உலகளாவியப் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையின் தாக்கமாக இந்திய பங்கு சந்தைகள் மிக கடுமையான சரிவை கண்டன.
பங்குச்சந்தையில் காலை வர்த்தகம் தொடங்கிய போதே கடும் சரிவுடன் துவங்கியது . மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1098 புள்ளிகள் சரிந்து 26,359 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 8000 புள்ளிகளிலிருந்து 7990.90 ஆக தொடர்ந்து சரிந்து வருகிறது.
எல்லா ஆசியப் பங்குசந்தைகளிலும் சீனாவின் ஷாங்காய் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு எதிரொலித்தது. இந்தச் சந்தை சூதாட்டத்தில் வல்லரசுகள் தங்கள் பணத்தை நிலைநிறுத்த இப்படி மற்ற நாடுகளைக் காலை வாரிவிடுவது நடக்கும்.
இந்தியச் சந்தையில் ஐசிஐசிஐ, இன்ஃபோசிஸ், ஆக்சிஸ் பாங்க், ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 66 காசுகள் சரிந்து ரூ.66.50 எனும் நிலைக்கு வந்துள்ளது.
உலகளவில் டாலரின் மதிப்பு அதிகரித்திருப்பதும் (எப்படி?), சில வாரங்களாகவே சீனாவின் பணமான யுவானின் மதிப்பு கடுமையாக சரிந்திருப்பதும், ரூபாயின் மதிப்பில் கடும் சரிவை ஏற்பட்டிருக்கிறது. ஒரே நாளில் மட்டும் இந்திய பங்குச் சந்தையில் 7 லட்சம் கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கிறதாம்.
உலக சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாகவே இந்திய பங்குச்சந்தையில் இத்தகைய தாக்கம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ‘அது எப்படி தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்?’ என்று யாராவது கேட்டால் பதில் பணப் பாய்ச்சல், பண வீக்கம், ஏற்றுமதி இறக்குமதி என்று பதில் வரும். ஆனால் ஒரே நாளில் 7 லட்சம் கோடி நட்டம் ஆகும்படி உலகத்தில் அப்படி பேரழிவோ, இல்லை ஏதும் பெரும் பிரச்சனைகளோ நடக்காத பட்சத்தில் எப்படி இந்த நஷ்டம் ?