டெல்லியில் இருக்கும் கேரள அரசின் கெஸ்ட் கேரள பவனில், பசுமாட்டிறைச்சி (cow meat) விற்கப்படுவதாக இந்து சேனா என்கிற அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா கூறிய புகாரையடுத்து டெல்லி போலீஸ் உள்ளே புகுந்து சோதனை போட அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் கேரள எம்.பி.க்கள். கேரள முதல்வர் உம்மன் சாண்டி மத்திய அரசின் இந்த அத்துமீறிய செயலை கண்டித்து எச்சரிக்கை விடுத்தார்.
அங்கு எருமை மாட்டிறைச்சி (buffalo meat) தான் விற்கப்படுகிறது என்று காவல் துறையும் ஒத்துக் கொண்டது. ஆனாலும் பதிலடியாக கேரள அரசு, இன்று புதன்கிழமை முதல் மீண்டும் மாட்டிறைச்சி கேரள பவனில் விற்கப்படும் என்றும் அறிவித்தது.
இந்த நிலையில், இன்று விற்கப்பட்ட எருமை மாட்டிறைச்சி உணவு வகைகள் வெறும் 45 நிமிடங்களுக்குள் விற்றுத் தீர்ந்தன. மீட் ஃப்ரை மற்றும் மீட் கறி என்று அடைப்புக்குறிக்குள் எருமை என்று எழுதப்பட்ட மெனு போர்டில் ‘சோல்ட் அவுட்’ என்றும் எழுதப்பட்டது.
ஆர்டர் செய்து கிடைக்காமல் போனவர்கள் ஏமாற்றமடைந்ததைத் தொடர்ந்து உடனே அவர்களுக்கு மாற்று உணவு தயாரித்து வழங்கப்பட்டது.
கேரள இல்லத்தில் மாட்டிறைச்சி விற்கப்படுவதாக வேண்டுமென்றே தவறாகப் புகார் அளித்ததற்காக இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தாவை போலீஸ் இன்று கைது செய்தது. மாட்டிறைச்சியை வைத்து வன்முறையைக் கிளறி வரும் இந்துத்துவா கட்சிகளின் அரசியலுக்கு கேரள மக்கள் மட்டுமே சரியான எதிர்வினையைக் கொடுத்துள்ளனர்.