தற்போது முடங்கியிருக்கும் மல்லையாவின் கிங்பிஷர் விமானநிறுவனத்தின் மேல் தகுந்த நேரத்தில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் விட்டதால் அரசிற்கு 290 கோடி ரூபாய் மேலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று சி.ஏ.ஜி அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
நிறுவனத்தை நடத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகளாலும், ஏறிக்கொண்டிருந்த கடன்களாலும் கிங்பிஷர் நிறுவனத்தின் விமானப் போக்குவரத்து உரிமத்தை 2012ல் விமானப் போக்குவரத்து கண்காணிப்பகம் ரத்து செய்தது.
ராஜ்யசபாவில் நேற்று சி.ஏ.ஜி சமர்ப்பித்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.. “விமானநிலைய அமைச்சகமும், விமானப் போக்குவரத்து அமைச்சகமும் ஏற்கனவே கடன்களில் மூழ்கியிருந்த கிங்பிஷர் நிறுவனம் அனுமதிக்கப்பட்ட கடன் வரம்பையும் தாணடி கடனாளியானதை கண்டுகொள்ளாமல் அந்நிறுவனத்தை தொடர்ந்து இயங்க அனுமதித்ததால் 289 கோடி ரூபாய் வரை அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.”
கிங்பிஷர் செலுத்தியிருந்த பாதுகாப்பு டெபாசிட் தொகையை விட அதன் கடன்கள் பலமடங்கு ஏறியபோதும் போக்குவரத்து அமைச்சகம் அதைக் கண்டுகொள்ளாமல் கிங்பிஷர் தொடர்ந்து இயங்க அனுமதித்துள்ளன. டிசம்பர் 2012ல் கிங்பிஷர் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. மஞ்சள் கடுதாசி கொடுத்துவிட்டு ஜாலியாக உலாவந்தார் மல்லையா. 2013-14 ல் இந்திய விமானநிலைய அமைச்சகம் கிங்பிஷரின் கடன்தொகை 172.69 கோடி ரூபாய்களைத் தள்ளுபடி செய்தது. அதற்கு தரவேண்டிய வட்டியையும் சேர்த்தால் 289 கோடி.
3 லட்ச ரூபாய் கடன் வாங்கும் விவசாயியை விரட்டி விரட்டி வேட்டையாடும் வங்கிகள் இருக்கும் நாட்டில் மல்லையாவுக்கு மட்டும் ப்ரீயாக 172 கோடி. சும்மா சொல்லக்கூடாது மல்லையாவுக்கு மச்சம்யா !!