அம்மா உணவகம், அம்மா உரம், அம்மா மருந்து கடை வரிசையில் அடுத்ததாக வந்திருப்பது ‘அம்மா இலக்கிய விருது’.
இந்த ஆண்டு முதல், இலக்கிய பெண் படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும், அம்மா இலக்கிய விருது என்ற புதிய விருது சித்திரை தமிழ்ப்புத்தாண்டு நாளில் வழங்கப்படும் என்றும், அதன்படி சிறந்த படைப்பினை தந்து விருது பெறுபவருக்கு 1 லட்ச ரூபாய் பண முடிப்பு, தகுதி உரையும் அளிக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அத்துடன் மொழிபெயர்ப்புக்களை ஊக்குவிக்கும் வகையில் தரமான பிற மொழி படைப்புகளை சிறந்த மொழியில் தமிழாக்கம் செய்யும் 10 மொழி பெயர்ப்பாளர்களுக்கு ஆண்டு தோறும் சிறந்த ‘மொழி பெயர்ப்பாளர் விருது’ வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்,
இது தவிர இலக்கணம், இலக்கியம், மொழியியல் துறைகளில் சிறந்து விளங்கும் வெளிநாட்டு வாழ் தமிழறிஞர்கள் 3 பேருக்கு, சித்திரை தமிழ்புத்தாண்டில் உலக தமிழ்ச்சங்க விருதுகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நம்ம சந்தேகம் என்னவென்றால் ‘அம்மா ஜால்ரா’ போடும் ஆட்களுக்கு மட்டுமே இந்த அம்மா விருதுகள் கொடுக்கப்படுமாே ? என்பது தான்.
அம்மா விஷயம் அப்படியென்றால் சபாஷ் போட வைக்கும் மொழி வளர்ப்பு விஷயத்தையும் செய்திருக்கிறார் அம்மா. திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் ஆகியவை, சீன மற்றும் அரபு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளதாகவும், திருக்குறளை கொரிய மொழியில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மேலும் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் ‘தமிழ் கவிஞர் நாள்’ என்ற பெயரில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். பாரதிதாசன் புகழை பரப்பிடும் வகையில், அவரின் 125 வது பிறந்தநாளையொட்டி, 125 கவிஞர்களைக் கொண்டு 2 நாள் கவியரங்கம் ரூ.5 லட்சம் செலவில் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.