தயாரிப்பாளர்களின் ஈகோவால் `கத்துக்குட்டி` பட வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும் நிலையில் அப்பட இயக்குநர் சரவணன் எழுதி வெளியிட்டிருக்கும் கண்ணீர்ப்பதிவு;

“சொட்டுக் கண்ணீர் விட்றாதே… ரொம்ப சங்கடமா இருந்தா, புள்ளைங்களை அழைச்சுக்கிட்டு ஊருக்கு வந்திடு…” – அம்மா.

“காலையில நியூஸ் பார்த்து துடிச்சுப் போயிட்டேன் தம்பி. இந்த நேரத்துலதான் நீங்க இன்னமும் தைரியமா நிற்கணும்” – வைகோ.

“என்கிட்ட பணம் இல்ல. சென்னை வீட்டோட பத்திரத்தை கொடுத்து அனுப்புறேன். நீ அடகு வைச்சாலும் சரி, வித்தாலும் சரி…” – என் படத்தில் அம்மாவாக நடித்த துளசி அக்கா.

“இதுவும் கடந்து போகும்.” – அமீர் அண்ணன்.

“என்ன சொல்றதுன்னு தெரியலை. வந்திருந்தா, நிச்சயம் இந்நேரம் ஜெயிச்சிருப்ப…” – சசிகுமார் சார்.
“நானே தோத்த மாதிரி இருக்குண்ணே…” – சூரி அண்ணன்

“விடுங்க சஞ்சய் அப்பா… இவ்வளவு பேர் எதிர்க்கிறப்பதான் நீங்க எவ்வளவு பெரிய ஆள்னு எனக்கே தெரியுது” – கலா.

இன்னும் இன்னுமாய் கண்ணீர் துடைக்கின்றன பலரது விரல்களும். யாருக்கும் துரோகம் நினைக்காத – எதற்கும் ஆசைப்படாத இரு தகுதிகளே மனநிலையை ஆசுவாசமாக்கி வைத்திருக்கின்றன.
என்னதான் பிரமாண்டமான ஆட்களோடு பழகினாலும், தள்ளுவண்டி வியாபாரியின் இழுபறி வாழ்க்கையாகத்தான் இருந்திருக்கிறேன் எப்போதும். ஆனாலும், காரணமே இல்லாமல் சிலர் கண்ணை உறுத்துகிற விநோத வரம் எனக்கு.

எதிர்பாராத அடி என்னை வீழ்த்தி இருப்பது உண்மைதான். ஆனாலும், என் கண்ணீரின் அடர்த்தியில் துளிர்த்திருக்கும் துரோகம், என் வைராக்கியத்துக்கு முன்னால் வாழ்ந்துவிட முடியாது.
வென்றவனைத்தான் தோற்கடிக்க முடியும். தோற்றே கிடப்பவனை எப்படி தோற்கடிக்க முடியும்?
பூக்களுக்காகவே அவரைச் செடி வளர்ப்பவனை ‘காரியக்காரன்’ எனக் கருதினால், அவர்களின் பார்வையை நினைத்துப் பரிதாபப்பட முடியுமே தவிர, வளர்ப்பை எண்ணி வருத்தப்பட முடியாது.
பனிக்குடம் உடைந்த பிறகும் நீளும் பிரசவ அவஸ்தையைப் போல், ‘கத்துக்குட்டி’யின் போராட்டம் தின்று தீர்க்கிறது உயிரை.

இறுதிக்கட்ட போராட்டத்தில் இருக்கிறேன் இப்போது. நம்பிக்கையாக ஏதும் நடந்தால் பகிர்ந்து கொள்கிறேன்.
– இரா. சரவணன்

Related Images: