இப்போழுது நடக்கவும் முடியாமல் வீட்டிலேயே குடும்பத்தார் கவனிப்பில் வாழ்ந்து வருகிறார்.
இப்ப 3 வருஷமா அண்ணன் வீட்லதான் இருக்காரு. சுத்திக்கிட்டே இருந்தவரு. உட்கார்ந்திட்டு இருக்கிறது கஷ்டம்தான். எங்களுக்கு அவருடைய அனுபவத்தை இப்ப அறிவுரையா சொல்றாரு. ஆனாலும் எங்களுக்கு அதைக் கேட்டு நடக்க நேரம் இல்லை. சாப்பாட்டு விஷயம் முதல் உடற்பயிற்சி வரை சொல்றாரு. ஆப்ரேஷன் முடிச்சு வீட்டுக்கு வந்தப்போ எல்லோரும் சேர்ந்து அவர தூக்கி வைப்போம். அவரே தினமும் மூச்சுபயிற்சி எக்ஸசைஸ் பண்ணி தன்னை தேத்திகிட்டார். எங்களையும் எக்ஸஸைஸ் பண்ண சொல்லுவார். அவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு. டாக்டர்கள் தொடர்ந்து பிசியோ எடுத்துக்க சொல்றாங்க. இன்னும் தனியா எழுந்து நடக்கும் நிலைமைக்கு வரலை. சினிமாவுல பல காலம் உழைச்ச எடிட்டர் பலபேருக்கு இந்த நிலைமை வந்தும் இந்தத் துறையில இருக்குறவங்களுக்கு விழிப்புணர்வு வந்ததா தெரியல.
எனக்கு, இப்ப வயசு 37. 15வருடம் இந்த தொழில்ல கழிச்சிட்டேன். உடம்பு முடியல. என்ன பண்றது? இந்த துறையில இருக்கறவங்களுக்கு ஸ்ட்ரோக் நிறைய வரும். ஒரு வாரமெல்லாம் தூங்காம வேலை பார்ப்போம். அப்ப கழுத்த திருப்ப முடியாத வலிவரும். உயிர் போகும்.
வெளிநாடுகளில் டியூட்டி டைம் இருக்கு. அதால அவங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனா இங்க அப்டி இல்லை. இந்த நிலமையை கண்டிப்பா வெளிய கொண்டு போகணும். நீங்க பாக்கிற சினிமா வேற, எங்க வாழ்க்கை வேற. யார் ஜெயிப்பா? யாரு தோப்பா? தெரியாது! வேலைய ரசிச்சி செய்தாதான் தொழில்ல நீடிக்கமுடியும். நம்ம குடும்பத்தையும், நம்மையும் காப்பாத்தும் தொழிலை நாம, நேர்த்தியா செய்யணும்கிற எண்ணம் மாறக்கூடாது.
நிறைய பேரு கதை சொல்லும் போது நல்லாதான் இருக்கும்! ஆனா ஷூட்டிங் முடிஞ்சி அப்டியே எடுத்துட்டுவந்து தருவாங்க. அத பொறுமையா சரிசெய்யணும். அத வேலையா இல்ல, ஒரு உதவியா நினைச்சி செய்யணும். ஒருத்தர், ஒரு ஹிட்டுக் கொடுத்துட்டா, அடுத்து அதமாதிரி செய்ய ஆசைப்படுவாங்க. சிலபேர்கிட்ட வேலை பார்க்கும்போது, உட்காரவும் கூடாது. நிக்கவும் கூடாது. உட்கார்ந்து நிக்கிற மாதிரி வேலை பார்க்கணும். சர்க்கஸ் மாதிரி!”
______________________________
எடிட்டர் ஆனந்த் பேசியதிலிருந்து சில விசயங்களை பரிசீலிக்கலாம்.
முதலில் இரவு பகல் பார்க்காமல் வேலை பார்ப்பது என்ன விளைவை எற்படுத்தும்?
மனித உடல் என்பது அதனுடைய மனம் சார்ந்த செயல்பாடுகளோடும் சேர்ந்தே வினை புரிகிறது. அதாவது உங்களுடைய உணர்ச்சிகள் அவற்றின் அளவுகள் கூட குறிப்பிட்ட அளவுக்கு உடல் இயக்கத்தை பாதிக்கும். இந்த பாதிப்பு என்பது நோயாக மட்டுமல்ல, அதன் எதிர்ப்பதமான ஆரோக்கியமான உற்சாகமாக கூட இருக்கலாம்.
