36 வயதினிலே படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆஃபிசையும் மீண்டும் ஆட்கொண்ட ஜோதிகா இயக்குனர் ராதா மோகனின் ‘உப்பு கருவாடு’ திரைப்படத்தின் டீசரை சில தினங்களுக்கு முன் வெளியிட்டார்.
தற்போது படப்பிடிப்பு முடிந்து வெளி வர தயாராக் உள்ள ராதாமோகனின் அடுத்த படமான உப்பு கருவாடு திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் முன்னிலையில் அவரது ‘மொழி’ படத்தின் பேசாமலே பேசப்பட்ட நாயகி ஜோதிகா வெளியிட்டார்.
டீசரை வெளியிட்டு பேசிய ஜோ “ குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய நல்ல பொழுதுபோக்கு திரைப்படத்தை எடுத்திருப்பதற்கு இயக்குனர் ராதா மோகன் அவர்களுக்கு எனது வாழ்த்துகள். ‘மொழி’ போல் உப்பு கருவாடு திரைப்படமும் ராதா மோகனுக்கு முக்கியமான திரைப்படமாக அமையும் என்று நம்புகிறேன். இப்படத்தில் நந்திதா நடித்திருப்பது போலான கதாப்பாத்திரம் எந்த ஒரு காலக் கட்டத்திலும் எல்லா கதா நாயகிகளுக்கும் கிடைப்பதில்லை. அந்த வகையில் நந்திதா கொடுத்து வைத்தவர்தான் ” என்று மனம் திறந்து பாராட்டினார்.
படத்தின் நாயகி நந்திதா பேசிய போது “அபியும் நானும், மொழி படங்களில் இருந்த முதன்மை பெண் கதாப்பாத்திரங்களை யாரும் மறக்கமாட்டார்கள் அத்தகைய கதாப்பாத்திரங்களை உருவாக்கிய இயக்குனர் ராதா மோகன் அவர்களுடன் பணி புரியக் கிடைக்கும் வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொண்டேன். ஜோதிகா அவர்களை பார்க்கும்வரை மிகவும் பரபரப்பாய் இருந்தது எனினும் அவர் எங்களை வரவேற்ற விதமும், பேசிய விதமும் எளிமையும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஜோதிகா பாராட்டியதை என்னால் மறக்கவே முடியாது .” என இமயத்தின் உச்சியை தொட்டு விட்ட உற்சாகத்துடன் கூறினார் படத்தின் நாயகி நந்திதா.