இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான “வராஹா’ என்கிற ரோந்துக் கப்பலை இலங்கைக் கடற்படைக்கு குத்தகை அடிப்படையில் தமிழக மீனவர்களை ‘கவனிக்க’ கொடுத்திருந்த இந்திய அரசு நேற்று அதை ப்ரீயாகக் கொடுத்திருக்கிறது.
“இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் ‘குற்றங்களை’த் தடுக்கும் நடவடிக்கையில் இலங்கை காட்டி வரும் ஈடுபாட்டைப் போற்றும் வகையில்”, இந்த ரோந்துக் கப்பல் அந்த நாட்டுக்கு இலவசமாக அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது எப்படி இருக்கு?
இதையொட்டி, கொழும்பு துறைமுகத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், “வராஹா’ கப்பல் முறைப்படி இலங்கைக்கு அளிக்கப்பட்டது. மத்திய அரசு சார்பில் கொழும்பில் உள்ள இந்தியத் தூதர் ஒய்.கே. சின்ஹா, இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் பி.எம்.யு.டி. பஸ்நாயகேவிடம் கப்பலை அளிக்கும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இலங்கைக் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னே, இலங்கை முப்படை அதிகாரிகள், இந்தியத் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் 1992-ஆம் ஆண்டில் கடலோரக் காவல் படைக் கண்காணிப்புப் பணிக்காக இந்த ரோந்துக் கப்பல் தயாரிக்கப்பட்டது. 75 மீட்டர் நீளம், 11 மீட்டர் அகலம் கொண்ட இந்தக் கப்பல் தொடக்கத்தில் இந்தியக் கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டது. 2006-ஆம் ஆண்டில் இந்தக் கப்பல் சிங்களக் கடற்படையின் ரோந்துகளுக்காக குத்தகை அடிப்படையில் இலங்கைக்கு தரப்பட்டது. அதில் சிங்களப் படையினர் ரோந்து வந்து தமிழக மீனவர்களையே அடித்துத் துவைத்திருக்கிறார்கள். சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் இந்தக் கப்பல் தமிழ்ப் போராளிகளை அழிக்க அவர்களுக்கு ரொம்ப உதவியாக இருந்ததாம்.
இந்தக் கப்பலுக்கு “சாகரா’ என இலங்கைக் கடற்படை பெயர் சூட்டி பயன்படுத்திவந்தது. இந்த நிலையில், குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட இந்த ரோந்துக் கப்பலை இலங்கை சிங்கள அரசுக்கே இலவசமாக வழங்க மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு முடிவு செய்தது. இதையடுத்து, “வராஹா’ என பெயர் சூட்டப்பட்டு முறைப்படி இலங்கைக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வெளிநாடுகளுடனான நல்லுறவை மேம்படுத்தும் இதுபோன்ற நிகழ்வுகளை மத்திய அரசு இந்தியாவில் உள்ள ஊடகங்களுக்கு முறைப்படித் தெரிவிப்பது வழக்கம். ஆனால், இலங்கைக்கு இலவசமாக இந்தியா அளித்துள்ள ரோந்துக் கப்பலைப் பற்றியும், 2006லிருந்து இதுவரை குத்தகைக்கு விட்டிருந்தது பற்றியுமான தகவல்களை இந்திய அரசு தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குத் தெரியாமல் வேண்டுமென்றே மறைத்துள்ளது. ஏனென்றால் இத்தகவல் முன்கூட்டியே வெளியே தெரிந்தால், தமிழகத்திலிருந்து எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கும் எனக் கருதி ரகசியமாக வைக்க மத்திய அரசு கருதியதாகத் தெரிகிறது. அதனால், இந்த விவரம் கடைசி வரை ரகசியமாகவே தில்லியில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கப்பல் ஒப்படைப்பு நிகழ்வு தொடர்பான தகவலை, நிகழ்வு நடைபெற்ற ஒரு நாளுக்குப் பிறகு இலங்கை பாதுகாப்புத் துறையே வெளியிட்டுள்ளது.
பார்த்துக் கொள்ளுங்கள். இது தான் இந்தியா என்னும் ஒருங்கிணைந்த நாட்டில் அடுத்த நாட்டு சிங்களவனுக்குத் தரப்படும் முன்னுரிமைகூட தமிழனுக்குக் கிடையாது. தமிழர்களுக்கு எதிரியாக இருக்கும் சிங்களனுக்கு ரகசியமாக இந்தியா உதவி செய்யும் கதை தொடர்ந்து நடந்து வந்துதான் இருக்கிறது. தமிழ் நாட்டில் ஏதாவது எழுச்சி கிளம்பும் ? இலங்கையுடனான கள்ள உறவை நிறுத்து !! இலங்கைக்கான இந்தியத் தூதரை தமிழனாக நியமி !! என்று போராடுவார்களா தமிழர்கள் ?