இத்தனை வருடங்களாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1945, ஆகஸ்ட் 18 ஆம் தேதி
விமான விபத்தில் மறைந்ததாக வெளியான செய்தியோடு அவருடைய மரணம் பற்றிய முடிச்சு அவிழ்க்கப்படாமலேயே இருந்திருக்கிறது. அதற்குப் பின் இத்தனை வருடங்கள் இந்தியாவை ஆண்ட இந்திய அரசும், இங்கிலாந்து அரசும் அவரது நிலை பற்றி மௌனமாகவே இருந்து வந்திருக்கின்றன.
சமீபத்தில் அவரையும், அவரது குடும்பத்தையும் சுதந்திரத்திற்குப் பின்னும் இந்திய அரசு கண்காணித்து வந்ததாக மே.வங்க மாநில அரசு வெளியிட்ட ஆவணங்களில் தெரியவந்தது. இதையொட்டி தற்போது நேதாஜியின் மெய்க்காப்பாளராகவும், அவரது டிரைவராகவும் பணியாற்றிய சைபுத்தீன் என்கிற நிஜாமுதீன் என்கிற 115 வயது மனிதரைப் பற்றி தகவல்கள் வந்துள்ளன. நிஜாமுதீன் உத்தரப் பிரதேசத்தில் ஆசம்கர் மாவட்டம், முபாரக்பூர் அருகே டக்கோவா கிராமத்தில். வசித்து வருகிறார். அவர் வைத்திருக்கும் பழைய பர்மா பாஸ்போர்ட்டின்படி இப்போது அவருக்கு வயது 115.
இவரைப் பேட்டி கண்ட போது நேதாஜி பற்றிய பல சுவராசியமான விஷயங்களைக் கூறியிருக்கிறார். நேதாஜி விமானவிபத்தில் தான் இறந்தாரா என்று கேட்டபோது, “இந்த தகவல் இந்திய வானொலியில் ஒலிபரப்பான போது அதை போஸ்ஜியுடன் சேர்ந்து நாம் பலரும் பர்மாவின் காடுகளில் உள்ள முகாமில் கேட்டுக் கொண்டிருந்தோம். இதை கேட்ட போஸ்ஜி, ‘பாருங்கள் நான் விமான விபத்தில் இறக்கடிக்கப்பட்டு விட்டேன்.’ எனக் கூறி புன்முறுவல் பூத்தார். அதில் போஸுடன் இருந்ததாக ஹபீபுர் ரஹ்மான் என்பவர் பெயரும் வெளியானது. இவர், போஸுடன் இருந்த வரையில் ஆங்கிலேயர்களுக்கு உளவு பார்த்ததாக எங்களுக்கு சந்தேகம் இருந்து வந்தது. இந்தியரான அவர் இடையில் காணாமல் போனார். பிறகு ஆங்கிலேயரிடம் ‘விலை’ போனதால் அவரை சாட்சியாக வைத்து விமான விபத்து வெளியிடப்பட்டிருக்கலாம்.” என்று கூறினார் நிஜாமுதீன்.
போஸ் ஏன் தலைமறைவு வாழ்க்கையிலிருந்து வெளிவந்து தான் உயிரோடிருப்பதை அறிவிக்கவில்லை என்று கேட்டதற்கு சரியான காரணம் நிஜாமுதீன் நினைவில் இல்லை, “ஆனால், 1945-க்கு பின் உலகம் முழுவதும் காலனி ஆதிக்கம் முடிவிற்கு வரத் தொடங்கியது. இதனால், நம் நாட்டில் இருந்தும் ஆங்கிலேயர்கள் வெளியேறி விடுவார்கள் பிறகு நாம் இந்தியா திரும்பலாம் என போஸ் காத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவரை திரும்பினால் தாம் பதவியில் அமர முடியாது என சில காங்கிரஸார் திட்டமிட்டு சதி செய்யத் துவங்கினர். நேரு, காந்திஜி மற்றும் ஆங்கிலேயர்களுக்கு இடையே சுதந்திரம் அளிப்பதற்கான ஒப்பந்தத்தில் நாடு திரும்பும் ஆங்கிலேயரிடம் போஸ்ஜியை ஒப்படைக்க வேண்டும் என்றானதாகவும் அவருக்கு ஒரு தகவல் கிடைத்திருந்தது. இதனால், வேறு வழியின்றி போஸ், பர்மாவில் இருந்து வெளியேறி தப்பும் முயற்சியில் இறங்க வேண்டியதாயிற்று. ஏனெனில், அதற்கு சற்று முன்பாக நடந்த இம்பால் போரில் போஸுக்கு ஏற்பட்ட படுதோல்விக்கு பின் ஜப்பானியர்கள் ஆங்கிலேயர்களிடம் சரண் அடைந்து விட்டனர். இதனால், இந்திய தேசிய படை கிட்டத்தட்ட முடிந்து போனது. பிறகு போஸுடன் நாம் பர்மியக் காடுகளில் தலைமறைவாகத்தான் இருந்தோம் எனக் கூறலாம். எனவே, அவர் தலைமறைவு வாழ்க்கைக்கான முடிவு எடுத்திருக்கலாம்.” என்று ஊகிக்கிறார் நிஜாமுதீன்.
