நாட்டை எல்லையில் காத்த முன்னாள் ராணுவ வீரர்கள் 22 லட்சம் பேரும், இறந்த வீரர்களின் விதவைகள் 6 லட்சம் பேரும் ஆவலுடன் எதிர்பார்த்த விஷயம் ‘ஒரே பதவி. ஒரே பென்ஷன்.’ என்கிற திட்டத்தைத் தான். இதன்படி ராணுவத்தில் ஒரே கிரேடு அல்லது தரவரிசையில் இருக்கும் ராணுவ வீரர்கள் அனைவருக்கும் ஒரேஅளவான பென்சன் எல்லா காலத்திலும் கிடைக்கும். தற்போது முதலில் ரிட்டையர் ஆனவர்களுக்கு குறைவாகவும் பின்னால் ரிட்டையர் ஆகுபவர்களுக்கு அதிகமாகவும் அந்தந்த வருடத்தின் பணமதிப்புக்கேற்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
இந்த பென்சன் திட்டத்தைக் கொண்டு வருவோம் என்று லோக்சபா தேர்தலில் மோடி சபதம் செய்திருந்தார். ஆனால் இன்றுவரை அது வரும் அறிகுறி இல்லாததால் ராணுவ வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் திரண்டு போராடிவருகிறார்கள். அவர்களை விரட்ட வந்த போலீஸ் கமிஷனர் பஸ்ஸி நாட்டுக்காக எல்லையில் போராடியவர்கள் இன்று தங்களுக்காக பிரதமர் அலுவலகம் முன் அமைதியாகப் போராடட்டும் என்று அனுமதித்தார்.
அவர்கள் போராட்டத்தில் ராகுல் காந்தி வந்து கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது “ஒரே பதவி. ஒரே பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த பிரதமர் செய்யவேண்டியது ஒரு தேதி மட்டுமே. அந்த நாள் முதல் அது அமலுக்கு வரும் என்றால் இந்தப் போராட்டம் இனித் தேவையில்லை.
ஆனால் என்ன செய்வது ? அவரால் முடியவில்லை. நம் பிரதமர் நிறைய உறுதிகள் தருகிறார். ஆனால் அவரால் அவற்றை நிறைவேற்ற முடிவதில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க மேக் இன் இந்தியா என்றார். ஆனால் வேலைகள் தான் வரவில்லை. இந்தியாவைச் சுத்தம் செய்வேன் என்றார். ஸ்வச் பாரத் சுத்தமாக்கவில்லை. தனது கார்ப்பரேட் நண்பர்களிடம் நில அபகரிப்பு சட்டத்தை நிறைவேற்றுவேன் என்றார். அதுவும் நிறைவேறவில்லை. ஓ.எஸ்.ஓ.பி எனப்படும் இத்திட்டம் நிறைவேற காங்கிரஸ் முழு ஆதரவு தரும்” என்றார் ராகுல் காந்தி.
தனது சுதந்திர தின உரையில் கூட மோடி “நாங்கள் கொள்கை ரீதியாக ஒரே பதவி – ஒரே பென்சன் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால் இன்னும் சில நடைமுறைச் சிக்கல்களுக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என்றாரேயொழிய உறுதியாய் ஒன்றும் சொல்லக் காணோம். இந்நிலையில் ஓய்வுபெற்ற ராணுவத்தினர் தங்களது போராட்டத்தைத் தொடரப்போவதாக அறிவித்துள்ளனர்.