பீஹாரில் பாட்னா நகரில் இருக்கும் தலித் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சாஞ்சல், வயது 18. எளிமையான சாஞ்சல் அழகும் நிறைந்தவர். அவர் தினமும் கல்லூரிக்குச் செல்லும் வழியில் மேல் ஜாதி இளைஞர்கள் 4 பேர் அவரை வழிமறித்து கிண்டல் செய்தபடியே இருந்திருக்கிறார்கள். ஒருவன் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறான்.
அவர்களை தவிர்த்து விட்டுச் சென்ற சாஞ்சலை “உன் முகம் அழகா இருக்குன்னு உனக்கு அவ்வளவு திமிரா ? அந்தத் திமிரை அடக்குறோம் பாரு. நாங்க மேல்சாதிப் பசங்க. நாங்க என்னவேனாலும் செஞ்சுட்டு கேஷூவலா வெளியே வந்துடுவோம். ஜாக்கிரதை” என்று மிரட்டியுள்ளனர். அப்போதும் அவர் அவர்களுக்குப் பணிய மறுக்கவே அவர்களின் கோபம் தலைக்குமேல் ஏறிவிட்டது.
அக்டோபர் 12, 2012 அன்று இரவு அந்த நான்கு பேரும் தலித் பகுதியில் இருந்த சாஞ்சலின் வீட்டுச் சுவர் ஏறிக்குதித்து முதல் மாடியில் தனது 15 வயது தங்கை சோனமுடன் தூங்கிக் கொண்டிருந்த சாஞ்சலின் அறைக்குள் நுழைந்தனர். மிரண்டு எழுந்த சாஞ்சலின் கையையும், காலையும் அமுக்கி இருவர் பிடித்துக் கொள்ள இன்னொருவன் அவள் முகத்தில் ஆசிட்டை ஊற்றியுள்ளான். அலறித் துடித்த சாஞ்சலின் குரல் கேட்டு பெற்றோரும் அக்கம் பக்கத்தில் இருந்த எல்லோரும் வந்து பார்த்தபோதும் அவர்கள் தப்பிச் செல்ல முயற்சி செய்யவில்லை. தங்கள் சாகசச் செயலின் வெற்றியால் சாஞ்சல் அலறித் துடிப்பதை வெற்றிக் களிப்புடன் பார்த்துக் கொண்டேயிருந்தனர்.
அந்தப் பையன்களைப் பிடித்த அந்த தலித் சமூகத்தினர் மேல் சாதியினர் என்பதால் எதுவும் செய்ய இயலாமல் போலீசில் பிடித்துக் கொடுத்துள்ளனர். சாஞ்சலின் தங்கை சோனமும் இந்த ஆஸிட் தாக்குதலில் பாதிக்கப்பட்டார். பெயிலில் கூலாக வெளியே வந்த அவர்கள் தொடர்ந்து சாஞ்சலையும் அவர் குடும்பத்தினரையும் மிரட்டி வருகிறார்கள். இரவு நேரங்களில் வந்து அச்சுறுத்துவது, வீட்டின் மேல் பாட்டில்களை எறிவது என்று மிரட்டல்கள் தொடர்ந்துள்ளன.
சாஞ்சலுக்கு மருத்துவம் செய்த முக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராகேஷ் குமார் அவளுக்கு 15 அறுவை சிகிச்சைகள் செய்யவேண்டியிருக்கும் எனக் கூறியுள்ளார். அவளுடைய உதடுகளும், கண் இமைகளும் ஆஸிட்டில் உருகிவிட்டன. அவளது கழுத்துச் சதை நெஞ்சின் மேல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அவள் முகத்தை பழைய நிலைக்கு கொண்டு வரவே முடியாது ஒரளவு சரி செய்யத்தான் முடியும் என்கிறார்.
இவ்வளவு துன்பங்களுக்குப் பின்னும் மேல் சாதியினரால் மிரட்டப்பட்டு வரும் சாஞ்சலுக்கு ஆதரவாக பரிவர்த்தன் கேந்த்ரா என்கிற தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த வர்ஷா என்பவர் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஒரு மனுவை இணையத்தில் உருவாக்கியுள்ளார். சாஞ்சலின் வாழ்க்கையை இன்னும் மிரட்டிவரும் அந்த நால்வரையும் பெயிலில் வரமுடியாதபடி சிறையில் அடைக்க அதில் கோரிக்கை வைத்துள்ளார். இதுவரை 45 ஆயிரம் பேர் வரை அதில் கையெழுத்திட்டுள்ளனர்.
நீங்களும் சேஞ்ச்.ஆர்க்(Change.org) இணையதளத்தில் இங்கே போய் அந்த பெட்டிஷனுக்கு உங்கள் ஆதரவைத் தெரிவிக்கலாம்.
ஆஸிட் ஊற்றப்பட்ட சாஞ்சலாவின் மன உறுதியான போராட்டத்தைப் பற்றி இந்த வீடியோவில் பாருங்கள்.
பெண்ணின் அழகும் தனக்கு அடிமையாகத்தான் இருக்கவேண்டும் என்கிற வக்கிரமாய் நினைக்கும் ஆண் மனங்களின் வெறிக்குப் பலியானவர்களில் சாஞ்சலும் ஒருவர்.