போஸுடனான நிஜாமுதீனின் கடைசி சந்திப்பைப் பற்றி கேட்டபோது, “கடைசியாக நேதாஜியை நான் 1947 ஆம் ஆண்டு, (மாதம் நினைவில் இல்லை) பர்மாவின் சித்தான் நதியில் தயாராக இருந்த படகில் ஏற்றி அனுப்பி வைத்தேன். இந்த நதியின் இருகரைகளிலும் வளர்ந்திருந்த அடர்ந்தமரங்கள் அதில் பயணம் செய்பவர்களை மேலிருந்து யாரும் பார்த்திடா வண்ணம் மறைத்து விடும். இதற்காக லேங்கிங் ஜாபர் காரில் அவரை கூட்டிச் சென்றது தான் நாங்கள் அவருடன் நடத்திய கடைசி சந்திப்பு ஆகும். மிகவும் குறுகலான நதியான அது இந்திய எல்லையில் உள்ள கடலில் போய் கலக்கிறது. அங்கு அவரை எங்கோ அழைத்துச் செல்ல ஒரு நீர்மூழ்கிக் கப்பல் தயாராக இருந்ததாகக் கூறப்பட்டது. சித்தான் நதிக்கரையில் நேதாஜியை நாங்கள் விட்ட சில நிமிடங்களில் நின்றிருந்த கார் மீது மேலே பறந்து வந்த போர் ஜெட் விமானம் குண்டு வீசிவிட்டு பறந்து சென்றது. இதனால், அந்தக் கார் வீணானதுடன், அதில் இருந்து ஒருசிலரும் உயிர் இழந்தனர். நாங்கள் மட்டும் அதிர்ஷ்டவசமாக தப்பி விட்டோம்.
அப்போது போஸூடன் சென்றவர்களில் அவரது மெய்க்காப்பாளராகவும், உதவியாளராகவும் பணியாற்றி வந்த சுவாமி என அழைக்கப்பட்ட ஒரு மதராஸி இருந்தார். சுமார் 10 ஜப்பானிய மற்றும் சில சீக்கிய வீரர்களும் அந்த படகில் போஸுடன் சென்றனர். நானும் அவருடன் வரும் விருப்பத்தை தெரிவித்தேன். இதற்கு மறுத்த போஸ், ‘நீ என்னுடன் வர வேண்டாம். நான் மீண்டும் உங்களை வந்து சந்திப்பேன். நீ இங்குள்ள நம் படை வீரர்கள் அனைவரையும் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அனுப்புவதில் மற்றவர்களுடன் சேர்ந்து உதவியாக இரு. நம் படை மற்றும் போர்களின் மீதான அனைத்து ஆதாரங்களையும் அழித்து அப்பாவி பொதுமக்கள் போல் நடந்து கொள்ளுங்கள். இல்லையேல், இந்தியாவில் நீங்கள் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் உங்கள் அனைவரையும் கைது செய்து கொன்று விடுவார்கள்’ என எச்சரித்துச் சென்றார்.” என்று கூறினார் நிஜாமுதீன்.
நிஜாமுதீனின் கூற்றுப்படி நேதாஜி 1947 வரை இருந்துள்ளார். நேதாஜி சொல்லியபடியே பர்மாவின் காடுகளிலிருந்த நேதாஜியின் ரகசியத் தலைமையிடத்தின் அனைத்து ஆவணங்களையும் அழித்துவிட்டு இந்திய தேசியப் படையின் எல்லா படைவீரர்களும் கலைந்து இந்தியாவிற்குச் சென்றிருக்கின்றனர். நிஜாமுதீனும் ரங்கூனுக்குச் சென்று வேலை செய்து பின் 1965 வாக்கில் திருமணம் செய்து இந்தியாவிற்கே வந்துவிட்டார். நேதாஜி எச்சரித்திருந்தபடி இந்தியத் தேசிய படை பற்றி ரகசியம் காத்து வந்திருக்கிறார். 2005ல் இந்திய தேசியப் படையின் முன்னாள் கமாண்டர் லஷ்மி சேகாலை 2005 ஆம் ஆண்டு சந்திக்க சென்றபோது இவரைப் பற்றி வெளியே தெரியவந்திருக்கிறது.
