கூவம் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும் ஆற்றைப் புனரமைக்கவும் கோரி சென்னையைச் சேர்ந்த டேவிட் வில்சன் வழக்கு தொடர்ந்துள்ளார். நீதித்துறை உறுப்பினர் நீதிபதி எம்.சொக்கலிங்கம், தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. கூவம் ஆற்றில் கழிவுநீர் விடப்படும் விவகாரம் தொடர்பாக ஆறு முழுவதும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
அரசுத் தரப்பு வழக்கறிஞர், ‘‘அரசுத் தலைமைச் செயலரைத் தலைவராகக் கொண்ட கூவம் ஆறு புனரமைப்பு அறக்கட்டளையின் கூட்டம் ஆகஸ்ட் 5 மற்றும் 26-ம் தேதி நடத்தப்பட்டது. அதன் பின்னர், கூவம் ஆற்றில் கழிவுநீர் விடப்படுவது தொடர்பாக தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், சென்னை குடிநீர் வாரியம், சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை ஆகியவை ஒன்றிணைந்து கடந்த செப்டம்பர் 3-ம் தேதி கூட்டு ஆய்வு நடத்தியது. அதில் கூவம் ஆற்றில் எந்தெந்த பகுதியில் கழிவுநீர் விடப்படுகிறது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது’’ என்றார்.
அதனைத் தொடர்ந்து, கூவம் ஆற்றில் கழிவுநீர் விடப்படுவது தொடர்பாக, ஆறு முழுவதும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதில், ஏற்கெனவே சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை விடுவதாக கண்டுபிடிக்கப்பட்ட 3 பெரிய தொழிற்சாலைகளின் தற்போதைய நிலை, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை ஆற்றில் விடுவோர் மீது மாசுகட்டுப்பாட்டு வாரியம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் இடம்பெற வேண்டும் என்று உத்தரவிட்ட அமர்வின் உறுப்பினர்கள், மனு மீதான அடுத்த விசாரணையை நவம்பர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
கூவத்தில் கழிவு நீர் கலப்பவர்கள் பெரும் தொழிற்சாலைகளே. இவை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. மாசுக் கட்டுப்பாரியம் லஞ்சத்தால் மாசடைந்திருப்பதால் அதுவே தூசியும் புதருமாக காட்சியளிக்கிறது. இதில் எங்கே கழிவைக் கலப்பவர்கள் மீது நடவடிக்கை?