விரும்பிய விசயத்திற்காக ஒரு மனிதன் கண் விழிப்பதும் தொடர்ந்து வேலை செய்வதும் பெரிய பிரச்சினை இல்லை. மனித உடல் அதை குறிப்பிட்ட அளவுக்கு ஏற்றுக் கொள்ளும். அதனால்தான் காதல் வயப்பட்ட இளையோர்கள் கண் விழிப்பதோ இல்லை ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் வாரக்கணக்கில் கடும் வேலைகளை அதிக நேரம் செய்வதோ பாரிய விளைவை ஏற்படுத்துவதில்லை. கூடவே அவர்கள் ஆரோக்கியமான மன-உடல் நிலையை தற்காலிகமாக பெறுகிறார்கள்.
அதே நேரம் இத்தகைய உணர்வு மற்றும் உணர்ச்சி பூர்வமான ஒன்றுதல் இல்லாமல் அதிக நேரம் வேலை செய்வதோ, கண் விழிப்பதோ உடல் இயக்கத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
மறுகாலனியாக்கத்தின் சாபமே இதுதான். நமது உதிரிப்பாட்டாளிகள் அனைவரும் இத்தகைய பாதிப்பில்தான் நாற்பது வயதிற்குள் இறந்து போகும் வாய்ப்பை அதிகம் பெற்றிருக்கின்றனர். உயிரோடு இருப்போரும், குடி, பான், இதர போதை வஸ்துக்களின் உதவியோடு வேலை செய்கின்றனர். இந்த உலகம் தனி.
தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை அதன் அராஜகமான செயல்பாட்டில் இருக்கும் ஏராளமான பிரச்சினைகளே, ஒரு எடிட்டர் திடீரென அதிக நேரம் வேலை செய்ய அடிப்படையாக இருக்கிறது. அடுத்து இங்கே ஒரு நிலையான இடம் பெற வேண்டும் என்றால் அதற்கென முறையான வாய்ப்போ வசதியோ இல்லை. ஏதாவது ஒரு படம் வெற்றி பெற வேண்டும், அது பேசப்பட வேண்டும். அப்போதுதான் ஒரு எடிட்டரை சினிமா உலகம் அங்கீகரிக்கும். அதனால் ஒரு தொகுப்பாளர் படம் குப்பையா, கோபுரமா, காட்சி ரீதியாக கதை இருக்கிறதா இல்லையா என்ற ஆய்வுக்கெல்லாம் போக மாட்டார். அவரைப் பொறுத்த வரை தரப்படும் காட்சிகளை அழகாக தொகுத்து படமாக்கி தனது திறனை நிரூபிக்க வேண்டும்.
அவர் பிரபலமான எடிட்டராகவே ஆனாலும் இந்த நிலை மாறிவிடுவதில்லை. ஆக இங்கே ஒன்றுதல் என்பது குறிப்பான வேலையோடு இல்லாமல் வாழ்க்கையில் செட்டிலாதல் எனும் நீண்டகால நோக்கோடு நடக்கிறது. இதனால் முட்டாள் இயக்குநர்கள், அசட்டு தயாரிப்பாளர்கள், பணக்கார திரை மாந்தர்கள் சொல்லும் அனைத்து மொக்கையான விசயங்களையும் மாபெரும் தத்துவ ஞான விளக்கமாக எடுத்துக் கொண்டு அதை காட்சிப்படுத்தி கத்தரி போட்டு கலையாக்க வேண்டும். இது உடல் களைப்போடு மனதையும் வெகுவாக பாதிக்கிறது. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதும், பணி செய்வதுமே தமிழ் சினிமாவின் தேசிய மொழி என்றாலும் எடிட்டர்களின் உடல் நலத்தை பாதிக்கும் சீர்குலைவிற்கும் இது காரணமாக இருக்கிறது.
