கவியரசு வைரமுத்துவின் மகனாக பாடலாசிரியராக அறிமுகமாகி தந்தை போல இலக்கியப் பாதைகளில் பயணிக்காமல் கணிப்பொறியியலை துணைக்கு வைத்துக் கொண்டு பாடல்கள், வசனங்கள் என்று முத்திரைகள் பதித்து வருபவர் மதன் கார்க்கி. கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம்,
மெல்லினம் கல்வி நிறுவனம் போன்ற தமிழை நவீனப்படுத்தும் நிறுவனங்களை நடத்திவருகிறார். சமீபத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி வரவிருக்கும் ‘பாகுபலி’ படத்துக்கு வசனகர்த்தா இவர்தான். அவரது வசனகர்த்தா அனுபவங்கள் பற்றி அவருடன் உரையாடிய போது.
பாகுபலி படத்துக்கு எப்படி வசனகர்த்தாவாக ஆனீர்கள்?
ராஜமௌலி சாரின் ‘நான் ஈ’ படம் தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப் செய்யப்பட்ட போது அதில் ‘வீசும் வெளிச்சத்திலே’ பாடல் வரிகளை நான் எழுதினேன். அப்போது ராஜமௌலி சார் ‘வசனம் எழுதுவீங்களா’ என்று கேட்டார். அப்போது சும்மா தான் கேக்கிறார்னு நினைச்சேன். பார்த்தால்
நிஜமாகவே படத்துக்கு வசனம் எழுத வாய்ப்பு கொடுத்துட்டார். இது சரித்திரப் படம்ன்றதுனால என்ன விதமான மொழிநடை பயன்படுத்துறதுன்னு குழப்பமாக இருந்தது. நான்கு விதமான மொழி நடைகளை ட்ரை பண்ணி அதிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுத்தோம்.
பாகுபலியின் தமிழ்ப் படைப்பு எப்படி?
பாகுபலி படத்தின் பெரும்பாலான வசனங்களை நான் தமிழிலே எழுதினேன். பின்பு அவற்றை தெலுங்கிற்கு மொழிபெயர்ப்பு செய்தோம். அந்த வகையில் பார்த்தால் பாகுபலி மூலத்தில் தமிழ்ப் படம் தான். இந்தப் படத்தில் காலகேயர்கள் அப்படின்ற பழங்குடியினத்தினர் வர்றாங்க. அவதார்
படத்துல வர்ற நாவி இனத்தவர்களுக்காக ஒரு நாவி மொழியை உருவாக்கினாங்க. அதே மாதிரி இந்தப் படத்தில் காலகேயர்களுக்கான ஒரு புது மொழியா ‘கால்கே’ அப்படீன்ற புது மொழியை உருவாக்கினேன். ஆப்பிரிக்காவின் தொன்மையான மக்களின் மொழியான ‘க்ளிக்’ மொழியை
அடிப்படையாகக் கொண்டுதான் கால்கே மொழியை உருவாக்கினேன்.
பாடலாசிரியர் சரி..பாடல் இன்ஜினியரிங் என்றால் என்ன?
லிரிக் இன்ஜினியரிங் என்பது கம்ப்யூட்டர் உதவிகொண்டு பாடல்களுக்கான மிகப் பொருத்தமான வார்த்தைகளை கண்டுகொள்வது என்று சொல்லலாம். கம்ப்யூட்டரே பாடல் வரிகளை எழுதிடும்னு நிறைய பேர் இதை தவறா புரிந்துகொள்கிறார்கள். நான் பாடல் எழுத ஆரம்பித்தபோது என்
தந்தையின் அளவுக்கு தமிழ் மொழியில் புலமை என்னிடம் இல்லை. ஆழமான வார்த்தைகளை கண்டுகொள்ள நான் கம்ப்யூட்டரை உபயோகப்படுத்திக் கொண்டேன். ஒரு அக்கௌன்டன்ட்டுக்கு கால்குலேட்டர் எப்படியோ அப்படித்தான் ஒரு பாடலாசிரியருக்கு லிரிக் இன்ஜினியரிங் உபயோகப்படும்.
உங்களுடைய தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பற்றி..
இந்தக் காலத் தலைமுறையினர் தொழில்நுட்பத்தில் அதிகம் திளைக்கிறார்கள். ஆங்கிலம் தொழில்நுட்பங்களில் அடிப்படையாக பயன்படுகிறது. அதில் தமிழையும் நிலைநிறுத்துவது தான் எனது ஆராய்ச்சி நிறுவனத்தின் நோக்கம். நமது தலைமுறையினர் இதன் மூலம் தமிழுடன் மீண்டும்
தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பு உருவாகும். இப்போதைக்கு ‘குறள்’, ‘அகராதி’ அப்படீன்னு இரண்டு குறுஞ்செயலிகள் உருவாக்கியிருக்கிறோம். குறுஞ்செயலி ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வாட்ச்சில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
உங்களுக்கு பிடித்த புத்தகங்கள் பற்றி..
அப்பா அளவுக்கு நான் நிறைய புத்தகங்கள் படித்தவனில்லை. பெரும்பாலும் இந்தக் கால இளைஞர்கள் போலவே கம்ப்யூட்டர், கருவிகள் என்றே வளர்ந்துவிட்டேன். புத்தகங்கள் வாசிப்பதில் பெரிய ஈடுபாடுகள் இல்லை. அது பெரிய தவறு என்று இப்போது நான் வளரும்போது தெரிகிறது.
அப்பாவின் புத்தகங்கள் மட்டும் கொஞ்சம் வாசித்திருக்கிறேன். அவரோட ‘கருவாச்சி காவியம்’ எனது பேவரைட். இலக்கியத்தில் அப்பாவோட இடங்களைத் தொட என்னால் முடியாது. என்னால் ஆன நன்முயற்சிகளை தமிழுக்குச் செய்வேன் என்பது மட்டும் நிச்சயம். .