நீதித்துறையில் ஊழல் மலிந்து விட்டதாகவும், அதை ஒழிக்கக் கோரியும் வக்கீல்களே போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நீதித்துறையில் ஊழல் இருப்பது நன்கு தெரிந்த விஷயம். ஏழைகளுக்கு ஒரு நீதியும், பணக்காரர்களுக்கு வேறொரு நீதியுமாகவே எப்போதும் கிடைத்து வருகிறது. இது தற்போது பெரிதாகி வக்கீல்களுக்கும் நீதிபதிகளுக்குமிடையேயான முரண்பாடாக, போராட்டமாக வெளிப்பட்டிருக்கிறது.

வழக்கறிஞர்கள் தமிழக ஆளுநர் ரோசய்யாவை நேரில் சந்தித்து நீதிமன்றத்தில் நடைபெறும் ஊழல்கள் பற்றி புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இது இப்படி வெடிக்கக் காரணம் என்ன ? சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தினுள் வழக்கறிஞர்கள் கோர்ட் ஹாலில் புகுந்து உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி போராட்டம் நடத்தினார்கள். நாடு சுதந்திரமடைந்து இவ்வளவு வருடங்களாகியும், தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற்றாலும், ஹிந்தி ஐ.நாவுக்குச் சென்றாலும், தமிழ் தமிழ்நாட்டு கோர்ட்டுகளில் வழக்காடும் மொழியாக இல்லை.

இதனால் கோபமடைந்த நீதிமன்ற நீதிபதிகளின் முதலாவது பெஞ்ச் வக்கீல்களின் செயல்களுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அவர்கள் மீது வழக்குப் பதிவும் செய்தது. சட்டத்தின் ஏவல் நாய்களாகச் செயல்படும் காவல்துறைக்கு வழக்கறிஞர்கள் கூலாகத் ‘தண்ணி’ காட்டிவிடுவதால் இனிமேல் சென்னை உயர்நீதிமன்றம், மற்றும் மதுரை கிளை ஆகியவற்றில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரை நிறுத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுவிட்டனர்.

நீதிபதிகளின் இந்த உத்தரவால் வக்கீல்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர். நாட்டில் அரசு அரசியல்வாதிகளின் பிடியிலும் கார்ப்பரேட்டுகளின் பிடியிலும் சிக்கி நிற்கும் நிலையில் நீதிமன்றம் பல விஷயங்களில் மக்களுக்கு ஆதரவான நிலை எடுத்திருக்கிறது. ஆனால் சமீபத்தில் வந்த கட்டாய ஹெல்மெட் உத்தரவில் மக்களின் யதார்த்த வாழ்வு நிலையைப் பார்க்காமல் வேண்டுமென்றே கடுமையான தண்டனைகளை நீதிமன்றம் வழங்கியது. இதற்குப் பின்னால் ஹெல்மெட் விற்பனை என்கிற லாப நோக்கான விஷயமும் இருக்கிறது. இதுபோல பல வழக்குகளில் நீதிமன்றத்தில் நீதி என்பது பண நீதியாக ஆகிவரும் இந்த நிலையில்தான் நீதித்துறையில் நிலவும் ஊழலை ஒழிக்கக் கோரி வழக்கறிஞர்கள் சங்கத்தினர்கள் ஆளுநர் ரோசய்யாவை சந்தித்துப் புகார் கொடுத்துள்ளனர்.

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்ற வக்கீல்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு ஆளுநர் மாளிகைக்குச் சென்று இதுதொடர்பாக புகார் மனு கொடுத்தனர். இதன் நகலை குடியரசுத் தலைவருக்கும் அவர்கள் அனுப்பியுள்ளனர். நீதிபதிகளுடன் மோத வக்கீல்கள் தயாராகி வருவதையே இது காட்டுவதாக கருதப்படுகிறது. சாதாரண மக்களென்றால் உருட்டி, மிரட்டி அடித்து, ஜெயலில் போட்டு அவர்களை உருத்தெரியாமல் அழித்துவிடும் அரசும், காவல்துறையும் சகல சட்டங்களும் தெரிந்த வழக்கறிஞர்களைத் தொட்டால் பிரச்சனை வருமே என்று கையைப் பிசைந்து நிற்கின்றனர். இதே நோக்கில் தான் நீதிபதிகல் தொழிலக பாதுகாப்புப் படையினரை நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டுள்ளனர்.

Related Images: