இந்துத்துவ அமைப்புகள் இஸ்லாமியத்துக்கு எதிரான குரல்களை உயர்த்திய வண்ணம் இருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் இஸ்லாமிய அமைப்புக்கள் தங்களுக்குள்ளேயே கூட சகிப்புத் தன்மை இல்லாமலிருப்பது மேலும் பிரச்சனைகளை சிக்கலாக்கி வருகிறது.
சமீபத்தில் இரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் இயக்கத்தில் ‘முகம்மது: மெசஞ்சர் ஆஃப் காட்’ என்ற திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். அண்மையில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் இஸ்லாமிய மக்களின் மனதை புண்படுத்துவதாகக் கூறி, மும்பையைச் சேர்ந்த ராஸா அமைப்பு, இயக்குநர் மஜித் மஜிதிக்கும், இசையமைப்பாளர் ரஹ்மானுக்கும் தவிர படத்தில் வேலை செய்த சிலருக்கும் எதிராக ஃபத்வா விதித்தது.
இதற்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான், “மத நன்னம்பிக்கையில்தான் இசையமைத்தேன்” என்று பதில் அளித்திருந்தார். அதற்கு இஸ்லாமிய அழைப்பிடமிருந்து பதில் இன்னும் வரவில்லை. தங்களுக்கென்று தலைமயான ஒன்றுபட்ட அமைப்புக்கள் இல்லாமயால் ஆளாளுக்கு இயக்கம் உருவாக்கிக் கொண்டு இஷடத்துக்கு பத்வா செய்யும் இதுபோன்ற தவறுகள் நடக்கின்றன. முஸ்லீம் அமைப்புகள் தங்களின் ஒருங்கிணைவுக் குறைவை உணர்ந்தபாடாயில்லை. ஷியா மற்றும் சன்னி பிரிவினரிடையே அவ்வளவு வெறுப்புணர்வு வளர்ந்திருக்கிறது. பல இஸ்லாமிய நாடுகளில், ஈராக் உட்பட, ஷியா. சன்னி மதப்பிரிவினரிடையே இருக்கும் வேறுபாடே குண்டுகள் தாக்குதலில் இருதரப்பினரும் தொடர்ந்து பலியாக காரணமாக இருக்கிறது.
இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ‘தாய்மதத்துக்கு திரும்புவதற்கான நேரம் இதுவே’ அதாவது அவரது ‘கர்-வாப்ஸி’க்கு உகந்த நேரம் இதுவே என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. வி.எச்.பி. இணை பொதுச் செயலர் சுரேந்திர ஜெயின் கூறும்போது, “ரஹ்மானுக்கு எதிரான ஃபத்வா அறிவிப்பு துரதிர்ஷ்டவசமானது, இதைவிடவும் துரதிர்ஷ்டவசமானது அதில் உள்ள பழி தீர்ப்பு மொழி. அவர் அந்தப் படத்துக்கு இசை அமைத்திருப்பது மதம் தொடர்பானது அல்ல. எனவே, நான் ரஹ்மானிடம் அழைப்பு விடுவது என்னவெனில், அவர் தாய் மதத்துக்குத் திரும்ப வேண்டும், கர்-வாப்ஸி செய்ய வேண்டும். இந்து சமூகம் தனது புதல்வனின் வருகைக்காக காத்திருக்கிறது. நீட்டிய கைகளுடன் அவரை வரவேற்கிறோம் என்பதுடன் எவ்வளவு பத்வாக்கள் அவருக்கு எதிராக அறிவிக்கப்பட்டாலும் அவருக்கு எந்த வித தீங்கும் ஏற்படாது என்பதையும் உறுதி செய்கிறோம்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பத்வா வழங்கிய அமைப்பு மதம் சம்பந்தமாக இதுபோன்ற பிற்போக்குத்தனத்தினால் இஸ்லாமியருக்கு ஏற்படும் கெட்ட பெயர்களைப் பற்றி கவலைப்படுகிறதா என்பது தெரியவில்லை. எதற்கெடுத்தாலும் பத்வா என்றால் என்ன அர்த்தம். ஏன் இந்திய அளவில் முஸ்லீம் மத சம்பந்தமான ஒருங்கிணைந்த அமைப்புகள் இல்லை. இது போன்ற பிரச்சனைகளை முதலில் தங்கள் தளத்திற்குள் பேசிக்கொள்ள ஏன் ஒரு பொதுமேடை அவர்களிடையே இல்லை?