பொதுநிகழ்ச்சியில் நீதிபதிகளை அவதூறாகப் பேசியதாக, கவிஞர் வைரமுத்து மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
சென்னையில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி, மறைந்த முன்னாள் நீதியரசர் கைலாசம் நினைவு அஞ்சல் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து, நீதிபதிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், ஓய்வுபெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பாக நீதிபதிகள் வழிதவறிச் சென்று விடுவதாக வைரமுத்து பேசியதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
நீதித்துறையினர் முன்னிலையிலேயே, நீதிபதிகளை அவதூறாகப் பேசிய வைரமுத்து மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யுமாறு, தானாக முன்வந்து உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று முகுந்த் சந்த் போத்ரா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் அக்னிஹோத்ரி, வேணுகோபால் அமர்வு, மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்ததுடன், வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
நீதிபதிகள் பற்றி கருத்துச் சொல்வது குற்றமுடையது என்றால் நீதிபதிகள் பொதுமனிதர்கள் அல்லர். தனிச் சிறப்பான மனிதர்கள் என்றாகிறது. அப்படியென்றால் அவர்கள் ஏன் பொதுவெளியில் அந்தஸ்து உள்ளவர்களாக வலம் வரவேண்டும்? அவர்கள் சமூகத்தின் எல்லா வித பொதுமக்கள் தொடர்புகளிலிருந்தும் விலகியல்லவா இருக்கவேண்டும் ? நீதிபதிகள் என்றால் கடவுளுக்குச் சமானம் என்கிற கருத்தாக்கம் தவறானது. நீதிபதி நீதிமன்றத்தில் நீதியை வழங்கும்போது மட்டுமே அவர் நீதிபதி. கோட்டை கழற்றிவிட்டு வெளியே வந்தால் அவரும் சாதாரண மனிதரே. கோர்ட்டுக்கு வெளியேயும் அவர்கள் நீதிபதிகளாகவே நடத்தப்படவேண்டும் என்பது தான் சரியான பார்வையாக இருக்கமுடியும்.