நாற்காலியில் சில பல வருடங்கள் அமர்ந்து கணினி வேலை செய்வதற்கும், அதையே எடிட்டிங் கணினியில் செய்வதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. இரண்டுமே கழுத்து வலி, இடுப்பு வலியைக் கொண்டு வரும். அதற்கேற்ற உடற்பயிற்சிகள், சிகிச்சைகள் இருந்தாலும் எடிட்டிங் வேலை என்பது நரம்பியல் சார்ந்த நுட்பத்துடன் அதிக திறனை எடுத்துக் கொள்ளும் ஒன்று. பெரிய அசைவோ, உழைப்போ இல்லை என்றாலும் நுட்பமான உழைப்பே நரம்பு மண்டலத்தை பாதிக்க போதுமானதாக இருக்கிறது.
ஒரு நாளில் 8 மணிநேரம் இந்த வேலை, பின்னர் நடைப் பயிற்சி, யோகா, வேறு சமூகவியல் நடவடிக்கைகள் என்று இருந்தால் ஆயுள் முழவதும் இந்த வேலை செய்யலாம். அல்லது கண் விழிப்பது என்பது மாதத்திற்கு சில நாட்கள் என்று இருந்தாலும் கூட பிரச்சினை இல்லை. ஆனால் தொடர்ந்து கண் விழிப்பது என்பதே இங்குள்ள நடைமுறையாக இருக்கிறது.
சன் டி.வி விருந்தினர் நிகழ்ச்சி ஒன்றில் எடிட்டர் கிஷோர் கலந்து கொண்டு பேசுகிறார். அவரது அலுவலகத்திற்கு கீழ் வீட்டில் நடந்த சாவு கூட ஒரு வாரம் கழித்தே கிஷோருக்கு தெரியவருகிறது. அவருக்கென்று நண்பர்கள் அதிகம் இல்லை. வேலை நேரம் போக வெளியே பல்வேறு இடங்களுக்கு சென்று வரும்போது மட்டுமே நண்பர்கள் கிடைப்பார்கள் என்று அவரே அதை குறிப்பிடுகிறார்.
ஆக, என்னதான் உழைப்பில் கடுமை இருந்தாலும் மற்றவர்களுக்கு இருக்கும் சமூக நடவடிக்கைகள் இருட்டறையில் பணியாற்றும் எடிட்டர்களுக்கு இல்லை. சமூகத்தை தொடர்பு கொள்ளும் ஒரே கண்ணாடியாக கணினியும், அதில் தமிழ் சினிமா படைப்பாளிகள் கொட்டும் காட்சிகளே வாழ்க்கையாகவும் அவர்களுக்கு இருக்கிறது. மற்ற வேலைகளில் உடல் அசைவுடன் கூடிய உழைப்பு அதிகமிருக்கலாம். எடிட்டிங்கிலோ உடல் அசைவு இல்லாமல் நுட்பமான முறையில் மூளை வெகுவேகமாக செயல்படுவதால் இவர்களுக்கு சமூக நடவடிக்கைகள் நிச்சயம் வேண்டும். அது இல்லாது போனால் உடல் பாதிப்பை சமநிலைப்படுத்தும் வாய்ப்பும் இல்லாமல் போகிறது.
ஒரு படம் வெளியாகும் கடைசி இருமாதங்களுக்குள் அசுர வேகத்தில் எடிட்டர்கள் வேலை செய்கிறார்கள். ஆக கண் விழிப்பு, கடுமுழைப்பு, வேகமான அழுத்தம் என மூன்று பரிமாணங்களில் உடல் பாதிக்கிறது. இதுவே இறுதியில் குறுகிய காலத்தில் உருவாகும் உயர் ரத்த அழுத்தமாக மாறுகிறது. முதலில் வாந்தி, மயக்கம் என்று வரும். சிறிது நேரம் தூங்கி எழுந்தால் நார்மலாக இருக்கும். பிறகு ஒரு இடைவெளியில் மீண்டும் வரும். இறுதியில் அழுத்தம் அதிகரித்து மூளை வெடித்து பக்க வாதமோ இல்லை மரணமோ நடக்கிறது.
