இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானுடன் 2015–ம் ஆண்டு முதல் 2023–ம் ஆண்டு வரை 6 சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாட ஒப்புக் கொண்டு ஒப்பந்தம் செய்து கையெழுத்திட்டிருக்கிறது. வரும் டிசம்பர் மாதம் பொதுவான ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய-பாக் கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவமும், இந்திய ராணுவமும் எல்லையில் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது. நீதான் நீதான் என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியும் வருகின்றன. எல்லையில் பதற்றம் தணியாவிட்டால், இரு நாடுகள் இடையே கிரிக்கெட் போட்டிக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என்று இந்தியா சொல்கிறது.
டிசம்பர் மாதம் கிரிக்கெட் போட்டி உண்டா இல்லையா? என்பதை உறுதிப்படுத்தும்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எழுதிய கடிதத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் பதில் அளிக்கவில்லை.
இந்த நிலையில் இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி டிசம்பரில் நடக்குமா? என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார் கானிடம் நேற்று கேட்கப்பட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–
“இது இந்திய அரசின் முடிவை பொறுத்து இருக்கிறது. டிசம்பர் மாதம் விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எங்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு அரசின் அனுமதியை பெற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் எங்களிடம் கூறியிருக்கிறார்கள். ஒப்பந்தத்திற்கு மதிப்பு கொடுக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நாங்கள் கடிதம் எழுதி இருக்கிறோம். நாங்கள் அவர்கள் பின்னால் ஓடிக்கொண்டிருக்கவில்லை. நீங்கள் போட்ட கையெழுத்துக்காகவே மதிப்புகொடுக்கும்படி தான் கேட்கிறோம்.
அரசியல் காரணங்களுக்காக எங்களுக்கு எதிராக விளையாட இந்திய அரசு அனுமதி அளிக்காவிட்டாலும் கூட, நாங்கள் ஒன்றும் கிரிக்கெட் வாரியத்தை நடத்த முடியாமல் திவாலாகி விடமாட்டோம். கிரிக்கெட் நடவடிக்கைகளை தொடர்ந்து எங்களால் சிறப்பாக நடத்த முடியும். சில ஆண்டுகளாக இந்தியா–பாகிஸ்தான் இடையே நேரடி கிரிக்கெட் தொடர்கள் நடக்கவில்லை. அப்படி இருந்தாலும் எங்களது கிரிக்கெட் வாரியம் நல்லபடியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அது தொடரும். ஆனால் இந்த தொடருக்கு அனுமதி கிடைக்காவிட்டால் அது பின்னடைவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தாவூத் இப்ராகிம் (நிழல் உலக தாதா) கராச்சியில் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர், டுவிட்டரில் எழுதியிருப்பது குறித்து கேட்கிறீர்கள். தாவூத் இப்ராகிமுக்கும் எங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை. அவர் பாகிஸ்தானில் இல்லை என்று எங்களது அரசு மீண்டும் தெளிவுப்படுத்தி இருக்கிறது. என்னை பொறுத்தவரை கிரிக்கெட் போட்டி தான் இவ்விரு நாடுகள் இடையிலான உறவில் முன்னேற்றம் காண்பதற்கு உதவிகரமாக இருக்கும்.
இந்தியாவுடன் கிரிக்கெட் உறவை தொடர்வதற்கு எங்களது அரசு ஆதரவு அளிக்கிறது. இது குறித்து இந்திய அரசு ஒரு முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது. அரசியலையும், கிரிக்கெட்டையும் ஒன்றாக கலக்காமல் வெவ்வேறாக பிரித்து பார்க்க வேண்டும். இந்தியா–பாகிஸ்தான் உறவில் எப்போதும் ஏற்றம் இறக்கம் இருக்கும். பதற்றமான சூழ்நிலையில் 1999–ம் ஆண்டு இந்திய மண்ணில் நாங்கள் விளையாடி இருக்கிறோம். அப்போது மக்கள் எங்களுக்கு அமோக வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு 2004–ம் ஆண்டு இந்திய அணி எங்கள் நாட்டிற்கு வந்து விளையாடியது. இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘2004–ம் ஆண்டு உங்களால் இந்தியா–பாகிஸ்தான் தொடர் நடந்தது. இப்போதும் அதை செய்யுங்கள்’ என்று வலியுறுத்தி இருக்கிறேன்.
இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் உலக விளையாட்டு அரங்கில் அதிகமானோர் பார்க்கக்கூடிய ஒரு போட்டி. தங்களுக்கு பிடித்தமான கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் போட்டியை காண இரு நாட்டு ரசிகர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். அதை தடுக்க கூடாது.” இவ்வாறு ஷகாரியார் கான் கூறினார்.