‘சிவாஜி’, ‘எந்திரன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘எந்திரன் 2’ படத்திற்காக ரஜினி, ஷங்கர் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை மிகப்பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கவுள்ளது.
இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் முடிவாகி விட்டாலும் படத்தில் நடிக்கும் நடிக, நடிகைகள் இதுவரை முடிவாகவில்லை. ரஜினிக்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோன், சோனம் கபூர், எமி ஜாக்சன் என பலரது பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ஷங்கர்… “இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். நாங்கள் விரைவில் அறிவிப்போம்” என்றார். அதுபோல வில்லனாக விக்ரம் நடிக்க இருக்கிறார் என்ற செய்திக்கு விக்ரம் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக நடிக்க பிரபல ஹாலிவுட் ஹீரோ அர்னால்டிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் இப்படத்தில் நடிக்க அவர் மூன்று கன்டிஷன்கள் போட்டுள்ளாராம். அவை… தனக்கு ரூ. 100 கோடி சம்பளம் வேண்டும். குறித்த நேரத்தில் படப்பிடிப்பை முடிக்க வேண்டும். ஒரு மாதம் மட்டுமே கால்ஷீட் தர முடியும் ஆகியவைதான்.
முதல் இரண்டு கண்டிஷன்கள் ஷங்கருக்கு ஓகேதானாம். ஆனால் கால்ஷீட்டை குறைந்தது 50 நாட்களாவது நீடிக்க வேண்டும் என்பதுதானாம். எனவே வெகுவிரைவில் அர்னால்டை சந்திக்க ஷங்கர் செல்லக்கூடும் எனத் தெரிகிறது.