சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் அ.சவுந்தரராஜன், ‘‘ஏழைகளின் பொழுதுபோக்காக உள்ள திரையரங்குகளில் ரூ.250 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். தமிழகம் முழுவதும் அரசு சார்பில் திரையரங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மாநகராட்சி அறிவித்த 7 அம்மா திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்? ’’ என்கிற கேள்வியை எழுப்பினார்.
அதற்கு பதிலளித்தார் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி :
“மாநகராட்சிகளில் பொழுதுபோக்கு அம்சங்கள், வணிக வளாகத்துடன் கூடிய திரையரங்குகளில் ரூ.10 முதல் ரூ.120 வரையும், மற்ற குளிர்சாதன திரையரங்குகளில் ரூ.10 முதல் ரூ.50 வரையும், நகராட்சிகளில் ரூ. 5 முதல் ரூ.40 வரையும், பேரூராட்சிகளில் ரூ.5 முதல் ரூ.25 வரையும், கிராமங்களில் ரூ.5 முதல் ரூ.15 வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை திரையரங்குகளில் பொதுமக்கள் பார்வையில் படும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்.
அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அரசு அறி வுறுத்தியுள்ளது. அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் கூறினார்.
விளக்கமெல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனால் படம் ரிலீஸான பத்து நாட்களுக்கு இந்த விதிமுறை கண்டுகொள்ளப்படுவதில்லை. பல தியேட்டர்களில் ஏ.சியை பாதியில் அணைத்துவிடுகிறார்கள். கேன்டீன்களில் வெளியில் இருப்பதை விட இருமடங்கு அதிக விலைக்கு பொருட்களை விற்கிறார்கள். தியேட்டர்களுக்கு நடுத்தர வர்க்கத்தினரும், கீழ் நடுத்தர வர்க்கத்தினரும் வருவது குறைந்து கொண்டே வருகிறது. வருடத்தில் எப்போதாவது ஒரு முறை செல்லும் இடமாகி வருகிறது தியேட்டர்.