‘திமிரு’ படத்தின் இயக்குனர் தருண் கோபி அதன் அடுத்த பாகமாக இயக்கி வரும் படம் ‘வெறி’. அவரது புதிய படம் பற்றி அவருடன் உரையாடியபோது “எளிய மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக வைத்துக்கொள்கிறார்கள். அப்படி எளிய மனிதர்களின் காதல் கூடிவருவதால் வரும் சந்தோஷமும், அது இழக்கப்படுவதால் வரும் துக்கமுமே இந்தப் படத்தின் கதைமையங்கள்..” என்றார்.
‘வெறி’ என்று தலைப்பு இருக்கிறதே. என்ன காரணம்?
மனிதர்களில் பலர் பலவிதமான தீவிர உணர்வுகளோடு பயணிக்கிறார்கள். சாதிக்கவேண்டும் என்கிற வெறி., பணத்தின் மேல் வெறி, சவாலில் வெற்றியடையவேண்டும் என்கிற வெறி, அதிகாரம், புகழ், பொன், பெண் என்று இப்படி பல விதமான வெறிகள் கொண்ட மனிதர்கள் உண்டு. அப்படி எந்த விதமான தீவிர எண்ணங்களின்றி வாழ்க்கையை அதன் போக்கில் சந்தோஷமாக வாழும் ஒருவனுக்கு சூழ்நிலை வாழ்க்கை அனுபவத்தை கற்றுக் கொடுக்கிறது. அதுதான் இந்தப் படம்.
குடும்பம், புனிதம், மகத்துவம் போன்றவற்றை கிண்டல் செய்யும் மனோபாவம் உள்ள இந்த காலத்தில் இது போன்ற படமா ?
ஏன் கூடாது? முகநூல், வாட்ஸப் என்று தொடர்புக்கான சாதனங்கள் வந்தாலும் அன்பு பாசம் போன்ற உணர்வுகளுக்கு மாற்றாக வேறு உணர்வுகள் வந்திருக்கின்றனவா என்ன? ‘நலம் நலமறிய ஆவல்’ என்கிற ஒரு கடித வார்த்தையில் தெரியும் அன்பு இன்றைய நவீன தொடர்பு சாதனங்களில் தெரிந்துவிடுகிறதா என்ன? இன்றைக்கும் அன்புக்காக ஏங்குபவர்கள், சகமனிதனுக்காக ஒரு துளி கண்ணீர் சிந்துவர்கள், காதலியின் ஒரு பார்வைக்காக காத்திருப்பவர்கள் என்று இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்களுக்கான படம் தான் இது.
படத்தின் நாயகியாக ‘காதல்’ சந்தியா எப்படி தேர்வானார்?
நல்ல இலக்கியம், சினிமா, காவியம் இப்படி எல்லாவற்றிலும் நல்ல பெண் ஒருவருக்கு ஒரு முக்கிய இடம் காணப்படும். அப்படி ஒரு இடம்தான் சந்தியாவுக்கு. காதல் படத்தில் நடித்த சந்தியா அதற்குப் பிறகு நல்ல வாய்ப்புக்கள் வராததால் கன்னடத்துக்குப் போய்விட்டார். தமிழ் சினிமாவில் தமிழ்ப் பெண்களுக்கு ஏது இடம்? படத்தின் கதையை கேட்டவுடன் தனது கன்னடப் பட கால்ஷீட்டுக்களை அட்ஜெஸ்ட் செய்து படத்திற்கு நாட்கள் ஒதுக்கினார்.
ஆண் பெண் உறவை அதன் எல்லை தாண்டாமல் சொல்லக்கூடிய அழகும், கச்சிதமும் தான் நம் சினிமாவின் அடையாளம். அதை சந்தியா மூலம் மீண்டும் சொல்ல முயற்சித்திருக்கிறேன்.
தமிழ் சினிமா எப்படி இருக்கிறது?
தமிழ் சினிமாவில் இன்று எல்லாம் மாறி இருக்கிறது. ஹீரோயினுக்கே சும்மா வந்து கவர்ச்சி காட்டிவிட்டு, டூயட் பாடிவிட்டுப் போகும் வேலை என்று மலிவாக ஆனபிறகு, அம்மா, சகோதரி, தோழிகளுக்கெல்லாம் ஏது வேலை? கடந்த தலைமுறை படைப்பாளிகளுக்கு உள்ளூரிலேயே நிறைய நாயகிகள் கிடைத்ததும் இன்றைக்கு லண்டன், அமெரிக்காவிலிருந்து நாயகிகளை இறக்குமதி செய்வதும் தமிழ்ச் சினிமாவில் பெண்களுக்கான இடம் இறங்கி விட்டதை காண்பிக்கும் விஷயங்கள். விதிவிலக்காக ஆரோக்கியமான படங்கள் சில வருவது அதிகரித்திருக்கும் தற்போதைய சூழல் தமிழ்ச்சினிமாவை அழிவிலிருந்து மீட்க உதவலாம்.