சமீபத்தில் சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கார் இயக்கத்தை ஒடுக்கச் செய்து பின் எழுந்த பிரச்சனைகளுக்குப் பின் அதை வாபஸ் வாங்கியது மத்திய அரசு. அரசின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் இந்துத்துவ இயக்கங்கள் இருந்தன. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஆர்.எஸ்.எஸ். ன் ஆர்கனைசர் பத்திரிக்கை ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதில் ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் போன்ற நிறுவனங்கள் இடதுசாரிகளிடமும், காங்கிரஸிடமும் இருக்கின்றன. அவர்கள் நாட்டிற்கு எதிராகவும், இந்துக்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. அனில் ககோத்கர் மற்றும் ஏ.எம். நாயிக் போன்றோர் ஐ.ஐ.டி போர்டில் இருந்து விலகியதைப் பற்றிப் பேசுகிறது. ஐ.ஐ.டி ரூர்கி வாரணாசியில் இருந்தாலும் கேண்டீனில் அசைவ உணவு போடுகிறார்கள் என்று வருத்தப்படுகிறது அந்தக் கட்டுரை.
மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கல்விக் கூடங்களில் எவ்வாறு இந்துத்துவ திட்டங்களைப் புகுத்துவது என்று ஆலோசிக்கிறார். பாலுமகேந்திரா உட்பட இந்தியாவின் தலை சிறந்த பல திரைக்கலைஞர்களை உருவாக்கிய பூனே திரைப்படக் கல்லூரியின் சேர்மனாக ஆர்.எஸ்.எஸ் தொடர்புள்ள ஏதோ ஒரு சாதாரண நடிகரைப் போட்டிருப்பது இதற்கு ஒரு உதாரணம். மாணவர்கள் இதை எதிர்த்து இரண்டு மாதங்களாக போராடியும் பி.ஜே.பி அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
ஐ.சி.சி.ஆர் எனப்படும் கலை, கலாச்சார தொடர்புகளுக்கான தலைவராக புதிதாக நியமிக்கப்பட்ட டாக்டர் லோகஷ் சந்திரா சொல்கிறார் “மோடி காந்தியை விடப் பெரியவராகத் தோன்றுகிறார்.. சொல்லப்போனால் மோடி கடவுளின் ஒரு மறு அவதாரம்” என்று. நம்ம கலாச்சாரம் இனி விளங்கிவிடும். இது போல அறிவியலை இந்து ஆன்மீக மூடநம்பிக்கைகளின் கூடாரமாக மாற்றுவதும்(உதாரணமாக மாட்டுக் கோமியத்தில் மிக உயர்ந்த சத்துக்கள் உள்ளன) நடக்கிறது.
இவை பி.ஜே.பி. அரசின் இந்திய அரசின் எல்லாத் துறைகளையும் காவிமயமாக்கும் தன்மையை வெளிப்படுத்துகிறது. இது தான் மோடியின் “மேக் இன் இந்தியா” தரும் சிறப்பு.