இந்தியாவையே இருபத்தியிரண்டாம் நூற்றாண்டுக்குக் கொண்டு செல்லும் நவீனத்தின் அடையாளமாக காட்டப்பட்ட ஆதார் அட்டைக்கு கொடுக்கப்பட்ட பில்டப்புகள் அதிகம். ஆதார் இருந்தால் தான் காஸ் மானியம் தருவோம், லைசன்ஸ் தருவோம் என்றெல்லாம் சொல்லி அப்புறம் நீதிமன்றம் தலையில் குட்டியபின் தான் சைலன்ட்டானார்கள் ஆதாரை நாட்டின் புரட்சி போலக் கருதியவர்கள்.
தற்போது ரூ.13,000 கோடி பணத்தை முழுங்கிய ஆதார் அட்டைத் திட்டங்கள் எந்தவித டெண்டர்களும் கொடுக்கப்படாமல் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. தகவலறியும் உரிமைச் சட்ட செயல்பாட்டாளர் அனில் கல்கலி தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துக்கு சில கேள்விகளை கேட்டிருந்தார்.
அதற்கு ஆணையம் அளித்துள்ள பதிலில், மொத்த திட்ட ஒப்பந்தங்களின் மதிப்பு ரூ.13,663.22 கோடி. இவை எல்லாமே எந்த டெண்டர்களும் முறைப்படி கோரப்படாமல் விரும்பிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மே, 2015 வரை அளிக்கப்பட்ட 90.3 கோடி ஆதார் அட்டைகளுக்காக ரூ.6,503 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய திட்டத்துக்கு 25 நிறுவனங்களுக்கு பல பொறுப்புகள் வழங்கப்பட்டன. இவ்வாறு ஆணையம் தனது பதிலில் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆர்.டி.ஐ. செயல்பாட்டாளர் கல்கலி கூறும்போது, “இது அதிர்ச்சிகரமானது. நாட்டுமக்களின் பல்வேறு பிரிவினரும், உச்ச நீதிமன்றமும், சிவில் சமூக குழுக்களும் பெரும் கவலைகளை இத்திட்டம் குறித்து வெளிப்படுத்தியுள்ளனர், அதாவது தனியுரிமைக் கொள்கையை உடைப்பதாக ஆதார் திட்டம் உள்ளது. சுமார் 125 கோடி மக்களின் அந்தரங்க, சொந்த விவரங்கள் தனியார் நிறுவனங்களின் கைகளில் உள்ளது. பிரதமர் மோடி இது குறித்து விசாரணை நடத்த வேண்டும், ஒப்பந்தங்கள் வழங்கியதில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் மீது விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.
ஆதார் திட்டத்துக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் சில நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. டாடா கன்சல்டன்சி, மேக் அசோசியேட்ஸ், விப்ரோ, எச்.சி.எல். எச்.பி. இந்தியா சேல்ஸ் (பி) லிட்., நேஷனல் இன்ஃபர்மேடிக்ஸ் செண்டர், சாகெம் மார்போ செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடட், சத்யம் கம்ப்யூட்டர்ஸ், எல்1 ஐடெண்டிடி சொல்யூஷன்ஸ், டோடம் இண்டெர்னேஷனல், லிங்க்வெல் டெலிசிஸ்டம், சாய் இன்ஃபோ சிஸ்டம்ஸ், ஜியோடெஸிக் லிட். ஐடி சொல்யுஷன்ஸ், என்.ஐ.எஸ்.ஜி, எஸ்.கியு.டி,.சி, டெலிசிமா கம்யூனிகேஷன்ஸ் ஆகிய தனியார் நிறுவனங்கள் இதில் அடங்கும். ஒரு ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்களில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாடா கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல், பார்தி ஏர்டெல், பி.எஸ்.என்.எல். மற்றும் ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆகியவை அடங்கும்.
இந்த எல்லா நிறுவனங்களும் ஒரு திட்டத்திற்கு டெண்டர் விட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்படவேண்டும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாத கம்பெனிகளா? இது முறையற்றது என்பது தெரியாமலா இவ்வளவு வருடங்கள் தொழில் செய்து பல லட்சம் கோடிகளுக்கு சொந்தக்காரர்களாயுள்ளனர்? இவர்களில் பாதிப்பேருடன் பிரதமர் மோடி முதல் மன்மோகன் வரை வருடத்தில் பாதி நாட்கள் தொழில் முறையாக சந்திப்பு நடத்தி வருகின்றனர். ஆனால் யாருக்கும் இந்த முறைகேடு பற்றி இவ்வளவு நாள் தெரியவேயில்லை என்பது என்ன விதமான பேச்சு? அல்லது நாட்டில் உள்ள எல்லா பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் சம்பந்தப்பட்டுவிட்டதால் இது முறைகேடே இல்லையா? கோல்கேட்டில் நிலக்கரி சுரங்கங்கள் இப்படித்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அவை எல்லாவற்றையும் சுப்ரீம் கோர்ட் செல்லாதது என்று ஆக்கியது. ஆதார் அட்டைகள் விஷயத்தில் என்ன செய்யப்போகிறார்கள்?