1. மதுரையில் பதினான்கு வழக்கறிஞர்கள் தொழில் செய்யத் தடை
2. 6000 வழக்கறிஞர்கள் கொண்ட சங்கக் கட்டிடத்தை காலி செய்ய உத்தரவு
3. மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சங்கத்தின் உரிமத்தையே ரத்து செய்வதாக மிரட்டல்
4. சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மத்திய போலீசு படையை கொண்டு வரும் திட்டம்
5. தலைமை நீதிபதி தத்து தமிழக வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தூண்டுவது
6. அனைத்திந்திய பார் கவுன்சில் நேரடியாக மதுரை வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பது
இந்த அடக்குமுறைகளுக்கெல்லாம் என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
தமிழுக்காக வழக்கறிஞர்கள் போராடியதும், 16-ம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது வழக்குரைஞர்கள் போராடியதும்தான் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று அனைத்திந்திய பார் கவுன்சில் கூறுகிறது.
உண்மையில் 14-ம் தேதி நடந்த தமிழ் போராட்டத்தில் சஸ்பெண்டு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அன்று அவர்கள் அனைவரும் மதுரையில் இருந்தார்கள். 16-ம் தேதி சென்னை வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியபோது, சஸ்பெண்டு செய்யப்பட்ட 14 பேரில் 3 பேர் நீதிமன்ற அவமதிப்பு விசாரணையில் இருந்தார்கள். இன்னும் 3 பேர் மதுரையில் இருந்தார்கள். 16-ம் தேதி சம்பவம் குறித்து போலீசு புகாரோ, வழக்கோ இல்லை.
திருச்சி வழக்கறிஞர்கள் கூட்டம்இருந்த போதிலும் இந்த நடவடிக்கை ஏன் என்ற கேள்விக்கு விடை, செப்டம்பர் 10-ம் தேதி மதுரையில் நடத்தப்பட்ட நீதிமன்ற ஊழல் எதிர்ப்பு பேரணிதான். சுமார் 1500 வழக்கறிஞர்களுக்கு மேல் கலந்து கொண்ட அந்தப் பேரணி பெயர் குறிப்பிட்டு பல நீதிபதிகளின் ஊழலை அம்பலப்படுத்தியது. அந்த குற்றத்துக்காகத்தான் இந்த சஸ்பெண்டு நடவடிக்கை. இதனை வெளியில் சொன்னால் சந்தி சிரித்துப் போகும் என்பதனால்தான், நீதிமன்றத்துக்குள் கலகம் செய்ததாக ஒரு குற்றச்சாட்டை போலீசுடன் சேர்ந்து நீதித்துறை ஜோடித்துள்ளது.
நீதிபதிகளின் ஊழல் குறித்து தலைமை நீதிபதிக்கு புகார் அனுப்பியிருந்தால் அதனை வாங்கிக் கிடப்பில் போட்டிருப்பார்கள். அவ்வாறு செய்யாமல் ஊழல் தீர்ப்புகளை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சென்றதுதான் நீதிபதிகளின் ஆத்திரத்துக்கு காரணம். கிரானைட், தாதுமணல், ஆற்று மணல் உள்ளிட்ட பொதுச்சொத்துகள் கொள்ளையிடப் படுவதற்கு நீதிமன்றம் எப்படி உடந்தையாகவும் கூட்டாளியாகவும் இருந்திருக்கிறது என்பதை மக்களுக்குச் சொன்னோம். இது நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல, மக்களின் சொத்துக்களும், வாழ்வாதாரமும் கொள்ளை போவது பற்றிய பிரச்சினை என்று புரிய வைத்தோம். இதுதான் நீதிபதிகளின் ஆத்திரத்துக்குக் காரணம்.
திருச்சி வழக்கறிஞர்கள் கூட்டம்நீதிபதிகள் சொல்வது போல யாரோ பத்து இருபது வக்கீல்கள் நீதித்துறை ஊழல் பற்றிப் பேசவில்லை. தென் மாவட்டங்கள் அனைத்திலுமிருந்து திரண்ட நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களும் சங்க நிர்வாகிகளும் இந்த குற்றச்சாட்டை வழி மொழிந்திருக்கிறார்கள். ஏனென்றால் இது நாம் அனைவரும் அறிந்த உண்மை. பலர் இதுவரை சொல்லத் தயங்கிய உண்மை.
நீதிபதிகளுககு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்று யாராலும் மறுக்க முடியவில்லை. அதனால்தான் குற்றம் சாட்டுபவர்களை அவதூறு செய்கிறார்கள். “ஒழுங்காக சட்டம் படிக்காதவர்கள், தொழில் செய்யத் தெரியாதவர்கள், கட்டைப் பஞ்சாயத்து பேர்வழிகள்” என்று போராடும் வழக்கறிஞர்களைப் பலவாறாகத் தூற்றுகிறார்கள்.
இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் 14 பேரில் ஒருவருக்குக் கூட இவர்கள் கூறும் குற்றச்சாட்டு எதுவும் பொருந்தாது. மாறாக அத்தகைய குற்றப் பின்னணி கொண்ட வழக்கறிஞர்கள்தான் போலீசுக்கும் நீதிபதிகளுக்கும் ஊழலின் தரகர்களாக இருக்கிறார்கள். மேல் மட்டத்தில் உயர், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குத் தரகர்களாக இருக்கிறார்கள். இத்தகையவர்கள் மீதெல்லாம் தொழில் தருமத்தை மீறியதாக பார் கவுன்சில் எக்காலத்திலும் நடவடிக்கை எடுத்ததில்லை.
திருச்சி வழக்கறிஞர்கள் கூட்டம்பார் கவுன்சில் தேர்தல் எப்படி நடக்கிறது என்பதும் இவர்கள் வழக்கறிஞர்களின் வாக்குகளை எப்படி வாங்கினார்கள் என்பதும் நாம் அறியாத ரகசியமல்ல. நேர்மையற்ற முறையில் பதவியைக் கைப்பற்றி, அந்தப் பதவியைத் தமது சொந்த ஆதாயத்துக்காகப் பயன்படுத்தும் பிரபாகரன், செல்வம் போன்ற நபர்கள்தான் தொழில் தருமத்தை பற்றி நமக்கு உபதேசம் செய்கிறார்கள்.
“நீதித்துறை ஊழலுடன் அனுசரித்துப் போக வேண்டும் என்பது மட்டுமல்ல, எந்த சமூக அநீதிக்கு எதிராகவும் வழக்கறிஞர்கள் போராடக்கூடாது” என்பது இவர்கள் கருத்து. மக்கள் நலனுக்கான பொதுப்பிரச்சினை எதற்காகவும் வழக்கறிஞர்கள் போராடக் கூடாது என்று உபதேசிக்கும் இவர்கள்தான், நீதிமன்றப் புறக்கணிப்பு காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.
ஈழப்பிரச்சனை, மூவர் தூக்கு, சிவில் சட்ட திருத்தம், மாலிமத் கமிட்டி ரிப்போர்ட், காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சனைகள் என்று பல பிரச்சினைகளுக்காக தமிழக வழக்கறிஞர்கள் போராடியிருக்கிறார்கள். இவையனைத்தும் மக்களின் பிரச்சினைகளேயன்றி, வழக்கறிஞர்களின் துறை சார்ந்த பிரச்சினைகள் அல்ல.
திருச்சி வழக்கறிஞர்கள் கூட்டம்இன்று 14 வழக்கறிஞர்கள் சஸ்பெண்டு செய்யப் பட்டிருப்பதற்கு காரணமான நீதித்துறை ஊழல் பிரச்சினையும் கூட வழக்கறிஞர்களின் துறை சார்ந்த பிரச்சினை அல்ல. நீதித்துறை ஊழலால் பாதிக்கப்படுபவர்கள் மக்கள். கொள்ளை போவதோ பொதுச்சொத்து!
வழக்கறிஞர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து நீதித்துறையும், பார் கவுன்சிலும் எடுத்துள்ள நடவடிக்கைகள், இன்று வழக்கறிஞர்களின் தன்மானப் பிரச்சனையாகவும் மாறியுள்ளன. இனிமேல் வழக்கறிஞர்கள் கையை நீட்டிப் பேசினால், குரலை உயர்த்தினால் காசு வாங்கும் முன்சீப் கூட நம்மைத் தண்டிப்பதாக மிரட்டக்கூடும். இதற்கெல்லாம் உயர்நீதிமன்றம் துணை நிற்கும். சுதந்திரமாக வழக்கறிஞர் தொழில் செய்யும் உரிமையும் பறிபோகும். வழக்கறிஞர்கள் இனி அடிமைகள் என்ற நிலை உருவாகி நீதித்துறையே ஊழல் நீதிபதிகள்-புரோக்கர்கள் வசம் போகும்.
திருச்சி வழக்கறிஞர்கள் கூட்டம்இதைத் தடுக்க வேண்டுமானால் நேர்மையாகத் தொழில் செய்யும் வழக்கறிஞர்கள் களத்தில் இறங்க வேண்டும். நீதித்துறை வழக்கறிஞர்களை மிரட்டுவதுபோல் தோன்றினாலும், உண்மையில் அவர்களுடைய பயந்த நிலையைத்தான் அடுத்தடுத்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.
தலைமை நீதிபதி கவுல் தமிழ்நாட்டிற்கு வரும்போது, “ஆறு மாதத்தில் நீதித்துறையைச் சுத்தம் செய்வேன்” எனச் சொல்லி வந்தாராம். ஆனால், ஊழல் நீதிபதிகளின் காவலனாக அவர் களத்தில் நிற்பதோடு, ஊழலை எதிர்க்கும் வழக்கறிஞர்களை மிரட்டவும் கிளம்பியுள்ளார். 5000 வழக்கறிஞர்கள் உள்ள மதுரையை மிரட்டி ஒடுக்கி விட்டால், மற்ற வழக்கறிஞர்கள் அடங்கி விடுவார்கள் என்பதுதான் கவுல் மற்றும் அவரது கூட்டாளிகளின் கருத்து.
ஒட்டு மொத்த தமிழகத்தின் போராட்டக் குரலைப் பிரதிபலிக்கும் மதுரையை நாம் இழக்க முடியாது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட 15 வழக்கறிஞர்களின் பிரச்சனை ஒட்டு மொத்த தமிழக வழக்கறிஞர்களின் பிரச்சனையாகும். இதற்கு முன்பு நமது போராட்டம் சுபாஷன் ரெட்டியை விரட்டியுள்ளது. தமிழக வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்தால் தலைமை நீதிபதி கவுலின் சூழ்ச்சியையும் வெல்ல முடியும்.
திருச்சி வழக்கறிஞர்கள் கூட்டம் ஏற்கனவே லஞ்சம், சாதி, பாலியல் குற்றம் போன்றவைகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் நீதித்துறையை நமது ஊழல் எதிர்ப்புப் போராட்டம் ஆட்டம் காண வைத்திருக்கிறது. பல நேர்மையான நீதிபதிகள் விஷ்ணுப்பிரியாவைப் போலத் தவித்து வருகிறார்கள்.
நீதித்துறை ஊழல் குறித்த உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதால் தங்களின் கடவுள் போன்ற பிம்பம் கலைந்துவிடுகிறதே என்பதுதான் நீதிபதிகள் நடுங்குவதன் அடிப்படை.