பி.ஜே.பி அரசு சமீபத்தில் எடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் வேண்டுமென்றே மற்ற புள்ளிவிவரங்களை மறைத்துவிட்டு வெறுமனே மதரீதியான புள்ளிவிவரங்களை மட்டும் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையேயான வெறுப்புணர்வை வளர்ப்பதே அதன் முக்கிய நோக்கம். அதை உறுதி செய்யும்படி பா.ஜ.கவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மதமாற்றத்தைத் தடை செய்யவேண்டும் என்று பேசியுள்ளார்.
பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் “சமீபத்தில் வெளியான மதரீதியான கணக்கெடுப்பின்படி இந்தியாவில் இந்துக்களின் சராசரி குறைந்துள்ளது. முஸ்லீம்களின் சராசரி அதிகரித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த 100 ஆண்டுகளில் இந்துக்களுக்கு இந்த நாட்டில் இடமில்லாமல் போய்விடும். இதற்கு மூன்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.”
“முதலாவதாக ஜனத்தொகை இந்த விகிதத்திலேயே இருக்கும்படி நிலைப்படுத்த வகை செய்யப்படவேண்டும். அடுத்து பொது சிவில் சட்டம் உடனடியாக இயற்றப்பட வேண்டும். நாடு முழுதும் சட்ட ரீதியாக மதமாற்றம் தடை செய்யப்படவேண்டும். ம.பி, ஒரிஸ்ஸா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியிலேயே மதமாற்றத் தடைச் சட்டம் அமல் படுத்தப்பட்டுள்லது. மேலும் ஒருவனுக்கு ஒரு மனைவி, தம்பதிக்கு ஒரு குழந்தை என்கிற குடும்பக் கட்டுப்பாட்டுச் சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். இம்மூன்றும் நிகழ்ந்தால் மட்டுமே பெரும்பான்மை இந்துக்கள் அரசின் மேல் நம்பிக்கை கொள்வார்கள்”.
“இதற்குக் காங்கிரஸூம், கம்யூனிஸ்ட்டுகளும் கண்டிப்பாக முட்டுக்கட்டை போடுவார்கள். அவர்களுக்கு அழுத்தம் தரும் வகையில் இந்தச் சட்டங்களை ஏற்றால் மட்டுமே உங்கள் கட்சியில் இருப்போம் என இந்துக்கள் வெளியேறவேண்டும். நாடு சுதந்திரம் அடைந்தபோது 87 சதவீதம் இருந்த இந்துக்களின் எண்ணிக்கை தற்போது 79 சதவீதமாகக் குறைந்துள்ளது. பாகிஸ்தானில் 20 சதவீதமாக இருந்த இந்துக்களின் எண்ணிக்கை 1.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. சமீபத்தில் கருத்துக் கணிப்பு என்கிற பெயரில் தமிழகத்தில் கருத்துத் திணிப்பு நடைபெற்று வருகிறது” இவ்வாறு ஹெச்.ராஜா பேசினார்.
அவருடைய பேச்சை விஷக் கருத்துத் திணிப்பு என்று யாரும் கூறவில்லை.