சுதந்திரப் போராட்டத் தியாகிகள் பெறும் ஓய்வூதியம் போன்ற எந்த அரசு சலுகைகளும் நேதாஜியுடன் போராடிய இந்திய தேசியப் படையினருக்கு ஏன் கிடைக்கவில்லை என்று கேட்டபோது,”
இது மிக, மிக வேதனையான ஒரு விஷயம். ஏனெனில், ஆங்கிலேயர்களிடம் இருந்து நம் நாட்டை விடுவிக்க வேண்டி அவர்களுடன் நேரிடையாகப் போரிட்டதும், உயிரிழந்ததும் நேதாஜியின் இந்திய தேசியப் படையினர் தான். ஆனால், நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பொதுமக்கள் அனைவரும் மகிழ்வுடன் இருக்க, எங்களுக்கு மட்டும் தலைமறைவு வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. உண்மையிலேயே நாட்டின் சுதந்திரத்திற்காக போரிட்ட நேதாஜி இங்கு திரும்பி வரவும் முடியாமல் போனது. இதற்கு, காந்திஜி மற்றும் நேருஜியின் சேர்ந்து நடத்திய பதவி அரசியல் காரணமானது. நேதாஜி மட்டும் சுதந்திரத்துக்குப் பின் இங்கு வந்திருந்தால் இந்த நாட்டைப் பிரிக்க அனுமதித்திருக்க மாட்டார். இந்த பிரிவு இல்லாமல் நம்முடன் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இணைந்திருந்தால் நாம் தான் உலகின் பலம் வாய்ந்த நாடாக இருந்திருப்போம். இதுவும் முகம்மது அலி ஜின்னாவின் பதவி அரசியலால் ஏற்பட்டது. இதற்காக எங்கள் படையினர் அவர்களை என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள். நமக்கு கிடைத்த சுதந்திரம், அஹிம்சை மற்றும் தர்ணா போராட்டத்தில் அல்ல தவிர எங்கள் படையினர் நடத்திய போர் மற்றும் உயிரிழப்பு என்பது எங்கள் கருத்து. நேதாஜியின் மீதான உண்மைகள் மறைக்கப்பட்டதன் பின்னணியில் சுதந்திரத்திற்கு பின் அடையும் பதவி அரசியல் மறைந்து இருந்ததை தற்போது பொதுமக்கள் மெல்ல, மெல்ல புரிந்துகொண்டு வருகிறார்கள். இதன் முழு உண்மை ஆதாரங்களுடன் விரைவில் வெளியாகும் நாளும் அதிக தூரம் இல்லை. அப்போதுதான் எங்களுக்கு தியாகிகளுக்கான அரசு சலுகை கிடைக்கும் எனில், இதை அனுபவிக்க நாம் உயிருடன் இருப்போமா எனத் தெரியவில்லை. ஆனால், மக்களவை தேர்தலில் போட்டியிட நரேந்திர மோடி முதன்முறையாக வாரணாசி வந்த போது என்னை மேடையில் அழைத்து பொதுமக்கள் முன் ஆசி பெற்றார். இதனால், அவர் எங்கள் படையினருக்கு கண்டிப்பாக ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.” என்று வருத்தத்துடன் தெரிவித்தார் நிஜாமுதீன்.
இந்தக் கால அரசியல், தேசபக்தி, நாட்டு நிலைமை பற்றிக் கேட்டபோது, “அன்றைய மக்கள் நம் நாடு ஆங்கிலேயரிடம் இருந்து விடுபட்ட பிறகு, நாம் அனைவரும் நமது சொந்த சட்ட, திட்டங்களை வகுத்து கொண்டு நிம்மதியாக இருப்போம் எனத் எண்ணியிருந்தோம். ஆனால், அந்த நிலை இன்னும் மாறவில்லை. நம் நாட்டில் இருந்து வெளியேறினாலும் தனது சட்டங்களை நம் நாட்டின் அரசுப் பதவிகளில் அமர்த்தி ஆங்கிலேயர்கள் சென்று விட்டனர். அவர்கள் இல்லை என்றாலும் அவர்களது ஆட்சி நம் இந்தியர்களால் தொடர்ந்து வருகிறது.” என்று பதிலளித்தார்.
ஆம் அன்று வெள்ளையனே போ.. போ.. போ என்று போராடினோம். இன்று வெள்ளையனே வா.. வா.. மூலதனத்தோடு வா.. வா.. என்று கெஞ்சுகிறோம். ஆம் வெள்ளைக்காரன் நம்மை இப்போது பொருளாதார ரீதியாக ஆளுகிறான் என்பது தான் உண்மை. நாம் விடுதலை அடைந்துவிடவேயில்லை.