இந்த மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்லும் போது நியூயார்க்கில் மிகப்பெரிய அளவில் பேரணி ஒன்றை நடத்த படேல் ஜாதியினர் முடிவெடுத்துள்ளனர்.
குஜராத் அரசு இடஒதுக்கீட்டு விஷயத்தில் படேல்கள் கோரும் விஷயங்கள் இடஒதுக்கீட்டின் அடிப்படையையே கேலி செய்வது போலாகும் என்று கூறி அவர்களை மிகவும் பிற்போக்கு சாதியினராக அறிவிக்க இயலாது எனக் கூறிவிட்டது.
இந்நிலையில் அரசை ஆட்டம் கொள்ளவைக்க பல்வேறு போராட்ட ஐடியாக்களை முன்வைத்து வருகின்றனர் படேல்கள். பெரிய அளவில் வங்கிகளிலிருந்து பணத்தை எடுப்பது, சிறிய ஊர்கள் மற்றும் கிராமங்களில் பெண்கள் போராட்டத்தை தீவிரப் படுத்துவது போன்றவை அதில் அடக்கம்.
இதுபற்றி 65 வயது பிரஹலாதபாய் படேல் கூறும்போது, “தற்போதைய இட ஒதுக்கீட்டு முறையில் உள்ள அநீதிக்கு எதிராக போராடுகிறோம். எங்களது போராட்டத்தை ஆதரிக்க எனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.3 லட்சம் தொகையை எடுத்துள்ளேன், பிற பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் மற்ற சமுதாயத்தினர் அனுபவத்திடும் அதே பயன் எங்களுக்கும் கிடைக்க வேண்டும்.” என்றார். ஒரு சமூகத்தினர் தங்களது வங்கிக் கணக்கிலுள்ள பணத்தை எடுத்தாலே அரசு ஆட்டம் காணும் என்றால் அவர்கள் எவ்வளவு பிற்படுத்தப்பட்டவர்களாக இருக்கவேண்டும்? பாவம்.
போராட்ட தலைவர்களில் ஒருவராண வருண் படேல் கூறும்போது, “ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க நியூயார்க் செல்லும் போது, செப்டம்பர் 25-ம் தேதி ஐநா அருகே பெரிய பேரணி நடத்த அமெரிக்க அதிகாரிகளிடம் அனுமதி பெற்று விட்டோம். வெள்ளை டி-சர்ட் அணிந்து சுமார் 10,000 படேல்கள் பேரணியில் ஈடுபடுவர். அதேபோல் குஜராத்தில் போராட்டத்தின் போது நடந்த போலீஸ் அராஜகம் குறித்தும் கோஷம் எழுப்பவுள்ளோம்” என்றார்.
படேல்கள் பவரைக் காட்டுவது எல்லாம் பிரமாதம்தான். ஒபாமாவைச் சந்தித்து குஜராத் அரசிடம் பேசி இடஒதுக்கீடு வாங்கித் தரும்படி கேட்காமலிருந்தால் சரி.