இதை குறிப்பாக கண்டுணர்ந்து சொல்லுமளவுக்கு, எச்சரிக்கை செய்யுமளவுக்கு இங்கே இருக்கும் மூத்த எடிட்டர்களுக்கு விழிப்புணர்வு இருப்பதாக தெரியவில்லை. எடிட்டிங் யூனியனிலும் இது குறித்த புரிதல் இல்லை. அதிக பட்சம் ஊதியம் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே யூனியன் கேட்கும். ஒரு வேளை மரணம் நிகழ்ந்தால் ஓரளவுக்கு உதவுவார்கள். ஆனால் ஒரு வேலை மரணத்தையோ இல்லை உடல் இயக்கத்தை முடக்கியோ போடுகிறதே அதை தட்டிக் கேட்போம் என்பதற்கு யூனியன் தயாராக இல்லை. ஏன் யூனியன் ஏன்று போக வேண்டும், இதை எந்த எடிட்டரும் கூட கேட்க மாட்டார்.
காரணம் தமிழ் சினிமாவின் இயக்கமே காடாறு மாதம், நாடாறு மாதம் என்று இருக்கிறது. இங்கே பணியாற்றும் அனைத்து தொழிலாளிகளும் பணியின் போது எந்த மிகப்பெரிய வேலையையம், சுமையையும் மறுக்காமல் செய்வார்கள். அந்த வலியை இரவு குடியின் மூலம் தணித்துக் கொள்வார்கள். பிறகு வேலையின்றி இருக்கும் நாட்களில் ஆடு முழுங்கிய மலைப்பாம்பு போல அசைவற்று கிடப்பார்கள்.
எனவே குறிப்பிட்ட வேலை நாட்களில் ஒரு தொழிலாளிக்குரிய எட்டு மணி நேர வேலை என்பதெல்லாம் இங்கே தவறாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஒப்பீட்டளவில் மற்ற கலைஞர்கள், தொழிலாளிகளுக்கு இருக்கும் குறைந்த பட்ச ஓய்வு, இதர சமநிலை சூழல்கள் ஒரு எடிட்டருக்கு இல்லை.
பிரபல இயக்குநர்களோ இல்லை நட்சத்திரங்களோ வருடத்திற்கு ஒன்றோ இல்லை இரண்டு வருடத்திற்கு ஒரு படமோ இயக்குவார்கள். அதை முடித்த பிறகு அமெரிக்காவிற்கோ, சிங்கப்பூருக்கோ, இல்லை இமயமலைக்கோ பயணம் செய்து இளைப்பாறுவார்கள். ஆனால் ஒரு பிரபல எடிட்டருக்கு இத்தகைய இளைப்பாறுதல் சாத்தியமில்லை. துறையில் அவர் பிரபலமாக இருக்கிறார் என்பதன் பொருளே அவர் தொடர்ந்து இரவு பகல் பார்க்காமல் வேலை பார்க்க தயாராக இருக்க வேண்டும் என்பதே.
பேட்டில்ஷிப் போதம்கின்
சினிமாவின் ஆக முக்கியமான கலைக் கோட்பாடுகளை உருவாக்கியவர்கள் கம்யூனிஸ்டுகளே (“பேட்டில்ஷிப் போதம்கின்” திரைப்படக் காட்சி)
படம் ஓடவில்லை என்றால் வினியோகஸ்தர்கள் அடுத்த படத்திற்கு ரெட் கார்டு போடலாம். ஆனால் தொழிலாளிகள், கலைஞர்களின் உயிரை வதைக்கும் இச்சூழலுக்கு ரெட் கார்டு போட யாருமில்லை.
உலக சினிமா, சினிமாக் கலை என்று சரடு விட்டுக் கொண்டு வார்த்தைகளிலும், பெயர்களிலும் மிரட்டும் அறிஞர் பெருமக்கள் முதலில் எடிட்டிங் என்றால் என்ன, எடிட்டர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்று நேரில் சென்று பார்க்க வேண்டும்.
10-க்கு ஒன்பது குப்பையாக வரும் தமிழ் சினிமாவிற்காக இந்த இளம் இளைஞர்கள் செத்துப் போவதா என்று கேள்விக்கும் நாம் பதில் தேட வேண்டும்.
சினிமாவின் ஆக முக்கியமான கலைக் கோட்பாடுகளை உருவாக்கியவர்கள் கம்யூனிஸ்டுகளே என்பது பலருக்கும் தெரியாது. தெரிந்தால் அதிர்ச்சியும் அடைவார்கள். கம்யூனிஸ்டுகள் அருளிய இந்த சினிமா கோட்பாடுகள் – விதிகள் – கலை கண்டுபிடிப்புகள் இன்றி, இன்றைய ஹாலிவுட்டோ இல்லை தொலைக்காட்சிகளோ இல்லை.
புரட்சிக்கும், சோசலிச சமூகத்தை படைப்பதற்கும் மக்களை திரட்ட வேண்டும் என்ற உயரிய நோக்கில்தான் இச்சினிமா கோட்பாடுகள் சில கலைஞர்களால் கண்டறியப்படுகின்றன. கலையின் ஆதி தோற்றம் கூட இத்தகைய வர்க்க் போராட்டத்தின் விளைவுதான். பிறிதொரு சந்தர்ப்பத்தில் அதை விரிவாக பேசலாம்.
ஐசன்ஸ்டின் எடிட்டிங் கோட்பாடுகளை ஐந்தாக விளக்குவார்கள். அதில் ரிதமிக் எடிட்டிங், இன்டலிஜென்ட் எடிட்டிங் என்று இரண்டு முறைகள் உண்டு.
அந்த கோட்பாடுகளின் பிதாமகர் ஐசன்ஸ்டின், சோவியத் யூனியன் காலத்தில் வாழ்ந்த பிரபலமான திரைப்பட கலைஞர். படத்தொகுப்பு குறித்து அவர் உருவாக்கிய கோட்பாடுகள் இன்றைக்கும் எடிட்டிங்கின் பாலபாடமாக இருக்கிறது. ஐசன்ஸ்டின் எடிட்டிங் கோட்பாடுகளை ஐந்தாக விளக்குவார்கள். அதில் ரிதமிக் எடிட்டிங், இன்டலிஜென்ட் எடிட்டிங் என்று இரண்டு முறைகள் உண்டு.
ரிதமிக் எடிட்டிங் என்பது ஏதோ ஒரு ஒத்திசைவின் மூலம் இரு காட்சிகள் இணைக்கப்படுவதை உணர்த்துகிறது. அவை இசை, உரையாடல், காட்சி, கோணம், உருவகம் என்று ஏதோ ஒரு நேரடியான அளவீடாக இருக்கலாம். இன்டெலிஜென்ட் எடிட்டிங் என்பது இத்தகைய நேரடி அளவீடுகள் இன்றி அறிவுபூர்வமாக இரு காட்சிகளை இணைப்பதாகும். இந்த எடிட்டிங்கை புரிந்து கொள்ள படைப்பாளிகள் மட்டும் போதாது, பார்வையாளர்களும் சற்று சிந்திக்க வேண்டும். புலனறிவு, பகுத்தறிவு என்ற அறிவியக்கத்தின் இயங்கியல் ரீதியான வளர்ச்சி குறித்து தோழர் மாவோ விளக்கியிருப்பதிலிருந்தும் இதை புரிந்து கொள்ளலாம்.
எடிட்டர் கிஷோர் கூட காட்சிகளின் இணைப்பில் ரிதம் செட்டாகவில்லை என்று கவலைப்பட்ட ஒரு கலைஞன்தான். அவர் மட்டுமல்ல அனைத்து எடிட்டர்களும் கூட இந்த ரிதம் பற்றி அதாவது இரு காட்சிகள் இணைப்பட்டிருக்கின்றன என்ற செயற்கைத்தனம் இன்றி இயற்கையாக இருப்பது போன்ற உணர்ச்சி குறித்தே அதிகம் கவலைப்படுவார்கள். ஒரு வகையில் இது வடிவவாதம்.
ஆனால் காட்சிகளை மட்டுமல்ல தமிழ் சினிமாவின் அராஜகத்தையும், அந்த அராஜகத்தை தோற்றுவிக்கும் முதலாளிகளையும் கட்டுப்படுத்த நமக்குத் இன்டெலிஜென்ட் எடிட்டிங் தேவை.
போர்க்குணமிக்க தொழிற்சங்கம் எனும் அந்த அறிவார்ந்த எடிட்டிங்கை கற்றுத் தரும் கம்யூனிஸ்டுகள் வரும் போது தொழிலாளிகளும், கலைஞர்களும் கிஷோர் போல மரணிக்க வேண்டியிருக்காது; தங்கவேல் போன்று முடங்கிக் கிடக்க தேவையிருக்காது.