ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் கடந்த 6 மாதங்களாக ‘ஒரே பதவி – ஒரே ஓய்வூதியம்’ என்கிற கோரிக்கையை வலியுறுத்திப் போராடி வருகின்றனர். பிரதமர் மோடி கூட இத்திட்டத்தை ஆதரிப்பதாகத்தான் சொன்னார். ஆனால் நிதியமைச்சர் அருண் ஜேட்லியோ ஜெட்லீ போல பாய்ந்து ராணுவ வீரர்களைத் தாக்கிப் பேசியுள்ளார்.
இதுபற்றிப் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் “ஆண்டுதோறும் ஓய்வூதியத்தை உயர்த்துவது என்பது உலகில் எந்த நாட்டிலும் நடைபெறாத ஒன்றாகும். ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை அமல்படுத்த எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. அதில் சில எண்கணிதச் சிக்கல்கள் இருப்பது தான் பிரச்சனையாக உள்ளது. இது தொடர்பாக என்னிடம் தனித்திட்டம் உள்ளது. பலரிடம் பல திட்டங்கள் இருக்கலாம். அது நியாயமானதாகவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கவேண்டும்”.
“மாதந்தோறும் அல்லது வருடந்தோறும் ஓய்வூதியம் உயர்த்தப்பட வேண்டு் என்று கேட்டால் இத்திட்டம் உங்களுக்குக் கிடையாது. ராணுவத்தில் பணியாற்றிவிட்டு 35, 3 வயதுகளில் ஓய்வுபெறும் வீரர்களின் நலனை நாங்கள் பாதுகாப்போம். இதுபோன்ற கோரிக்கைகள் சமூகத்தில் மற்ற பிரிவினரும் இதே கோரிக்கையை முன்வைக்க வழிவகுக்கும். எல்லைப் பாதுகாப்புப் படையினரும், மத்திய ரிசர்வ் படையினரும் இதே கோரிக்கையை கேட்கவேண்டுமா? அரசுக்கு நீங்கள் புதிய சுமையை உருவாக்கக்கூடாது.” என்று ஜேட்லி பேசினார்.
நாட்டுக்காக உயிரைக் கொடுப்பவர்கள். தேசபக்தி. வீரமரணம் என்று ராணுவ வீரர்களின் வாழ்க்கையில் தேசபக்தி வேப்பிலை அடித்து வாழும் இந்த அரசுக்கு அவர்கள் பணியாற்றி ஓய்வுபெற்றதும் அவர்கள் செல்லாக்காசாக தோன்றுவதன் காரணம் என்ன? ஜேட்லி கூறுவதுபோல ராணுவத்தினருக்கு ஆண்டுதோறுமா சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. அரசு நிறுவனங்கள் அனைத்திலும் 5 அல்லது 10 வருடங்களுக்கு ஒருமுறை சம்பளக் கமிஷன் அமைத்து, அந்த சம்பளக்கமிஷன் அப்போதைய விலைவாசி, நாணயமதிப்பு போன்ற விஷயங்களை கணக்கில் எடுத்து பின்னர் புதிய ஊதிய உயர்வை பரிந்துரைக்கும். ஊதியத்தை எல்லோருக்கும் சமவீதத்தில் உயர்த்த என்ன நடைமுறையோ அதே நடைமுறைதானே ஓய்வூதியத்திற்கும் பின்பற்றப்படவேண்டும் ?
ஓய்வூதியம் என்பது அரசு ராணுவ வீரர்களுக்குப் போடும் பிச்சை அல்ல. அது அவர்கள் நாட்டுக்கு இரவு பகல் பாராது உழைத்து ஆற்றிய சேவைக்கு தரப்படும் ஊதியம். பாதுகாப்புப் படையினர் ரிசர்வ் படையினர் மட்டுமல்ல எல்லா அரசுத் துறை ஊழியர்களுக்கும் இந்த விகிதாச்சார அடிப்படையில் ஓய்வூதியங்கள் உயர்த்தப்பட வேண்டும். 00 வயதில் மாதம் 6000 ரூபாய் ஓய்வூதியத்துடன் ஒருவர் வாழ முடியும் என்றால் இருபது வருடம் கழித்து 80 வயதிலும் அவர் அதே பணத்தில் தான் வாழவேண்டும் என்பது என்ன நியாயம் ? 20 வருடத்தில் விலைவாசியும், வாழ்க்கை அடிப்படைத் தேவைகளும், பணத்தின் மதிப்பும் அதே அளவிலா இருக்கின்றன ?
ஆண்டுதோறும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பல லட்சம் கோடிகளை யாரையும் கேட்காமலேயே தள்ளுபடி செய்ய முடிந்த அரசுக்கு சில ஆயிரம் கோடிகள் மட்டுமே தேவைப்படும் இத்திட்டத்திற்கு ஏன் பணமில்லை என்கிறது ? நிதியமைச்சர் ஜேட்லிக்கு வீரர்களின் கோரிக்கையின் அடிப்படை விஷயம் எப்படித் தெரியாமல் போனது என்று கேட்பதை விட, எதை வைத்து இந்த கோரிக்கையை அநியாயம் என்று ஆணித்தரமாகப் பேசுகிறார் ? என்பதுதான் நமது கேள்வி.