மோடியின் இந்த அமெரிக்க பயணம் அவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தித் தருவதற்கான அனைத்து ஸ்டண்ட்களையும் இம்முறை மோடி செய்திருக்கிறார்.
முதலாவதாக சான் ஜோஸ் நகரில் உள்ள எஸ்.ஏ.பி. மையத்தில் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே பேசிய மோடி “இந்தியாவில் ஊழலற்ற ஆட்சி கலாச்சாரத்தை பாஜக உருவாக்கியுள்ளது. நம் நாட்டில் அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் மலிந்திருந்தது. ஒருவர் ரூ.50 கோடி சம்பாதித்தார், ஒருவரது மகன் ரூ.250 கோடி சம்பாதித்தார், மகள் ரூ.500 கோடி சம்பாதித்தார், மருமகன் ரூ.1,000 கோடி சம்பாதித்தார். ஆனால், பாஜக இப்போது ஊழலற்ற ஆட்சி கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது. நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். என் மீது யாராவது ஏதாவது ஒரு ஊழல் குற்றச்சாட்டாவது சொல்ல முடியுமா?” என்று கேட்க ஆடியன்ஸ் இல்லை என்று கூட்டமாகக் கூறியிருக்கிறார்கள்.
வியாபம் ஊழல் பல்லாயிரம் கோடியில் நாறி வருவது பி.ஜே.பியின் ஆட்சியில் தானே. மோடி நேரடியாக ஊழல் செய்யவில்லை. ஆனால் குஜராத் படுகொலைகளில் நேரடித் தொடர்பு உள்ளவராகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். வேறு ஒரு நாட்டில் போய் நமது நாட்டின் உள் அரசியலைப் பேசுவது என்ன நாகரிகம் என்று காங்கிரஸ் கேட்கிறது. இதற்கு முன்பு அமெரிக்கா சென்றபோதும் இதே போல முந்தைய காங்கிரஸ் அரசு மோசம் என்கிற ரீதியில் பேசிவிட்டுத் தான் வந்தார்.
அதே போல சென்டிமென்ட்டையும் போட்டுத் தாக்கியுள்ளார். பேஸ்புக் நிறுவனரான மார்க் சக்கர்பர்கை கலிஃபோர்னியாவின் மென்லோ பார்கில் உள்ள ஃபேஸ்புக் தலைமையகத்தில் சந்தித்து உரையாடிய மோடி தான் ரயில்வே நிலையங்களில் டீ விற்றதையும் தனக்கு தனது தாய் உதவி செய்ததையும் நினைவு கூர்ந்தார். அவரது தாய் ஹீரா பென் 90 வயதானவராக இன்னும் இருக்கிறார். அவரே வீட்டு வேலைகளைச் செய்து வருகிறார் என்று சென்டிமென்ட்டாகப் பேசியுள்ளார்.
அடுத்ததாக டிஜிட்டல் இந்தியாவைப் பற்றி பேசியிருக்கிறார் மோடி. “ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு தொழில்நுட்ப புரட்சி அவசியம். அதை கருத்தில் கொண்டே டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அரசு உருவாக்கியுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மக்களிடம் செல்போன் இருக்கிறது. இ-கவர்னன்ஸ் முறையும் சிறப்பாக செயல்படுகிறது” என்றிருக்கிறார். இந்தியாவில் பெரும்பான்மையான மக்களிடம் செல்போன் இருக்கிறது ஐயா, ஆனால் அவர்களுக்கு செய்வதற்கு வேலை இல்லை. நிம்மதியாக உண்பதற்கு உணவு இல்லை. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவற்றை இந்த டிஜிட்டல் மயமாக்குதல் எவ்வாறு தடுத்து நிறுத்தும் ?