பொருளாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அமர்த்யா சென், தான் வகித்து வந்த நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்குக் காரணம் மோடி அரசின் நேரடித் தலையீடே என்று பகிரங்கமாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜீலை 17ம் தேதி முதல் பதவி விலகும் அமர்த்யா சென்னுக்குப் பதிலாக சிங்கப்பூரில் அமைச்சராக இருந்த ஜார்ஜ் இயோ துணைவேந்தராக பதவி ஏற்பார் எனத் தெரிகிறது. “என்னை பதவியிறக்க பல்கலைக் கழக போர்டிலிருந்த வெளி உறுப்பினர்கள் சேர்ந்து இயங்கினார்கள். நான் பதவியில்
தொடர்ந்து இருந்தால் அரசிடம் இருந்து பல்கலைக்கழகத்திற்கு வரும் மானியங்களும், சலுகைகளும் நிறுத்தப்பட்டிருக்கும். எனவே நானே பதவியை ராஜினாமா செய்துவிட்டேன்” என்கிறார் அமர்த்யா.

மோடி அரசின் கல்வி மீதான தலையீடுகள் பற்றி மேலும் கூறிய அவர், “நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான அளவில் இருக்கிறது. அத்துடன் உடல் நலம் மற்றும் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மோடி அரசால் பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கிறது. நான் தொழிற்சாலைகளுக்கு எதிரானவன்
அல்ல. ஆனால் கல்வியில்லாத மற்றும் ஆரோக்கியமில்லாத மக்களைக் கொண்ட நாடு தொழில் முன்னேற்றத்தில் பெரிதாக வந்துவிடவே முடியாது.

டாடா இன்ஸ்டிட்யூட் ஆப் பன்டமென்டல் ரிசர்ச் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக சந்தீப் திரிவேதியை மோடி அரசு நியமனம் செய்தது. அதை கல்வியியலாளர்கள் எல்லோரும் எதிர்த்த பின்னரும் தனது தவறுகளை மாற்றிக் கொள்ளாமல் அவர் தொடர்ந்து அப்பதவியில் நீடிக்கிறார். மேலும் நேஷனல் புக் ட்ரஸ்ட்டின் டைரக்டராக இருந்த பிரபல எழுத்தாளர் சேதுமாதவனை பதவியிறக்கி விட்டு ஆர்.எஸ்.எஸ் ஆள் ஒருவரை இயக்குனராக நியமித்துள்ளது. ஐ.சி.சி.ஆர் ன் இயக்குனராக புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள டாக்டர் லோகேஷ் சந்திரா மகாத்மா காந்தியை விட மோடி உன்னதமானவர் என்று நம்புகிறவர்.

இந்திய வரலாற்று ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரான எல்லப் பிரகத சுதர்சன ராவ் வரலாற்று ஆராய்ச்சி அனுபவம் உள்ளவரே அல்ல. மாறாக ‘இந்தியாவில் சாதி அமைப்பு சமூகத்துக்கு பெரும் நன்மைகளை செய்துள்ளது. அதை தீயது என்று தவறாக எல்லோரும் குற்றம் சாட்டுகிறார்கள்.’
என்று கட்டுரை எழுதியவர். கல்வி நிலையங்களில் ஆட்களை நியமிப்பதற்கான மறைமுக அதிகாரம் அரசின் கையில் இருந்ததைத் தாண்டி ஒரு படி மேலே போய் அரசே நேரடியாக பதவிகளில் தனக்கு வேண்டிய ஆட்களை நியமிக்கும் அதிகாரம் வழங்கும் சட்ட மசோதாவை எதிர்த்து டெல்லி ஐ.ஐ.டி யின் இயக்குனர் ரகுநாத் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். என்னை பதவி விலக வைத்ததும் இதே அதிகாரம் தான்.

மோடியின் அரசு மார்க்கெட் பொருளாதாரம் வெற்றிகரமாக இயங்க பொதுத்துறைகளும் அவற்றின் சேவைகளும் இன்றியமையாதது என்பதை மறந்துவிட்டது. மார்க்கெட் பொருளாதாரம் பொதுத்துறை நிறுவனங்களின் சேவையோடு இணையும் போது தான் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.இந்திய ஜி.டி.பியில்(GDP) 1.2 சதவீதம் மக்களின் சுகதாராப் பாதுகாப்பிற்கு செலவழிக்கிறது. சீனா 3 சதவீதம் செலவழிக்கிறது. சீனாவில் பொதுச் சுகாதாரம், கல்வி எல்லோருக்கும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தியாவோ சுகாதாரச் செலவு 1.2 சதவீதத்தை 1 சதவீதமாக வெட்டியிருக்கிறது.

ஐ.மு.கூ அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் குழப்பமாக இருந்தது. மோடி அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டமோ முழுவதும் தவறானாதாக இருக்கிறது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அந்நாட்டின் மக்களே மையம் என்பதை இந்த அரசு புரிந்துகொள்ளத் தவறிவிட்டது. ”

விரைவில் வெளிவரவிருக்கும் அமர்த்யா சென்னின் புத்தகமான ‘தி கன்ட்ரி ஆப் பர்ஸ்ட் பாய்ஸ்’ (The Country Of First Boys) என்கிற நூலில் வரவிருக்கும் கட்டுரைகள் நாலந்தா பல்கலைக்கழக பிரச்சனையையும் பேசும். அரசின் பிற்போக்குத்தனமான கொள்கைகளையும், கல்வியியலாளர்களே அரசை எதிர்க்கும் சூழல் வந்திருப்பதையும் ஆரோக்கியமான சூழல் என்று நாம் கொள்ளமுடியுமா ?

Related Images: