ஐ.நாவின் இலங்கைப் போர்க்குற்ற அறிக்கை அட்லீஸ்ட் படுகொலைகள் நடத்தப்பட்டுள்ளன என்கிற அளவிலாவது உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறது. அதற்கே இலங்கை தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான கோத்தபய ராஜபக்ஷே கூறியுள்ளார். “புலம்பெயர்ந்த தமிழர்களின் தேவைக்கு ஏற்பவே. ஐ.நா. அறிக்கையை தயார் செய்துள்ளது. பொதுமக்கள் என்ற போர்வையில் விடுதலைப்புலிகள் இருந்த நிலையில், போரில் பொதுமக்கள் பலியாகியிருப்பதாக அறிக்கையில் தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது” என கோத்தபய ராஜபக்ஷே கூறியுள்ளார்.
இன்னொரு இலங்கை சிங்கள அமைச்சரோ தீவிரவாதத்துக்கு எதிரான போரில் எங்கள் ராஜபக்ஷே வெற்றி பெற்றார். ஆனால் அவரை ஐ.நா குற்றம் சாட்டி தண்டிக்கப் பார்க்கிறது. நாங்கள் தான் அவரைக் காப்பாற்றினோம் என்று கூறுகிறார். ஆகவே எல்லாரும் ராஜபக்ஷேவை மையமாகக் கொண்டு ஆட்டத்தை நகர்த்துகின்றனர். கடைசியில் ராஜபக்சேவுக்கு தண்டனை என்பதாக ஐ.நா 2 லட்சம் பேரைக் கொன்ற படுகொலைகளை மறைத்து விட ஐ.நாவும் இலங்கையும் ஆடும் ஆட்டம்.
இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றத்தில் தொடர்புடைய முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவிற்கு சட்டரீதியாக தண்டனை கிடைக்க பாரதிய ஜனதா அரசு உறுதி பூண்டுள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அதே சமயம் பிரதமர் மோடியை இலங்கைப் பிரதமர் ரணில் விக்கரமசிங்கே சந்தித்து அளவளாவிவிட்டுச் செல்கிறார். அதில் தனக்கு எதிராக ஐ.நா கொண்டு வரும் தீர்மானத்தை எதிர்க்க இந்தியாவைக் கேட்கவில்லை என்றா சொல்லமுடியும் ?
இந்த நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானமும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. அதில் அமெரிக்கா ஒருவேளை இலங்கையுடன் சேர்ந்துகொண்டு தீர்மானத்தை தோற்கடிக்க முயன்றால் இந்தியா அதற்கு வாய்ப்பளிக்காமல் எதிர்க்கவேண்டும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் யாரென்று திரும்பிப் பார்க்கும் படி பேசியிருக்கிறார். தமிழனுடைய அரசியல் வீச்சு உலக அளவில் எல்லோரையும் கவனம் ஈர்க்க வைத்திருப்பதற்கு முதல்வர் ஜெயலலிதாவை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.