சிரியா நாட்டில் அரசப்படைகளுக்கும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் சண்டை நடந்து வரும் சூழலில் அகதிகள் பல்லாயிரக்கணக்கில் வெளியேறி வருகின்றனர். அமெரிக்காவும் அதன் சார்பு நாடுகளும் ஐ.எஸ் அமைப்பை வளரவிடுவதன் மூலம் மறைமுகமாக சிரியா அரசுக்கு நெருக்கடி தருகின்றன. சிரிய அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்கியுள்ளது.
ரஷ்ய நாட்டு பத்திரிகைக்கு சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் அளித்தப் பேட்டியில் இதுபற்றி கூறும்போது, “ஐரோப்பிய நாடுகள் சிரிய அகதிகளை கண்டுகொள்ளவில்லை என்பது தற்போதைய பிரச்சினை அல்ல. உண்மையில் உங்களுக்கு என் மக்கள் மீது அக்கறை இருந்தால் தீவிரவாதத்துக்கு துணை போகாமல் இருங்கள். அகதிகளின் நிலைப்பாடும் இதுதான். தீவிரவாதம் மட்டுமே பிரச்சினை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.” என்றார்.
“சிரியாவின் நிலைமைக்கு பொறுப்பேற்று பதவி விலகத் தயாரா என்ற கேள்விக்கு, “நாட்டின் அதிபரை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். நானும் அப்படித்தான் பதவிக்கு வந்தேன். அந்த மக்களே அதிபர் வேண்டாம் என நினைத்து முடிவு செய்தால்தான் நான் பதவி விலகுவேன். அமெரிக்கா விரும்புகிறது என்பதற்காகவோ, ஐ.நா. கவுன்சில் ஆசைப்படுகிறது என்பதற்காவோ நான் பதவி விலக மாட்டேன். மக்கள் விரும்பும்வரை சிரிய நாட்டு அதிபராக தொடர்வேன். அவர்கள் வேறு மாதிரி விரும்பினால் வேறு வழியில்லை. பதவி விலகியே தீர வேண்டும்.
ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்ததற்கு காரணம் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும்தான். அந்த தீவிரவாத அமைப்பை அழிக்கவும் வளர்வதை தடுக்கவும் இந்த நாடுகள் ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை.” என்றார்.
சிரியா அதிபர் பஷார்-அல்-ஆசாத் படைகளுக்கு தேவையான ராணுவ உதவிகளை ரஷ்யா வழங்கி வருவதாக அமெரிக்கா முன்பு கூறியிருந்தது. அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, “சிரியாவின் போக்கு குறித்து அமெரிக்க அதிபர் ஒபமா கவலை தெரிவித்துள்ளார். தாக்குதலினால் சிரியா பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. இதற்கு அரசியல் ரீதியான தீர்வு வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு. சிரியாவின் சில பகுதியில் ரஷ்யத் தயாரிப்பு டாங்குகள் நடமாட்டம் உள்ளது. அவர்கள் உதவுவதை நிறுத்த வேண்டும்.” என்று கூறினார்.
அமெரிக்கா மட்டுமே நாட்டாமை. அவர்கள் மட்டும் தீவிரவாதத்துக்கு எதிராக ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் என்று எந்த நாட்டிலும் சென்று இறங்கிப் போரிடுவார்கள். அப்படியே அந்த நாட்டையும் பொருளாதார ரீதியாக வளைத்துக் கொள்வார்கள். ஆனால் ரஷயாவோ அல்லது வேறு எந்த நாடோ இது போன்று உதவி என்று செய்தால் அவ்வளவு தான்.