லண்டனில் நடந்த கூகுளின் அறிவியல் கண்காட்சிப் போட்டியில் இந்திய-தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் கிரிட்டின் நித்யானந்தம் மருத்துவத் துறையிலான போட்டியில் இறுதிச் சுற்றில் தேர்வு பெற்றுள்ளான். அவன் கண்டுபிடித்தது அல்ஸீமர் வியாதியைக் கண்டுபிடிக்க உதவும் ஒரு புதிய பரிசோதனையை.
நரம்புச்சிதைவு நோய்களில் கொடுமையானது அல்ஸீமர் மற்றும் டிமன்ஷியா போன்ற நோய்கள். வயதானவர்களைத் தாக்கும் இந்த நோய்கள் ஒருவித நரம்பு-விஷ புரோட்டின்கள் நிறைய மூளையில் உருவாவதால் ஏற்படுகிறது. நோய் கண்டவர்களின் மூளையானது படிப்படியாக இறக்க ஆரம்பிக்கிறது. இந்த புரோட்டீன்கள் உருவாவதை ஆரம்பகாலத்திலேயே கண்டுபிடிக்க முடியாததால் நோய் முற்றிய பின்பே அதன் வெளிப்பாடு தெரியும்.
கிரிட்டின் கண்டுபிடித்தது இந்த வியாதிக்கு ஒரு புதிய எதிர் உயிரி (Antibody). இதை “ட்ரோஜன் குதிரை” எதிர் உயிரி என்றழைக்கிறான். இரத்தத்தில் இந்த எதிர் உயிரியை செலுத்தினால் அது மூளையைப் பாதிக்கும் நரம்பு-விஷ புரோட்டின்களோடு போய் ஒட்டிக்கொள்கிறது. ஒளிரும் தன்மையுடைய இந்த எதிர் உயிரியை வெளியிலிருந்து ஸ்கேனர்கள் மூலம் எளிதில் பார்த்துவிடலாம். இதன் மூலம் நோயாளியின் உடலில் இந்த விஷ புரோட்டீன்கள் உள்ளனவா ? அவை எங்கு உள்ளன ? எப்படிப் பரவுகின்றன என்பதை ஆராயமுடியும். அல்ஸீமர் நோய் வருவதை பத்து வருடங்கள் முன்னாலேயே இந்த சோதனை மூலம் கண்டுகொண்டு தடுக்க முடியும்.
இந்தியாவில் பிறந்த கிரிட்டின் குழந்தையாய் இருக்கும்போது பிரிட்டனுக்குச் சென்றான். சிறுவயதிலேயே காது கேளாத பிரச்சனையால் பாதிக்கப்பட்ட கிரிட்டின் கல்லூரியில் மருத்துவம் படிக்கவேண்டும் என்கிற லட்சியம் கொண்டுள்ளான். தற்போது எப்சம் என்கிற நகரத்தில் வசிக்கும் கிரிட்டின் சட்டன் கிராமர் பள்ளியில் படித்து வரும் மாணவன்.