ஐ.எஸ்.ஐ.எஸ்ஸால் கடத்தப்பட்ட 4 இந்தியர்களில் இருவர் நேற்று இந்தியா திரும்பினர். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் அவர்களை விடுவித்ததைத் தொடர்ந்து அவர்கள் இந்தியா வந்தடைந்தனர்.
லஷ்மிகாந்த், விஜய்குமார், கோபிகிருஷ்ணா மற்றும் பால்ராம் ஆகியோர் லிபியாவில் சர்டே யுனிவர்சிட்டியில் ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வந்தனர். கடந்த ஜூலை 29ம் தேதி லிபியாவில் திரிபோலியில் இந்தியா கிளம்பவிருந்த இவர்கள் நால்வரும் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர்.
இந்திய அரசு அவர்களைக் காப்பாற்ற முயற்சி எடுக்கிறோம் என்று சொல்லி முடிப்பதற்குள் அவர்களில் லஷ்மிகாந்த் மற்றும் விஜய்குமாரை தீவிரவாதிகள் விடுவித்துள்ளனர். நேற்று ஹைதராபாத் வந்தடைந்த அவர்களை விமான நிலையத்தில் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.
தீவிரவாதிகள் பற்றி விஜய்குமார் கூறுகையில் “அவர்கள் நாங்கள் முஸ்லீம் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டார்கள். அவர்கள் எங்களை மரியாதையாக நடத்தினார்கள். அவர்கள் விரல் கூட எங்கள் மேல் படவில்லை. எங்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் நீங்கள் அதனால் உங்களை விடுதலை செய்கிறோம் என்று கூறி விடுதலை செய்துவிட்டனர்” என்றார்.
இவர்கள் இருவரும் இந்தியா வந்தவுடன் மற்ற இருவரையும் விடுதலை செய்துவிடுவதாகவும் கடத்தியவர்களில் ஒருவன் கூறியதாக லஷ்மிகாந்த் தெரிவித்துள்ளார். அதனால் கவலைப்படவேண்டாம் என்று அவர்கள் கூறியதாக அவர் பால்ராமின் மனைவி ஸ்ரீதேவியிடம் தெரிவித்தார்.